மோட்டார் சைக்கிளில் 100 KM வேகம் வேண்டாம்; கணிதத்தில் 100 புள்ளி எடுக்க முயலுங்கள்: மாணவர்களிற்கு முதலமைச்சர் சொன்ன ஆலோசனை!

யாழ் வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இக் கல்லூரியின் அதிபர் அவர்களே, இன்றைய இந்த நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைதந்திருக்கும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார கௌரவ அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களே, சிறப்பு அதிதிகளே, கௌரவ அதிதிகளே, இக் கல்லூரியின் ஆசிரியர்களே, மாணவ மாணவியர்களே, சகோதர சகோதரிகளே!
இன்றைய தினம் யாழ் வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இக் கட்டடத் தொகுதியை திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, இப் பாடசாலையின் வகுப்பறைத் தேவையினை நிவர்த்தி செய்யும் முகமாக 100×25 அடி அளவுடையதாக அமைக்கப்பட்டுள்ளது இக் கட்டடம். பொருத்தமான மண்டப வசதிகள் அற்ற நிலையில் இக் கட்டடம் வகுப்பறைகளாகவும் இடைத்தடுப்புக்களை அகற்றி தேவைக்கேற்ப பாடசாலை விழாக்கள், கூட்டங்கள் என்பவற்றை நடாத்துவதற்கு ஏற்ற பொது மண்டபமாகவும் பாவிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

வகை இரண்டு தரத்தைச் சேர்ந்த இப் பாடசாலையில் தரம் 1 முதல் 11 வரை வகுப்புக்கள் இடம்பெறுவதாகவும், இங்கு கல்வி கற்கின்ற 220 மாணவர்களுக்கு அவர்களின் கல்வி வழிகாட்டல்களை வழங்குவதற்காக 18 ஆசிரியர்கள் கடமை புரிவதாகவுந் தெரிவிக்கப்பட்டது.

வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் இயற்கையாகவே கல்வி கேள்வி அறிவுகளில் மேம்பட்டவர்கள் எனவும், விசேடமாக கணித பாடத்தில் கூடிய நாட்டம் கொண்டவர்கள் எனவும் ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற மக்களினால் விசேடமாக அடையாளம் காணப்பட்டவர்கள். இவர்களின் ஆரம்பக் கல்வி நடவடிக்கைகளில் பெற்ற சிறந்த பெறுபேறுகளின் அடிப்படையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அனேகர் நல்ல நிலைமைகளில் இன்றிருக்கின்றனர். இவர்களுள் பலர் கடந்த 30 ஆண்டுகால தொடர் யுத்தத்தின் பாதிப்புக்களின் போதும் தளராது இறுதி வரை இப் பகுதிகளில் தமது வாழ்க்கைகளை முன்னெடுத்திருந்து வந்துள்ளமை இத் தருணத்தில் நினைவுகூரப்படலாம்.

ஆனால் இன்று யுத்தம் முடிவடைந்த நிலையில் எமது மாணவர்களுட் பலர் கல்வி கேள்வி நடவடிக்கைகளில் மிக மெதுவானதொரு அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவது எமக்கு வேதனை அளிக்கின்றது. இன்று மாணவர்கள் மத்தியில் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இல்லை. தமது கடுமையான முயற்சிகளினூடு முன்னேற வேண்டும் என்ற அவா இல்லை. மாறாக தேவையற்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கவனத்தைச் செலவிடுகின்றார்கள் அல்லது மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி போன்ற பல்வேறு அதிகரித்த செலவீனங்களுடன் கூடிய பொழுதுபோக்குகளில் மூழ்கியிருக்கின்றார்கள். இவை கல்வியின்பால் இவர்கள் காட்டுகின்ற அசண்டையீனத்தை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களமும் எனது அமைச்சும் இணைந்து “கவனமாகச் சென்று வாருங்கள்” என்ற தலைப்பின் கீழ் வீதியை பயன்படுத்தும் முறைமை பற்றியும் வாகனங்களைச் செலுத்துகின்ற முறைமை பற்றியும் ஒரு முக்கியமான கருத்தரங்கை மாணவர்களிடையே நடாத்தினார்கள். இதில் சுமார் 1500 பாடசாலை மாணவ மாணவியர் வரை கலந்துகொண்டு பயன் பெற்றிருந்தார்கள். இந்த நிகழ்வில் பொலிஸ் அலுவலகத்தினால் தரப்பட்ட தகவல்கள் பல எம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தின.

ஒவ்வொரு வருடமும் சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துக்கள் பற்றியும் அந்த விபத்துக்களின் மூலம் தமது இன்னுயிர்களை நீத்த பிள்ளைகளினது எண்ணிக்கை பற்றியும் அங்கு விலாவாரியாக புள்ளி விபரங்கள் வழங்கப்பட்டன. விபத்துகளுக்கு மூலகாரணமாக அடையாளம் காணப்பட்ட பல விடயங்கள் அங்கே சுட்டிக் காட்டப்பட்டன.

1. வீதி ஒழுங்குகளை முறையாகப் பின்பற்றாமை.
2. சந்திகளில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை உறுதி செய்த பின்னர் வாகனத்தை இயக்காமை.
3. துவிச்சக்கரவண்டிகளில் நான்கு அல்லது 05 பேர் சமாந்தரமாக பிரயாணம் செய்தல்.
4. மோட்டார் சைக்கிள்களின் மிதமிஞ்சிய வேகம்.
5. தலைக்கவசம் அணியாமை.
6. வீதிசமிக்ஞை விளக்குகளின் சைகைகளைப் பின்பற்றாமை.

என பல்வேறு முக்கிய காரணங்கள் விபத்துக்களுக்கான காரணங்களாக அடையாளம் காணப்பட்டிருந்தன. இன்றைய இளைஞர் யுவதிகளிடையே மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் பாவனை மிக அதிகமாக காணப்படுகின்றது. நூற்றுக்கு 70 சதவிகிதமான பிரயாணங்கள் தேவையற்ற பிரயாணங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன. அப்பிரயாணங்கள் தேவைகளின் நிமித்தம் அல்லது ஒரு குறிக்கோளின் நிமித்தம் மேற்கொள்ளப்படுகின்ற பயணங்கள் அல்ல என்று காணப்பட்டுள்ளன. எம் இளைஞர் யுவதிகள் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள்களையோ ஸ்கூட்டர்களையோ செலுத்துவது ஒரு உலக சாதனை போன்று உணரப்படுகின்றது. அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துதல், ஹோர்ன் ஒலிகளைத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு பயணித்தல், முகப்பு விளக்குகளை எரியவிட்டுக் கொண்டு சாரி சாரியாக 10 – 20 மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து வேகமாகச் செல்லல் இவை அனைத்தும் எம் இளைஞர் யுவதிகளின் இன்னுயிர்களை அழிப்பதற்கான செயல்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ் விடயங்கள் பற்றி பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே மேற்படி கூட்டம் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளை 100km வேகத்தில் செலுத்துவதற்குத் துடிப்பவர்கள் கணித பாடத்தில் 100 புள்ளிகளை எடுக்க வேண்டும் என்று சிந்திப்பதில்லை. வெறும் நோக்கமற்ற ஆட்டமும் பாட்டமுமே வாழ்க்கை என்று ஆகிவிட்டது அவர்கள் பலருக்கு.

துவிச்சக்கரவண்டிகளில் சமாந்தரமாக செல்வதற்குப் பதிலாக ஒன்றன் பின் ஒன்றாகப் பயணம் செய்வதற்கு நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும். அப்பொழுது உங்கள் பயணங்கள் பாதுகாப்பாகவும் பார்ப்பவர்களுக்கு அழகாகவும் தென்படுவன.

இன்றைய இந்த கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரையும் வாழ்த்துவதுடன் நீங்கள் உங்கள் பிள்ளைகளின் அல்லது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வினையமாகக் கேட்டுக் கொள்கின்றேன். பொதுவாகவே வாதரவத்தை பகுதியைச் சேர்ந்;த மக்கள் கடுமையான உழைப்பாளிகள் என்று கேள்விப்பட்டுள்ளேன். பெருந்தெருக்கள் அமைப்பதில் இவர்களுள் பலர் துறைசார்ந்த விற்பன்னர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இப் பகுதியில் இருக்கும் மாணவர்கள் தமது உயர்தர வகுப்புப் பரீட்சை எழுதியதும் தமது பொழுதை அவப்பொழுதாக்காமல் அடுத்த தினமே இவ்வாறான வேலைகளுக்குச் சென்று பெறுமதி மிக்கதாக தமது காலத்தைச் செலவழிப்பார்கள் என்ற நல்ல செய்தியை உங்கள் ஆசிரியர்களின் மூலம் அறிந்து கொண்டேன்.

சுமார் எழுபது வருடங்களுக்கு முன்னர் எங்கள் இளமைப் பருவத்தில் எமது பெற்றோர்கள் காலத்தின் ஓட்டம் பற்றிக் கூறுவார்கள். அதாவது இன்று முடிந்த பொழுது முடிந்ததுதான் திரும்பவும் இந்த நாள் வராது. வேறொரு நாள் வரும் ஆனால் இன்றைய நாள் இனி வராது என்று கூறி ஒவ்வொரு நாளையும் பயனுடையதாகக் கழிக்க வேண்டும் என்பார்கள். ஒவ்வொரு நாளும் நாங்கள் எதனைச் செய்து முடிக்கப் போகின்றோம் என்று திட்டமிடல் மிக அவசியம் என்பார்கள்.

ஆகவே எமது மாணவர்கள் எதிர்கால சிந்தையுடையவர்களாக எதிர்கால வாழ்வு வளமுடையதாக அமையத்தக்க வகையில் கல்வி நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட வேண்டியது கட்டாயமகின்றது என்று கூறி வைக்கின்றேன்.

மெதடிஸ்ற் திருச்சபையினரால் 1910ம் ஆண்டளவில் வாதரவத்தை மெதடிஸ்த வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்பப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை இன்று யாழ் வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயம் என்ற பெயருடன் கல்விப் பணிகளில் மாணவ மாணவியரைச் செவ்வனே வழிநடாத்தி வருகின்றது.

பாடசாலை மாணவ மாணவியர் வெறுமனே கல்வி நடவடிக்கைகளுடன் மட்டும் தமது கற்றல் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளக் கூடாது. இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் உங்கள் திறமைகளை நீங்கள் வெளிக்கொணர முயலவேண்டும். பாடசாலைகளுக்கிடையே இடம்பெறும் விளையாட்டு நிகழ்வுகளில், தடகளப் போட்டிகளில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கெடுத்து உங்கள் திறமைகளைச் சாதனைகளாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதேபோன்று கலை நிகழ்வாக இருந்தால் என்ன, இலக்கிய விழாக்களாக இருந்தால் என்ன, களியாட்ட விழாக்களாக இருந்தால் என்ன எதுவாக இருந்தாலும் உங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். உடல்களுக்கு இரத்தோட்டத்தைத் தரும் விளையாட்டுக்களின் பின்னரான கற்றல் நடவடிக்கைகள் மூளையில் ஆழப்பதிவன.

எனவே விளையாட்டு என்பது கற்றல் நடவடிக்கைகளுக்குத் தீங்கு ஏற்படுத்தும் ஒரு விடயமாக பெற்றோர்களோ, மாணவ மாணவியரோ கொள்ளக் கூடாது. விளையாட்டுக்கள் கல்வி கற்றலுக்கு அனுசரணையாகவே அமைவன.

மேலும் கற்றல் நடவடிக்கைகளில் காட்டுகின்ற அதே அளவு ஆர்வம் சமயநெறிமுறைகளைப் பின்பற்றுவதிலும் நாங்கள் காட்ட வேண்டும். என்ன சமயமாக இருந்தாலுஞ் சரி, தமது சமய நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுகின்ற மாணவர்கள் தூய்மையான ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றக்கூடிய அறிவை இலகுவாகவே பெற்றுவிடுகின்றார்கள். சமய நெறிகள் எமக்கு ஒழுக்கத்தைப் போதிக்கின்றன. அன்பைப் போதிக்கின்றன. பண்பைப் போதிக்கின்றன. நாங்கள் நாளைய நற்பிரஜைகள் ஆவதற்குச் சமயங்கள் எமக்கு உதவுகின்றன.

அடுத்து இன்றைய மாணவ மாணவியர்களிடையே இரண்டாம்மொழி அறிவு மிக அருகிக் காணப்படுவதை அவதானிக்கின்றேன். அதற்கு வெறுமனே நாங்கள் மாணவ மாணவியரை மட்டும் குறைகூற முடியாது. மாணவ மாணவியர்கள் இரண்டாம்மொழி அறிவை முறையாகப் பெற்றுக் கொள்வதற்குரிய கற்பித்தல் முறைமைகள் பெருவாரியான பாடசாலைகளில் இன்று இல்லை. வீட்டுச் சூழலும் இதற்கு ஏற்புடையதாக இல்லை. ஒரு சில மாணவ மாணவியர் இயற்கையாகவே அவர்களுக்கு இருக்கும் மொழி ஆர்வத்தை நிறைவு செய்யும் பொருட்டு ஆசிரியர்களைத் தேடிச் சென்று தமது மொழி அறிவுகளை மேம்படுத்திக் கொள்கின்றார்கள். எனவே பாடசாலைகளில் இரண்டாம்மொழி அறிவு தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். வேற்று மொழி அறிவில் மேம்பட்டவர்கள் பொது அறிவியலில் உயர்ந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள். உதாரணத்திற்கு ஆங்கில அறிவு பெற்றவர்கள் ஒரு மொழி தெரிந்தவர்களிலும் பார்க்க மேன்மையான பொது அறிவு கொண்டவர்களாக இருப்பதை நாம் அவதானித்துள்ளோம். எனவே இரண்டாம்மொழி அறிவின் முக்கியத்தை உணர்ந்து இளவயதிலேயே உங்கள் கற்றல் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க நீங்கள் யாவரும் முன்வர வேண்டும். இன்றைய இந்த புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கு வருகைதந்திருக்கின்ற அனைவரையும் அன்புடன் வாழ்த்துகின்றேன். இக் கல்லூரி மென்மேலும் வளர்ச்சியடைந்து உச்ச நிலையை அடைய எனது மனமார்ந்த ஆசிகளைத் தெரிவித்து என் பேச்சை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here