முருகன் கையில் கரோனா வைரஸ்; நாரதராக நடிகர் வடிவேலு: போஸ்டர் புகழ் மதுரையில் நூதன விழிப்புணர்வுப் பிரச்சாரம்


கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் சுய ஊரடங்கு இன்று நடந்தது.

இந்நிலையில், மதுரையில் தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தை கடைபிடித்தால் கரோனாவை விரட்டலாம் என்பதை அறிவுரையாக அல்லாமல் நகைச்சுவை பாணியில் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுவரொட்டி நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.

மதுரைக்காரர்கள் எப்போதும், எதிலும் வித்தியாசமானவர்கள். சுவரொட்டிகள் மூலம் ‘மெசேஜ்’ சொல்வதில் கில்லாடிகள். அரசியல்வாதிகளுக்கு பட்டம் கொடுத்து சுவரொட்டி அடிப்பதில் தொடங்கி, சினிமா நடிகர்களை பாராட்டுவது வரை மிஞ்சுவதற்கு ஆளில்லை. அந்த வகையில் கொரோனா வைரஸால் நாடே அச்சத்துடன் கையாண்டு வருகிறது.

ஆனால் மதுரைக்காரர்கள் மட்டும் கொரோனா வைரஸை விரட்ட தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் கடைப்பிடியுங்கள் என நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தி சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

இதில் நடிகர் வடிவேலுவை நாரதர் போன்றும், கடவுள் முருகன், கொரோனா வைரஸை வைத்து விளையாடுவதுபோலவும் சித்தரித்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

அந்த சுவரொட்டியில் உள்ளதாவது:

ஏய், கொரோனா, என் மக்களையே டர்ர்ர் ஆக்குகிறாயா?

முருகன்: நாரதரே வேலோடு விளையாடியே ஃபோர் அடித்து விட்டது. நான் விளையாட வேறு ஏதேனும் புதிதாய் கொண்டு வாருங்களேன்.

நாரதர்: முருகா, பூமியில் கொரோனா வைரஸ் எனும் கிருமி மனிதர்களை அச்சுறுத்தி கொண்டு இருந்தது. அதனையே பிடித்துக் கொண்டு வந்துள்ளேன். அதனிடம் காட்டு உனது திருவிளையாடலை… என்பதுபோல் வாசகம் உள்ளது.

அதற்கு அசரீரி: நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உலகின் எட்டுத்திக்கிற்கும் கற்பித்த தமிழ்ச்சமூகமே, அதனையே பின்பற்று, எதற்கும் அஞ்சாதே! நான் இருக்கிறேன் உன்னோடு… யாமிருக்க பயமேன் என வாசகம் இடம் பெற்றுள்ளது.

அதில் முருகன் கொரோனா வைரஸ் கையில் வைத்துள்ளதைப்போலும், அதில் நாரதராக நடிகர் வடிவேலு படத்தையும் அச்சிட்டு அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here