கொரோனா பரவலை தடுப்பதில் யாழில் உள்ள குறைபாடுகள்!

உலகளவில் பெரும் அனர்த்தத்தை உருவாக்கி வரும் கோவிட்- 19 (கொரோனா) வைரஸ் தாக்கம், இலங்கையின் இயல்பு வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் இலங்கையர்களும் வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர். தற்போது இலங்கையில் 43 பேர் வரையில் வைரஸ் பாதிப்பிற்கு இலக்காகியுள்ளனர்.

வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அத்யாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய துறைகளிற்கு விடுமுறை அளித்துள்ளது. கொரோனா தொடர்பான தகவல்களை பெற, ஹொட் லைன் இலக்கமும் அறிவித்துள்ளது.

வடக்கு மாகாண ஆளுனரும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருந்தார். வடக்கு, யாழ் பிராந்திய சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளையும், அறிவித்தல்களையும் விடுத்திருந்தாலும், அதிக சன நெருக்கடி மிக்க யாழ் மாநகரசபை பகுதியில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதை கவனிக்க வேண்டிய யாழ் மாநகரசபையும் அதில் அக்கறை காண்பித்ததாக தெரியவில்லை. யாழ் மாநகர முதல்வர், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வேட்புமனுவை பெறுவதில் தலைகீழாக நின்றதில், மாநகர பகுதி கொரோனா ஆபத்தை கண்டுகொள்ளவில்லை.

14 நாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்மென அரசாங்கம் அறிவித்திருந்தது. வடக்கிற்கு- யாழிற்கு சுற்றுலா வருபவர்களில் அதிகமானவர்கள் யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பெரிய விடுதிகள் முதல் சிறிய வீட்டு விடுதிகளில்தான் தங்கியுள்ளனர். எனினும், விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் குறித்து, அந்த விடுதிகள் அறிவுறுத்தப்படவில்லை என தமிழ்பக்கத்திடம் சுகாதாரத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

யாழ் நகரம், நல்லூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் தவறாமல் அந்த பகுதியில் ஐஸ்கிறீம் குடிக்க வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் நாளாந்தம் 100 இற்கும் குறையாத சுற்றுலா பயணிகள் வருவதாக குறிப்பிடப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் உள்ள காலகட்டத்தில் இது மிக ஆபத்தானது என சுகாதாரத்துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதில் இன்னொரு முக்கிய விடயத்தையும் சுகாதாரத்துறை அதிகாரியொருவர் தமிழ்பக்கத்திடம் சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் விடுதிகளில் பணியாற்றுபவர்கள், உணவு தயாரிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் நோய்த்தொற்றிற்கு இலக்காகுவதிலிருந்து தப்பிக்கவும், உணவின் மூலம் நோய் மற்றவர்களிற்கு பரவவும் வாய்ப்பிருக்கிறது.

எனினும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூடும் யாழ் விடுதிகள், உணவகங்களில் பணியாற்றுபவர்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை.

இதேபோல, வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தொடர்பில் அறிவிக்கும்படி பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ள போதும், அதற்கு முறையான பொறிமுறை இல்லையென அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ் மாநகரசபை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் சிலர் இது பற்றி விசனம் தெரிவித்ததாக, வடக்கு சுகாதாரத்துறை பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் சுட்டிக்காட்டினார். யாழ் மாநகரசபை பிரதேசத்தில் தொலைபேசியில் அறிவித்தும்,அதற்கு உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென்றும், தொலைபேசி அழைப்புக்களிற்கு உரிய அணுகுமுறை மேற்கொள்ளப்படவில்லையென ஏனைய சில பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தெரிவித்ததாக அந்த பிரமுகர் தெரிவித்தார்.

தற்போதைய கட்டமைப்பில் 24 மணி நேர தொலைபேசி சேவையை வழங்குவது சாத்தியமில்லையென்பதை சுட்டிக்காட்டிய அவர், இதற்காக விசேட ஹொட் லைன் ஒன்று அறமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை மேலதிகாரிகளிற்கு எடுத்துக் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here