கையை நீட்டினால் கிருமி நாசினி துபாயில் இந்திய மாணவர் அசத்தல்

‘கொரோனா’ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், துபாயில் பயிலும் இந்திய மாணவர் ஒருவர், கையை நீட்டி, கிருமி நாசினியை தானாக பெறும் வகையில், ‘ரோபோ’ ஒன்றை உருவாக்கியுள்ளார்.

கொரோனா வைரஸ், பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால், உலகம் முழுவதும், மொத்தம், 2 லட்சத்து, 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடுதல் மூலம் இந்த நோய் பரவி வருகிறது. இதனால், கைகளை, கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும் என, மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாயில் வசித்து வரும் சிறுவன் சித் சாங்வி, கிருமி நாசினியை தானாக வழங்கும், ‘ரோபோ’வை உருவாக்கிஉள்ளார். துபாயில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும், இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரின் தாய், இவருக்கு ஒரு, ‘வீடியோவை’ காண்பித்துள்ளார்.

அதில், கிருமி நாசினி பாட்டிலை, நாம் ஒவ்வொரு முறையும், தொட்டு பயன்படுத்துவதால், வைரஸ் பரவலை தடுக்க முடியாது; அதனால், நமக்கு பாதிப்புதான் ஏற்படும் என்பதை விளக்கும் வகையில், அந்த வீடியோ அமைந்திருந்தது. அந்த வீடியோவை பார்த்த சாங்வி, தொழில்நுட்பம் மூலம், அதற்கு தீர்வு காண எண்ணினார்.

அதன் முயற்சியாக, கைகளால் தொடாமல், கிருமி நாசினியை தானாக பெறும் வகையில், ரோபோ ஒன்றை அவர் உருவாக்கிஉள்ளார். இதன்படி, 30 செ.மீ., தொலைவில் இருந்தபடி, கைகளை நீட்டி, கிருமி நாசினியை நாம் பெற்றுக்கொள்ளும் வகையில், அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here