எனக்கு சிறப்பு சலுகைகள் வேண்டாம்: சிரிய ஜனாதிபதியின் மகன்!

ரோமேனியா நாட்டில் நடைபெறும் கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ள சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் மகன் தனக்கு எந்த ஒரு சிறப்பு அந்தஸ்தும் வேண்டாம் என நிராகரித்திருக்கிறார்.

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி ரோமேனியா நாட்டில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சிரிய நாட்டு ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் மகன் கலந்து கொண்டிருக்கிறார்.

18 நாடுகளில் இருந்து 615 மாணவர்கள் இப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நாட்டின் சார்பாகவும் 6 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களில் சிரிய ஜனாதிபதி ஹபீஸ் அல் ஆசாத்தும் ஒருவர். வரும் சனிக்கிழமை இப்போட்டி நடைபெறுகிறது.

போட்டியில் ஹபீஸ் அல் ஆசாத் கலந்து கொண்டிருப்பது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், “சிரிய ஜனாதிபதியின் மகன் ஹபீஸ் தன்னை மற்ற குழந்தைகள் போல் இயல்பாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். அப்படித்தான் நடந்து கொள்கிறார். தனக்கென சிறப்பாக எந்த வசதியையும் அவர் கோரவில்லை. எந்த ஒரு சிறப்பு நிபந்தனையும் விதிக்கவில்லை. தங்குவதற்குக்கூட தனி அறை கேட்கவில்லை. தன்னைப் போன்ற பிற போட்டியாளர்களுடன் அறையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்“ என்றார்.

ஹபீஸ் அல் ஆசாத் இது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கணிதத்தின் மீது எனக்கு சிறு வயதிலிருந்தே ஆர்வம் அதிகம். இந்த முறை போரினால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து திறமைகளும் வெளிப்படும் என்பதை உணர்த்தவே இந்த கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்திருக்கிறேன் என்றார்.

கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரியோ நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. அப்போதும் ஆசாத் கலந்து கொண்டார். போட்டியில் 528-வது இடத்தைப் பிடித்தார். இந்த முறை இன்னும் சிறப்பான இடத்தைப் பிடிக்கலாம் என ஹபீஸ் நம்புவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here