நாளை மட்டக்களப்பில் சதோச நிறுவனங்கள் காலை 7 மணிக்கே திறக்கும்!

கொரோனா தடுப்பு செயலணியின் தற்போதைய நிலைமை தொடர்பான விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று (25) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவியுமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நிலையில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும் அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தெடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களான பொதுச்சந்தைகள், சுப்பர் மார்கட், பஸ் நிலையங்கள், வங்கிகள் போன்ற இடங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்திற்கு முன்பும், பின்பும் கிருமித் தொற்று நீக்கம் செய்ய பிராந்திய சுகாதாரப் பணிமனை, மாநகர சபை நடவடிக்கை எடுத்தல். அத்துடன் மக்கள் கூடும் இடங்களில் சனநெரிசலை கட்டுப்படுத்தி பரிந்துரைக்கப்பட்ட இடவெளியினைப் பேணுவதற்கு ஏற்றவகையில் பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளல்.

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் உணவு மற்றும் அத்தியவசிப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மாத்திரமே திறக்கப்படவேண்டும் என்பதுடன் புடவை கடைகள், ஹாட்வெயார்கள், நகைக்கடைகள் ஏனைய அத்தியவசியப் பொருட்கள் அல்லாத கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்க வேண்டும். ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியிலும் மருந்து விற்பனை நிலையங்கள் திறந்திருக்கலாம் என்பதுடன் அவசியமான மருந்துகளைக் கொள்வனவு செய்ய வரும் பொதுமக்கள் வைத்தியர் வழங்கிய மருந்துச்சீட்டு அல்லது கிளினிக் கொப்பி அல்லது வழக்கமாக பயன்படுத்தும் மருந்துகளின் அட்டை அல்லது மாதிரிகளைக் காட்டி தேவையான மருந்துப் பொருட்களைப் பெற்றுச் செல்லமுடியும்.

அத்தியவசியப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக கொழும்பு போன்ற இடங்களுக்குச் செல்லும் வாகன சாரதிகள், வேலையாட்கள் போன்றோர் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்று இல்லாமல் பாதுகாப்பான முறையினைப் பின்பற்ற வேண்டும் எனவும் இதற்கான பாஸ் பொலிசாரினால் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்துக்களில் அரச, தனியார் பஸ்வண்டிகளில் பொருத்தமான இடைவெளிகளைப் பேணி 20 பயணிகள் மாத்திரம் பயணிக்கக்கூடியதாக வசதி செய்யப்பட வேண்டும் எனவும், இது தொடர்பாக போக்குவரத்துப் பிரிவும் பொலிசாரும் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மக்கள் அத்தியவசியப் பொருட்களை கொள்வனவு செய்யும்போது கட்டுப்பாட்டு விலையிலேயே பொருட்களை வர்த்தகர்கள் விற்பனை செய்யவேண்டும் எனவும் அவற்றைக் கண்காணிக்க விலைக் கட்டுப்பாட்டு உத்தியேகத்தர்கள் செயற்படுவர் என்பதுடன், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு கல்லியங்காடு சதோச நிறுவனங்கள் நாளை காலை 7 மணிமுதல் திறந்திருக்கும் என்பதுடன் 500 ரூபாய், 1000 ரூபாய் பெறுமதியான உணவு மற்றும் அத்தியவசிய பாவனைப் பொருட்கள் அடங்கிய பொதிகளே இந்த சதேச நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் தினசரி கூலி தொழிலில் ஈடுபட்டுள்ள வறிய மக்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள், நலன்விரும்பிகள் தமது நன்கொடைகளை வழங்கலாம் எனவும், பொருட்களாக மாவட்ட செயலகத்திற்கு வழங்குமிடத்து அவற்றை பிரதேச செயலகங்கள் வாயிலாக தேவையுடையோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்பதுடன் தூர இடங்கள், வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் அல்லாமல் நிதி உதவி வழங்குபவர்களின் உதவிகளையும் பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காக மாவட்ட செயலகத்தின் 10 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு நிதி உதவி வழங்குபவர்கள் இலங்கை வங்கி மட்டக்களப்பு நகர் கிளையின் 2719857 இலக்க மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கம் என்ற பெயரில் வங்கிக் கணக்கிற்கு நிதி உதவிகளை வழங்கலாம் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here