சிறுவர்களை விழிப்புணர்வூட்ட வட்டு யாழ்ப்பாண கல்லூரி தடை: மாணவிகளை சீரழித்த ஆசிரியருக்கு சார்பாக நடக்கிறதா?

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல் செயலமர்வுகளை நடத்தும் சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகர்களுக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரால் நெருக்குதல்கள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல் செயலமர்வு நடத்துவதனால் ஆசிரியர்கள் சிலருக்கு எதிராக தேவையற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிடும் அந்தப் பாடசாலையின் அதிபர், இவ்வாறான நிகழ்வுகளை பாடசாலைக்குள் நடத்த ஆளுநர் சபை அனுமதிக்காது என கூறியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டல் செயலமர்வு சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

இதில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை விழிப்புணர்வூட்டல் செயலமர்வு நடத்தப்பட்டது.

இதன்போது, மாணவிகள் மூவர் தாம் துன்புறுத்தலுக்குள்ளாகியமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அலுவலகர்களுக்கு எழுத்துமூலம் முறைப்பாடு வழங்கினர்.

இந்த நிலையிலேயே அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் தமது பணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அழுத்தங்களை வழங்கினர் என சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் கல்வி நிலையத்தில் வைத்து பதின்ம வயது மாணவிகள் மூவரை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஆசிரியர் ஒருவர் நீதிமன்றக் கட்டளையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். அவர் கைது செய்யப்பட்டதால்,பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

இந்த நிலையில் ஆசிரியருக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் விசாரணக்கு வந்தது. சந்தேகநபர் சார்பில் முன்னிலையாகி 3 சட்டத்தரணிகளில் ஒருவரான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா நீண்ட பிணை விண்ணப்ப சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தார்.

அதில் யாழ்ப்பாண கல்லூரியின் உப அதிபர் மற்றும் பெண் ஆசிரியரும் இணைந்தே சந்தேகநபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சோடித்தனர் என்று பொருள்பட சட்டத்தரணி மன்றுரைத்திருந்தார்.

இந்ந விடயம் ஊடகங்களில் வெளியாகியதைச் சுட்டிக்காட்டி, பெண் உப அதிபர் ஒருவரை ஆசிரியர் ஒருவர் கடுமையாக அச்சுறுத்தியுள்ளார்.

அந்த ஆசிரியர் கீழ் தரமாக நடந்துகொண்டதால், பெண் உப அதிபர் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என அறிய முடிகிறது.

பாடசாலையில் ஆசிரியர்கள் சிலர் நடந்துகொள்ளும் விதம் தொடர்பில் கல்லூரியின் பழைய மாணவர்கள் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர்.

கல்லூரியின் ஆளுநர் சபையில் ஜனநாயகமில்லை, நிர்வாகத்தில் முறைகேடுகள் என நீடித்த பிரச்சினை, தற்போது சிறுவர் துஷ்பிரயோகங்களாலும் ஆசிரியர்கள் சிலர் மற்றும் பிரதி அதிபர் ஒருவரின் சண்டித்தணங்களால் சீரழிவதாக பழைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here