சண்டிமல், ஹத்துருசிங்க, குருசின்ஹாவிற்கு தடை: ஐசிசி அதிரடி தண்டனை!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 2 மணி நேரம் போட்டியில் பங்கேற்காமல் புறக்கணித்தமைக்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றத்துக்கு அணித் தலைவர் சண்டிமல், இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்கா குருசின்ஹா ஆகியோருக்கு 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச கிரிக்கெட் சபையால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

செயின்ட்லூசியாவில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியினர் பந்தின் நிலையை மாற்ற முயன்றதாக நடுவர்கள் அலீம் தர், இயான் கெளட் ஆகியோர் முறையீடு செய்தனர்.

இந்த முறைப்பாட்டுக்கு எதிராக 2 மணி நேரம் போட்டியில் பங்கேற்காமல் சண்டிமல் தலைமையில் இலங்கை அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததால் இலங்கை வீரர்கள் மீண்டும் ஆடத்தொடங்கினர். கடைசியில் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது.

ஐசிசி நடத்தை விதிகள் 2.2.9. மீறியதாக சண்டிமால் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தைச் சேதப்படுத்தியதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித், துணை தலைவர் வோர்னர், வீரர் பான்கிராப்ட் ஆகியோர் மீது தடை விதிக்கப்பட்ட நிலையில், சண்டிமல் விவகாரம் பரவலான கவனிப்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சண்டிமலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்டில் சண்டிமல் விளையாடவில்லை.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 2 மணி நேரம் போட்டியில் பங்கேற்காமல் இருந்ததும் சிக்கலை வரவழைத்தது.

இதற்கு உடந்தையாக இருந்ததாக அணித்தலைவர் சண்டிமல், இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்கா குருசின்ஹா ஆகியோர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது.

கிரிக்கெட் கண்ணியத்தைக் குலைத்த இந்த இரண்டாவது குற்றச்சாட்டும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டதால் சண்டிமல், பயிற்சியாளர், முகாமையாளர் ஆகிய மூவராலும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரு டெஸ்ட் ஆட்டங்களில் மட்டுமல்லாமல் 4 ஒருநாள் ஆட்டங்களிலும் பங்கேற்க முடியாது ஐசிசி தடை விதித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here