என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? -10

அரசியலுக்கு வருபவர்கள் பெரும்பாலானவர்கள் காரியக்காரர்களாக இருப்பார்கள் என்பார்கள். எப்படியோ கச்சிதமாக தமது காரியங்களை முடித்து விட்டு, என்ன வழியிலாவது முடித்து விட்டு, மக்களிற்கு முன்பாக நேர்மையானவர்களாக காண்பித்துக் கொள்வார்கள்.

என்ன செய்தார்கள் நமது பிரதிநிதிகள் பகுதியின் இந்த பாக பிரதிநிதியை பற்றி குறிப்பிடும் முன்னர் ஏனிந்த பீடிகை?- அதை படிப்பவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த பாகத்தில் அலசப்படும் உறுப்பினர் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர் கேசவன் சயந்தன்.

சயந்தன் இன்று தமிழரசுக்கட்சியின் உறுப்பினராக அடையாளப்படுத்தப்பட்டு, தென்மராட்சி முக்கியஸ்தராக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்தது தமிழரசுக்கட்சியின் ஊடாக அல்ல. அதை தெரிந்துகொள்ள சயந்தனின் பிளாஷ்பேக் தெரிய வேண்டும்.

சட்டத்துறைக்குள் நுழைந்தபோது, அப்பாத்துரை விநாயமூர்த்தியின் கீழ் சயந்தன் பயற்சி பெற்றவர். அதனால் இருவருக்குமிடையில் ஒரு நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

2010 நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பில் உடைவு ஏற்பட்டது. தமிழ் காங்கிரஸ் வெளியேறியது. ஆனால் விநாயகமூர்த்தி வெளியேறவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே தங்கி விட்டார்.

2013 மாகாணசபை தேர்தலின்போது, கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிற்கு ஆசனம் ஒதுக்கப்பட்ட சமயத்தில், விநாயகமூர்த்தியும் தன்னை ஒரு தரப்பாக கருதி, தமது தரப்பிலிருந்து ஒரேயொரு வேட்பாளரை பரிந்துரைத்தார்- அது, தனது ஜூனியரான கேசவன் சயந்தன்!

எனினும், தமிழரசுக்கட்சி அந்த பரிந்துரையை விரும்பவில்லை. தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலனிற்கு சந்தர்ப்பத்தை வழங்க விரும்பினார்கள். ஆனால் விநாயகமூர்த்தி விட்டபாடில்லை. அவரது வலியுறுத்தல்கள் எடுபடாமல் போன சந்தர்ப்பத்தில், இறைஞ்சிக்கூட கேட்டார்.

இந்த இழுபறியால் வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்திலன்று காலைவரை இந்த இழுபறி நீடித்தது. அப்போது வரை அருந்தவபாலன்தான் சாவகச்சேரியில் லிஸ்றில் இருந்தார். வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளன்று, காலையில், விநாயகமூர்த்தியின் வலியுறுத்தலால்- இறுதிநேரத்தில் உள்ளீர்க்கப்பட்டார் கே.சயந்தன்.

சயந்தன் மாகாணசபை தேர்தல் வேட்பாளராக உள்நுழைந்தது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருந்த தமிழ் காங்கிரசின் அதிருப்தி அணி சார்பிலேயே. வேட்புமனுவில் கையெழுத்திட்டார். வேட்புமனுவில் கையெழுத்திட்ட பின்னர், அவரவர் கட்சி சார்ந்த அணிகளுடன் எல்லோரும் புறப்பட்டனர். சயந்தன் தமிழரசுக்கட்சி அணியுடன் புறப்பட்டார்!!

Image result for கேசவன் சயந்தன்வேட்புமனுவில் கையெழுத்திட்ட மிகக்குறுகிய காலத்திலேயே தென்மராட்சியில் ஒரு அலுவலகத்தை சயந்தன் திறந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம். திறப்புவிழா பனரில் சம்பந்தன், மாவையின் படங்கள் எல்லாம் இருந்தன. விநாயகமூர்த்தியின் படம் எதுவும் கிடையாது. நிகழ்விலும் அவர் முன்னிலைப்படுத்தவில்லை. நிகழ்வின் இடையில் பார்வையாளர்கள் வரிசையின் பின்பகுதியில் தனக்கு தெரிந்த ஒருவருடன் போய் உட்கார்ந்து விட்டார் விநாயகமூர்த்தி. அன்றைய நிகழ்வு அவருக்கு உவப்பாக இருக்கவில்லை. தனது அதிருப்தியை பக்கத்திலிருந்தவரிடம் கூறிக்கொண்டிருந்தவர் திடீரென கண்ணீர் சிந்தி அழுதார். இந்த சம்பவத்தை முதன்முறையாக தமிழ்பக்கத்தில் பதிவு செய்கிறோம்.

2013 காலப்பகுதியில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பில், தமிழரசுக்கட்சியில் அணிகள் உருவாகிய சமயம். அதில் எது வலுவானது என்பதை கவனித்து, அதில் தன்னை இணைத்து விட்டார் சயந்தன். மாகாணசபையின் மத்திய காலத்தில் இருந்து அவர் சுமந்திரன் அணியின் முக்கியஸ்தராகி விட்டார்.

அதன்பின் குறுகிய காலத்திலேயே அந்த அணியின் முக்கியஸ்தராகி விட்டார். தனது அணியை சேர்ந்தவர்களை கட்சிக்குள் சுமந்திரன் முன்னிலைப்படுத்த, இன்று தமிழரசுக்கட்சிக்குள் கடுமையான அதிருப்திகள் எழுந்துள்ளன.

தமிழர்களின் அரசியல் வரலாற்றில் அறப்படித்த பல்லிகள் எல்லாம்- ஒன்றுகூட மிச்சமில்லாமல்- கூழ்ப்பானைக்குள்தான் விழுந்ததுதான் வரலாறு. சட்டத்தரணி சயந்தனின் அரசியல் செயற்பாடுகளிற்கு இதைவிட வேறு உதாரணம் இல்லை.

அவரது சட்ட அறிவையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் அதிகமாக முதலமைச்சருக்கு எதிராக செயற்படவே பாவித்துக் கொண்டிருக்கிறார். அரசியலில் வேறு எதுவுமே தனது பணி கிடையாது என்பதை போல இயங்கிக் கொண்டிருக்கிறார். அண்மைக் காலத்தில் வடமாகாணசபையில் நடந்த பெரிய குழப்பங்கள் அனைத்தின் மூளையாகவும் அவர்தான் இருந்தார். முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை திட்டத்தின் மூளைகள் “வேறிடத்தில்“ இருந்தாலும், அதை களத்தில் செயற்படுத்தும் மையப்புள்ளியாக அவர்தான் இருந்தார். டெனீஸ்வரன் விவகாரத்தை வைத்து 16ம் திகதிய சிறப்பு அமர்விற்கு கையொப்பம் வாங்கி அமர்வை கூட்டி, சர்ச்சையை ஏற்படுத்தியதன் பின்னணியிலும் தீவிரமாக செயற்பட்டார். தமிழரசுக்கட்சியில் இருந்து முதலமைச்சர் ஒதுங்கிக் கொண்டபின் மாகாணசபையை முதலமைச்சருக்கு எதிரான யுத்தகளமாக மாற்றிய பிரதான போர்வீரன் அவர். மொத்தத்தில் மாகாணசபையின் சீர்குலைவிற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டிய தனிநபர்களில் அவரும் ஒருவர்.

எனினும், அப்படியான அரசியல் முதிர்ச்சியெதுவும் அவரிடமிருந்து இதுவரை வெளிப்பட்டிருக்கவில்லை. “போர்வீரராகவே“ கட்டளைகளை விசுவாசத்துடன் நிறைவேற்றும் ஒருவராகவே தனது அரசியல் செயற்பாட்டை வடிவமைத்து வருகிறார்.

சயந்தனின் சமகால அரசியல் வரலாறு முழுவதும் மோதல்களாலும், அரசியல் பிளவுகளாலும் நிறைந்தது. மாகாணசபைக்குள் இது நிலைமையென்றால், அவரது சொந்த தொகுதியிலும் இதுதான் நிலைமை. அங்கு அருந்தவபாலனின் செல்வாக்கை வீழ்த்தி, தன்னை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கிறார். இந்த போராட்டங்களில் அவர் தமிழ் அரசியலுக்கு தேவையான அரசியல்வாதியாக தன்னை உருமாற்றிக் கொள்ளவில்லை.

மாகாணசபைக்குள் அதிகம் பேசும் உறுப்பினர்களில் முதன்மையானவர். ஆனால் அவ குத்தல், குசும்பு வகை பேச்சுக்கள்தான். இரண்டு விதமான அரசியல் செயற்பாட்டாளர்கள் தமிழர்களிற்கு தேவை. உள்ளக அபிவிருத்தியை திட்டமிட்டு செயற்படுத்துபவர்கள், தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பவர்கள் என்ற இரண்டு வகையானவர்கள்தான் தமிழ் அரசியலிற்கு தேவை. இந்த இரண்டிற்கும் உள்ளடங்காமல் “விடலைத்தனமாக அரசியலை“ சயந்தன் முன்னெடுக்கிறார்.

அவரது அரசியலை கவனமாக பார்த்தால்- அர்ப்பணிப்பான அரசியல் செயற்பாட்டாளராக இவர் இல்லையென்பது தெரியும். “ஓப்பினாக பேசும்“ சர்ச்சைகள் எல்லாம் இந்த விடலைத்தனமான அரசியலின் விளைவுகள்.

இளைஞர்களை கட்சிக்குள் உள்ளீர்க்க வேண்டும்தான். ஆனால் கட்சிக்குள் உள்ளீர்க்கப்படும் இளைஞர்கள், கட்சியிலுள்ள மூத்த செயற்பாட்டு பாரம்பரியம் உள்ளவர்களை அடியொட்டி வளரும் விதமான கட்டமைப்பு இருக்க வேண்டும். அப்படியென்றால்தான் அவர்கள் அர்ப்பணிப்புள்ள அடுத்தலைமுறை அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சயந்தன் உள்ளிட்ட தமிழரசுக்கட்சியின் இளைய உறுப்பினர்கள் சிலர் விடயத்தில் அது நடக்கவில்லை. “சில செல்வாக்கால்“ அவர்களே மூத்த தலைவர்களையும் கட்டுப்படுத்துபவர்களாக மாற்றப்பட்டதே, எல்லா குழப்பங்களிற்கும் காரணம்.

சயந்தன் முன்னெடுக்கும் அரசியல் சில தனிநபர்களிற்கு நன்மையளிக்கலாம். நீண்டகால அடிப்படையில் கட்சிக்கோ, இனத்திற்கோ ஆரோக்கியமானதல்ல.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here