குற்றவாளிகளுடன் நெருங்கிப்பழகும் பொலிசார்; முதல்வர் குற்றச்சாட்டு: தமிழ் அதிகாரி மீது சீறிப்பாய்ந்த பொலிஸ் மா அதிபர்!

‘தமிழ் பிரதிநிதிகளுடன் ஒன்றிணைந்து- அவர்களுடன் ஆலோசித்து நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்றுதான் தமிழ் பொலிஸ் அதிகாரியான உங்களை இங்கு சிறப்பு நிலையில் நியமித்தோம். இங்கு என்ன செய்கிறீர்கள்?’
– இப்படி வடக்கு மாகாணத்துக்கு சிறப்பாக நியமிக்கப்பட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் மீது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சீறிப் பாய்ந்தார். செய்தியாளர்கள் முன்னிலையில் பொலிஸ் மா அதிபர் இவ்வாறு நடந்துகொண்டார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள சட்டம், ஒழுங்கு அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் வடக்கு மாகாண முதலமைச்சரை நேற்று பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், “பொலிஸாருக்கும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதால் வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது உள்ளது“ என்று பொலிஸ் மா அதிபரிடம் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பு நிறைவடைந்து வெளியேறிய போதே மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் மீது பொலிஸ் மா அதிபர் மேற்கடி கேள்வியை எழுப்பி சீற்றமடைந்தார்.

இச் சந்திப்புத் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்ததாவது: பொலிஸாருக்கும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதால் வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது இருப்பதாக சுட்டிக்காட்டினேன்.

இதற்குக் காரணம் தெற்கில் குற்றங்கள் புரிந்த பொலிஸாரை இங்கு அனுப்புவதுதான் காரணமோ தெரியாது எனக் குறிப்பிட்டேன்.

அதற்கு அவர்கள் அவ்வாறு இல்லை என்று கூறினார்கள். மேலும் பொலிஸார் 2 வருடங்கள் ஓர் இடத்தில் பணியாற்ற வேண்டும் என்றும் அவ்வாறே அவர்கள் சிறப்பாக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்கள்.

மேலும் பொலிஸாருக்கும் குற்றங்கள் புரிந்தவர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருப்பதை கூறியபோது, அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அவ்வாறு தனக்கும் பலவிதமான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள்.

அத்துடன் குறிப்பிட்ட சிலர் தொடர்பில் உடனடியாகவே நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்கள்.

மேலும் இவற்றைவிட போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை கூறினேன். அதனையும் அவர் ஏற்றுக் கொண்டனர்.

மேலும் அவ்வாறு தனக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கிடைத்துள்ள சகலதையும் விசாரணை செய்வதாக தெரிவித்தார்.

இதேவேளை சட்டவிரோத மண் கடத்தல் தொடர்பிலும் எடுத்துக் கூறினேன். இதனையும் அவர் ஏற்றுக் கொண்டு இங்கு மட்டுமன்றி நாடுமுழுவதும் இந்தப் பிரச்சினை இருப்பதாகவும் கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்க அதனை கட்டுப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் வடக்கில் இடம்பெற்றுவருகின்ற போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பாகவும் இச் சந்திப்பில் கலந்துரையாடினேன். மூத்த பொலிஸ் அத்தியட்சகருடன் இவ் விடயத்தை கலந்துரையாடுமாறு தெரிவித்தார்.

மேலும் பொலிஸாருக்கு போக்குவரத்திற்கு ஏற்ற மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் போதாமை உள்ளமை தொடர்பில் எடுத்துக்கூறினனே். அத்துடன் கடந்த அரசின் ஆட்சியில் இருந்தபோது பொலிஸாருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டதாகவும், எனினும் அனைத்து பொலிஸாருக்கும் இது வழங்கபபடவில்லை எனவும் இதனை வழங்கினால் விரைவான சேவையினை வழங்க முடியும் என்பதனையும் சுட்டிக் காட்டினேன்.

இதற்கு சட்ட ஒழுங்கு அமைச்சர் தாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் பொலிஸாரை அனுப்புவதாகக் கூறினீர்கள் இன்றுவரைக்கும் அது நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டினேன். அதற்கு அவர் கட்டாயம் அனுப்புவதாக கூறினார். பெயர்களை தருமாறும் கேட்டிருந்தார்.

நான் மூத்த பொலிஸ் அத்தியட்சகரிடம் வழங்கியுள்ளதனை தெரிவித்தேன். இதற்கு அவர் இவர்களது பயிற்சி முடிவடைந்ததும் இங்கு அனுப்புவதாக தெரிவித்தார்.

மேலும் குறிப்பிட்டளவு நேரமே சந்திக்கின்ற வாய்ப்பு இருந்தமையால் இயலுமான வரையில் கலந்துரையாடியுள்ளோம். எனினும் பொலிஸாருக்கும் குற்றம் செய்வோருக்கும் இடையில் உள்ள தொடர்புகள் தொடர்பாக இயலுமான அளவு பெயர் விபரங்களை இரகசியமான முறையில் எனக்கு எழுதி அனுப்பினால் விரைவான நடவடிக்கையினை எடுப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் வாக்குறுதி அளித்துள்ளார்“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here