இந்திய வெளியுறவு செயலாளர்- கூட்டமைப்பு சந்திப்பு!

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகெல்லுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், புதிய அரசியல் யாப்பானது மாகாணசபை தேர்தல்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்திய அதேவேளை பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமையினால் இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவது மிக அவசியமானதாகும் என தெரிவித்தார். மேலும் இந்த சந்தர்ப்பத்தினை உதாசீனம் செய்ய முடியாது என தெரிவித்த இரா.சம்பந்தன், பிரிக்கபடாத, ஒன்றிணைந்த பிரிக்க முடியாத இலங்கை நாட்டிற்குள்ளேயே தீர்வொன்றினை நாம் எதிர்பார்க்கிறோம் எனவும் நீண்டகால தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினுடாகவே ஒரு தீர்வினை காணமுடியும் என்பதனையும் வலியுறுத்தினார்.

புதிய அரசியல் யாப்பானது மக்கள் தமது நாளாந்த விடயங்கள் குறித்து தாமே நிர்ணயித்து முடிவெடுக்கும் வகையில் அமைவதன் அவசியத்தினையும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்கள் புதிய அரசியல் யாப்பில் இடம்பெற வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார் இரா.சம்பந்தன்.

மேலும் இலங்கையில் விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதனை இந்தியா ஊக்குவிக்க வேண்டும் என வெளியுறவு செயலரை கேட்டுக்கொண்ட இரா.சம்பந்தன், வெளிநாட்டு முதலீடுகள் எமது மக்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் என்பதனையும் விசேடமாக இளைஞர்கள் மத்தியில் பாரிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து மீளவரும் அகதிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இந்திய வெளியுறவு செயலாளர், இந்திய அரசாங்கமானது இந்த அகதிகள் தொடர்பில் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இரா. சம்பந்தனோடு, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்தினர் ஆகியோரும், இந்திய வெளியுறவு செயலரோடு இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங்கும் கலந்து கொண்டார். 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here