டெனீஸ்வரனால் வந்தால் இரத்தம்… குணசீலனால் வந்தால் தக்காளி சட்னி: ரெலோவின் புது டிசைன்!

வடக்கு மாகாணசபையில் வரும் திங்கள்கிழமை- 16ம் திகதி- டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் சிறப்பு அமர்வு நடைபெறவுள்ள நிலையில், ரெலோ அரசியல் உயர்பீடம் அவசரமாக கூடவுள்ளது. வரும் ஞாயிறு- 15ம் திகதி- இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. ரெலோவின் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரசியல் உயர்பீடத்தில் அங்கம் வகிக்காத மாகாணசபை உறுப்பினர்களும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

டெனீஸ்வரன் விவகாரத்தை பயன்படுத்தி முதலமைச்சருக்கு எதிரான நகர்வாக, தமிழரசுக்கட்சியின் சயந்தன், அஸ்மின் அணி திட்டமிட்டு இந்த சிறப்பு அமர்வை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வீணாண சர்ச்சைகளிற்குள் சிக்காமல்- அந்த உறுப்பினர்கள் உருவாக்கும் சர்ச்சைகளிற்குள் சிக்கி, மாகாணசபையை சிரிப்பிற்கிடமாக்காமல் பார்த்துக் கொள்ளவே உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்த ரெலோ திட்டமிட்டுள்ளதாக மூத்த தலைவர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இதேவேளை, ரெலோவின் இந்த கூட்டத்தில் தர்க்கம் பிழைத்த ஒரு நடவடிக்கையுள்ளதையும் தமிழ்பக்கம் சுட்டிக்காட்டுகிறது.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியே டெனீஸ்வரன் முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டார். அதற்காக அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை மூன்று வருடங்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.

அதேபோல, புதிய அமைச்சரவையில் யார் நியமிக்கப்படுவதென்ற குழப்பம் எழுந்தபோது, கட்சி கூடி விந்தன் கனரட்ணத்தின் பெயரை சிபாரிசு செய்தது. எனினும், சுகாதார அமைச்சராக குணசீலன் பதவியேற்றார். கட்சி கட்டுப்பாட்டை மீறியே அவர் பதவியேற்றதாக கட்சி செயலாளர் என்.சிறீகாந்தா பகிரங்கமாக குற்றம்சுமத்தியிருந்தார். எனினும், கட்சிக்கட்டுப்பாட்டை மீறி செயற்பட்ட குணசீலன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை, அரசியல் உயர்பீட கலந்துரையாடலிற்கு அழைத்துள்ளார்கள்.

ரெலோவின் தலைமைக்குழு கலந்துரையாடல்களிற்கும் அண்மைக்காலமாக குணசீலன் அழைக்கப்பட்டு வருகிறார்.

கட்சி கட்டுப்பாட்டை மீறிய டெனீஸ்வரனை இடைநிறுத்தி ரெலோ, அதே விதமாக செயற்பட்ட குணசீலனிற்கு தலைமைக்குழுவில் இடம்வழங்கியது என்னவிதமான தர்க்கம்?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here