ஆந்த்ரே ரஸல் சிக்சர் மழையில் சென்னையைப் பிளந்து கட்டினார்

சென்னையில் சேப்பாக்கதில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆந்த்ரே ரஸலின் காட்டடி சிக்சர் மழையில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

ஆந்த்ரே ரஸல் 1 பவுண்டரி 11 பயங்கர சிக்சர்களுடன் 36 பந்துகளில் 88 ரன்கள் அடித்து சென்னை ரசிகர்களையும் கேப்டன் தோனியையும் அதிர வைத்தார், காரணம் டாஸ் வென்று ரன் மழை பிட்சில் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தது தவறோ என்று தோனி வருந்தும் அளவுக்கு ஆந்த்ரே ரஸல் அதிரடி அமைந்தது.

உண்மையில் 10 ஓவர்களில் 89/5 என்று ரன் விகிதத்தில் நன்றாக இருந்தாலும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து கொல்கத்தா கவலையில்தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு தினேஷ் கார்த்திக் (26), ரஸலுடன் இணைந்து 7.4 ஓவர்களில் அதாவது 46 பந்துகளில் 76 ரன்களை விளாசித் தள்ள ஆட்டம் மாறிப்போனது.

முதல் போட்டியில் 25 ரன்களையே விட்டுக் கொடுத்த டிவைன் பிராவோ இன்று 3 ஓவர்களில் 50 ரன்கள் விளாசப்பட்டார், அதிலும் 7 சிக்சர்களை இவரே கொடுத்தார், இதில் ஒரு சிக்ஸ் மட்டுமே தினேஷ் கார்த்திக் அடித்தது. மற்ற 6 சிக்சர்களும் ரஸல் அடித்தது. ஒரு பந்து மைதானத்தை விட்டு தொலைந்து புதுப்பந்து வரவழைக்கப்பட்டது. 17வது ஓவரில் அடிக்கப்பட்ட 3 சிக்சர்களில் ஒன்றுதான் சேப்பாக்கத்தைத் தாண்டி வெளியில் போய் விழுந்தது.

ரஸலின் அலட்சியமான காட்டடி, ஓர் வர்ணனை:

13 ஓவர்கள் முடிவில் கேகேஆர் 108/5, ஆந்த்ரே ரஸல் 9 பந்துகளில் 9 ரன்கள்தான் எடுத்திருந்தார். 14வது பிராவோ ஓவரின் 5வது பந்து லாங் ஆனுக்கு மேல் மிகப்பெரிய சிக்ஸ் ஆனது.

பிறகு 16வது ஓவரில் தாக்கூர் வீச லெந்த் மிஸ் ஆக லாங் ஆனில் சிக்ஸ். அடுத்த பந்து மீண்டும் லெந்த் மிஸ், புல்டாஸ் மீண்டும் சிக்ஸ்.

17வது ஓவரை பிராவோ வீச வர 2வது பந்து நேராக 105மீ தூர சிக்ஸ். மீண்டும் ஒரு தாழ்வான புல்டாஸ் மீண்டும் லாங் ஆனில் அரக்க சிக்ஸ். கடைசி பந்து ஒரு மாறுதலுக்காக தினேஷ் கார்த்திக் வேகம் குறைந்த லெந்த் பந்தை பார்த்து நின்று ஒரே தூக்குத் தூக்கினார் சிக்ஸ். வாட்சன் வந்தார் எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸ், பீல்டர் முன்னால் வந்ததால் கணிக்கத் தவறினார். அடுத்த வாட்சன் ஓவரில் தினேஷ் கார்த்திக் 26 ரன்களில் யார்க்கரில் எல்.பி.ஆனார்.

19வது ஓவரை பிராவோ வீச முதல் பந்து அருமையான பிளிக்கில் ரஸல் சிக்ஸ், அடுத்த பந்து மீண்டும் ஸ்லோ பந்து சிக்ஸ் இதுவும் மைதானத்துக்கு வெளியே சென்றிருக்க வேண்டியது. அடுத்த பந்து ஷார்ட் பிட்ச், புல்ஷாட் சிக்ஸ்.

கடைசி ஓவரை தாக்கூர் வீச முதல் பந்து டீப் எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸ். பிறகு சிங்கிள் எடுக்க டாம் கரன் ஸ்ட்ரைக்குக்கு வந்து படுத்தினார் அவருக்கு மாட்டவில்லை கடைசியில் 5வது பந்து தோனியிடம் செல்வதற்குள் ஒரு ரன் ஓட, கடைசி பந்து ஆஃப் திசையில் வீச காலை மடக்கிக் கொண்டு லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார் ரஸல். 26 பந்துகளில் 53 என்று இருந்த ரஸல் அடுத்த 10 பந்துகளில் 35 ரன்களை விளாசி 36 பந்துகளில் 1 பவுண்டரி 11 சிக்சருடன் 88 நாட் அவுட், கேகேஆர் 202 ரன்கள் குவித்தது. கடைசி 14 பந்துகளில் 37 ரன்கள். கடைசி 10 ஓவர்களில் 113 ரன்கள்.

தோனியின் கேப்டன்சியில் பெரும் தவறு இருந்தது. ஹர்பஜன் சிங் 2 ஓவர்கள் 11 ரன்கள் ஒரு விக்கெட், ஆனால் ரஸல் அந்த சாத்து சாத்தும்போது ஒரு ஓவர் கொடுத்துப் பார்த்திருக்கலாம். தீபக் சாஹர் முதல் ஓவரில் 18 ரன்கள் கொடுத்து விட்டார் என்பதற்காக அவருக்குக் கடைசி வரை கொடுக்கவேயில்லை. ஜடேஜாவும் 2 ஓவர்களில் 19 ரன்கள் 1 விக்கெட்டைக் கைப்பற்றினாலும் அவருக்கும் கொடுத்து முயற்சிக்கவில்லை, அடி வாங்க அடி வாங்க பிராவோவுக்குக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

மொத்தத்தில் 89/5 என்ற நிலையில் கிடுக்கிப் பிடி போடுவதிலிருந்து தவறவிட்டார் தோனி. களவியூகமும் கேள்விக்குறியானதே. எப்போதுமே எதிரணி வீரர்கள் அடித்து நொறுக்கும் போது கேப்டன் தோனி வெறும் பார்வையாளராகி விடுவதைத்தான் அவரது கேப்டன்சி வரலாற்றில் நாம் பார்த்து வருகிறோம்.

முன்னதாக…

2 சிக்சர்களுக்குப் பிறகு சுனில் நரைனை அனுப்பினார் ஹர்பஜன்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணியை பேட் செய்ய அழைத்தார்.

சென்னை அணியில் முரளி விஜய் இல்லை, சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மார்க் உட் இல்லை அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் வந்துள்ளார்.

முதல் ஓவரை தீபக் சாஹர் வீச முதல் பந்தையே பளார் என்று ஆஃப் திசையில் அறைந்தார் கிறிஸ் லின், நான்குக்குப் பறந்தது.

பிறகு கடைசி 2 பந்துகளில் சுனில் நரைன் லெக் திசையில் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களைத் தூக்க முதல் ஓவரிலேயே 18 ரன்கள்! அடுத்த ஓவரை ஹர்பஜன் சிங்கிடம் தோனி கொடுக்க சுனில் நரைனுக்கு கொஞ்சம் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீச அதை ஒரே சுற்று சுற்றினார் நரைன் பந்து சரியாகச் சிக்காமல் கொடியேற்றினார் ரெய்னா கேட்சைப் பிடித்தார்.

சற்று முன் கிறிஸ் லின் 22 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் பவுல்டு ஆகி வெளியேறியுள்ளார். உத்தப்பா 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். ராணா இறங்கியுள்ளார், கொல்கத்தா அணி 5.2 ஓவர்களிலேயே 51/2 என்று நல்ல தொடக்கம் கண்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here