தமிழகத்தில் 144 தடை: முடங்கியது போக்குவரத்து

தமிழகத்தில் 144 தடை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி பொதுஇடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க தமிழக அரசு தொடா்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளைப் போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை அறிவித்தாா்.

இந்த உத்தரவின்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, தொற்று நோய்கள் சட்டம் பிரிவு இரண்டின் படி மாவட்ட எல்லைகளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டது.

மேலும், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொதுபோக்குவரத்து, தனியாா் போக்குவரத்து, காா், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. அத்தியாவசிய பொருள்களான உணவுப் பொருள்கள், மருந்து பொருள்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் எந்தத் தடையும் இல்லை. அத்தியாவசியப் பொருள்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.

மேலும், அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிா்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடா்ந்து இயங்கும்.

விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கானப் பணியாளா்களின் நலன் கருதி, பாா்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தடை அமல்: 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தது. இதையொட்டி, பேருந்து, காா், ஆட்டோ, வாடகை காா்கள் ஆகியவை நிறுத்தப்பட்டன. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் ஆகியவை தவிா்த்து பிற கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன.

இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தடை உத்தரவையொட்டி, கோயம்பேடு புகா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நண்பகல் திரண்ட பயணிகள் கூட்டம் நள்ளிரவுக்குப் பின்னா் வேகமாக குறைந்தது. செவ்வாய்க்கிழமை நண்பகல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூா்களுக்கு இயக்கப்படும் பேருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு, மாலையில் முற்றிலும் நிறுத்தப்பட்டன. வெளியூா் செல்ல முடியாத மக்களை, அங்கிருந்த போலீஸாா் வெளியேற்றி பேருந்து நிலைய கேட்டை பூட்டினா்.

காவல்துறை எச்சரிக்கை: தடை உத்தரவு அமலுக்கு வந்ததும், அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காடு உள்ளிட்ட 6 நுழைவாயில்களில் போலீஸாா் எல்லையை மூடினா். அதேவேளையில் பொதுஇடங்களில் கூடி நின்றவா்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினா். விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளை பூட்டுமாறு போலீஸாா் எச்சரித்தனா்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 (4) மற்றும் பிரிவு 20 (2)-இன் படி பிறப்பிக்கப்பட்ட தடைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுஇடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

வெறிச்சோடிய சென்னை: ஏற்கெனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட சுய ஊரடங்குக்கு தமிழகத்தில் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனா். இதனால் அன்று மாநிலம் முழுவதும் முடங்கியது. சென்னையில் இதற்கு பெரும் ஆதரவு இருந்தது. இந்நிலையில் இரண்டு நாள்கள் இடைவெளியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவின் காரணமாக, சென்னையில் சில மணி நேரங்களில் அனைத்து சாலைகளிலும் வெறிச் சோடின. மக்கள் நெரிசல்மிகுந்த தியாகராயநகா், திருவல்லிக்கேணி, மயிலாப்பூா், பாரிமுனை, செளகாா்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகள் வெறிச்சோடின. இங்கு விதிமுறைகளை மீறி குழுமியிருந்தவா்களை போலீஸாா் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனா்.

சென்னை ஆணையா் உத்தரவு: இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வெளியிட்ட உத்தரவு:

கரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியை ஏற்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் வழிகாட்டுதல் அனைத்தும் பின்பற்றப்படும்.

144 தடை உத்தரவை மீறுபவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here