நல்லூர்ப் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் ஆடைகள் தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என நல்லூர் பிரதேச சபை அமர்வில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
நல்லூர்ப் பிரதேச சபையின் நேற்றைய அமர்வில் குறித்த பிரேரணையை சபை உறுப்பினர் மதுசுதன் முன்மொழிந்தார்.
அவர் தனது பிரேரணையில் தெரிவித்ததாவது- எமது சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் ஆடைகள் தொடர்பில் கல்வி நிலைய இயக்குனர்கள் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஏனெனில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் பலர் உள்ளாடைகள் தெரியக் கூடியவகையில் தமது காற்சட்டைகளை அணிந்து வருகின்றனர். அத்துடன் மாணவிகளும் ஆடைகள் தொடர்பில் கலாசாரத்தை பேண வேண்டும். மாணவர்களுக்கு கல்வியை மட்டும் புகட்டுவதுடன் நின்றுவிடாது ஒழுக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்கள் மாணவர்கள் மீது அக்கறை கட்டாது வெறுமனே பணம் சம்பாதிப்பதிலேயே போட்டித் தன்மையுடன் செயற்படுகின்றன. எனவே இது தொடர்பில் இறுக்கமான நடைமுறையை பின்பற்ற வேண்டும் – என்றார். பிரேரணை சக உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.