12 வருடங்களின் முன்னர் காதலித்த நபர்… அனுஷ்கா வெளியிடும் ப்ளாஷ்பேக்!

2008 ஆம் ஆண்டு நான் ஒருவரைக் காதலித்தேன். பிறகு வேறுவழியில்லாமல் இருவரும் பிரிய நேர்ந்தது என நடிகை அனுஷ்கா பேட்டியளித்துள்ளார்.

பாகுபலி நட்சத்திரம் பிரபாஸைக் காதலிக்கிறார் என்று முதலில் செய்திகள் வெளியாகின. பிறகு கிரிக்கெட் வீரரைக் காதலிக்கிறார் எனவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. சமீபத்தில் வெளியான செய்தி – தேசிய விருது பெற்ற இயக்குநரை நடிகை அனுஷ்கா காதல் திருமணம் செய்கிறார் என்பது.

மும்பை ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடியைத் திருமணம் செய்ய அனுஷ்கா திட்டமிட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகின. பிரகாஷ் கோவலமுடி 2004 இல் இயக்கிய பொம்மலடா படம், சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இவர், மூத்த தெலுங்கு இயக்குநர் ராகவேந்திர ராவின் மகன்.

இந்நிலையில் பிரபாஸுடனான காதல், தேசிய விருது பெற்ற இயக்குநருடன் திருமணம் என சமீபத்தில் வெளியான கிசுகிசுக்களுக்கு நடிகை அனுஷ்கா பதில் அளித்துள்ளார்.

ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

2008 இல் ஒருவரைக் காதலித்தேன். அருமையான உறவு அது. அது எனக்கு மிகவும் விசேஷமானது என்பதால் அவர் யார் என்பதைத் தெரிவிக்கமாட்டேன். நாங்கள் இருவரும் இப்போதும் காதலர்களாக இருந்திருந்தால் அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்தியிருப்பேன். வேறு வழியில்லாமல் பிரிந்தோம். என்னைப் பொறுத்தவரை இப்போதும் அது மரியாதைக்குரிய உறவு.

எனக்கு பிரபாஸைக் கடந்த 15 வருடங்களாகத் தெரியும். அதிகாலை 3 மணி நண்பர்களில் அவரும் ஒருவர். எங்கள் இருவரையும் இணைத்துப் பேசுவதற்குக் காரணம், இருவருமே திருமணமாகாதவர்கள், அருமையான ஜோடி போன்ற காரணங்களினால் தான். எங்கள் இருவருக்கும் இடையே ஏதாவது இருந்திருந்தால் இந்நேரம் வெளியே வந்திருக்கும். நாங்கள் காதலில் விழுந்திருந்தால் அதை மறைக்கத் தெரியாத அளவுக்கு இருவருமே உணர்வுகளை வெளிப்படுத்துபவர்கள்.

திருமணம் குறித்த செய்தியும் வதந்தியே. இதுபோன்ற வதந்திகளால் நான் பாதிக்கப்பட மாட்டேன். என் திருமணம் ஏன் எல்லோருக்கும் பெரிய விஷயமாக உள்ளது எனத் தெரியவில்லை. காதல் உறவை யாராலும் மறைக்க முடியாது. என் திருமணத்தை எப்படி மறைப்பேன்? இது மிகவும் ஜாக்கிரதையான விஷயம். ஜாக்கிரதையான உணர்வுடன் மக்கள் இதை அணுக வேண்டும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here