காற்று மாசுபாட்டால் சென்னையில் 4,800 பேர் பலி: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

காற்று மாசுபாடு காரணமாக, நுரையீரல், சுவாகக்கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 800 பேர் பலியாகியுள்ளனர் என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம், டெல்லியில் கடந்த 2016-ம் ஆண்டில் 15 ஆயிரம் பேர் சுவாசக் கோளாறு உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர். காற்று மாசுபாட்டால், அதிகமான உயிரிழப்புகளைச் சந்திக்கும் நகரங்களில் உலக அளவில் 3-வது இடத்தில் டெல்லி இருந்துவருகிறது.

மனித உயிர்களுக்கு ஆபத்து விளைக்கும் வகையில் காற்றில் மாசு பிஎம் 2.5 அளவு அதிகரிக்கும் போது, நுரையீரல், சுவாசக்கோளாறு உள்ளவர்கள் அதிகமான அளவில்  உயிரிழக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்தவகையில், கடந்த 2016-ம் ஆண்டில் ஷாங்காய் நகரில் 17,600 பேரும், பெய்ஜிங்கில் 18,200 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காற்றில் மாசின் அளவு பிஎம் 2.5 அதிகரிக்கும் போது, மனிதர்களுக்கு இதயநோய், சுவாச நோய்கள், புற்றுநோய், குறைந்த வயதில் திடீரென இறப்பைத் தழுவுதல் போன்றவை ஏற்படும். அந்த வகையில் மேற்கண்ட நகரங்களில் உயிரிழப்புகள் நடந்துள்ளன.

இது குறித்து மத்திய அரசின் அறிவியல் மற்றும் சூழல் துறை இயக்குநர் அனுமிதா ராய்சவுத்ரி கூறுகையில், ”டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காற்று மாசு முக்கிய அச்சுறுத்தலாக நாள்தோறும் இருந்து வருகிறது. இதை வெற்றிகரமாகக் கடந்து வரக் கடுமையான விதிகளும், தரக்கட்டுப்பாடுகளும் அவசியம். அவை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற மேலாண்மை செய்வதும் அவசியம்” எனத் தெரிவித்தார்.

அதிலும் பனிக்காலத்தில் காற்றில் மாசு அதிகரிக்கும் போது, நுரையீரல், இதயநோய்,சுவாசநோய் உள்ளவர்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாவார்கள். கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் சீனா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 13 முக்கிய நகரங்கள் காற்று மாசுபாட்டின் ஆபத்தில் சிக்கி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதில் குறிப்பாக கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் டெல்லியில் காற்று மாசு காரணமாக, ஏற்படும் சுவாச நோய், நுரையீரல் நோய், புற்றுநோய் போன்றவற்றால், 14 ஆயிரத்து 800 பேர் இறந்துள்ளனர். மும்பையில் 10 ஆயிரத்து 500 பேரும், கொல்கத்தாவில் 7 ஆயிரத்து 300 பேரும், சென்னையில் 4 ஆயிரத்து 800 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதில் சீனா மட்டுமே காற்றில் மாசின் அளவைக் கட்டுப்படுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளும், கொள்கை முடிவுகளும் எடுத்துச் செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவில் அதுபோன்ற ஸ்திரமான கொள்கைகள் இல்லை. இனி வரும் காலங்களில் காற்று மாசைக் குறைக்கும்வகையில், சிறந்த கொள்கைகளும், செயல்படுத்தும் முறைகளும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் அவசியமாகும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here