புலிகளால்தான் யாழ் கோட்டைக்குள் இராணுவம் வந்தது; உடனடியாக போக முடியாது: ஆளுனர்!

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டியது அவசியமானது. ஏனெனில் விடுதலை புலிகளாலேயே வடக்கிற்கு இராணுவம் வர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கோட்டைக்குள் இராணுவம் அனுமதிக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கோட்டையில் ஆரம்பத்தில் போர்த்துக்கேயரும் பின்னர் டச்சுக்காரர்களும் பின்னர் ஆங்கிலேயரும் இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து இராணுவம் பின்னர் விடுதலைப் புலிகள் இருந்தார்கள்.

தற்போது அங்கு இராணுவம் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் குடாநாட்டுக்குள் போதைவஸ்த்து கடத்தல் அதிகரித்துள்ளது. போதைவஸ்தானது நாட்டுக்குள் கடல் வழியாகவே 80 வீதம் வருகின்றது. 10வீதம் விமானம் மூலமும், 10வீதம் துறைமுகம் ஊடாகவுமே நாட்டுக்குள் வருகின்றது. இதிலும் குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைவஸ்த்து கடத்தல்கள் இடம்பெறுகின்றன.

இவை தவிர பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் மீட்கப்படுகின்றது. அண்மையில் இராமேஸ்வரத்திலும் பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன. எனவே இவற்றை கட்டுபடுத்த வேண்டுமானால் இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டிய தேவையுள்ளது. நாட்டை பாதுகாக்க வேண்டுமானால் அதற்கு தேவையான இடங்களில் இராணுவம் இருக்க வேண்டும்.

ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு பொலிஸாரே இருந்தார்கள். அப்படியானால் எப்படி இங்கே இராணுவம் வந்தது?. 30 வருட யுத்தம் காரணமாகவே இராணுவம் இங்கே வர வேண்டி ஏற்பட்டது. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் படிப்படியாக இராணுவம் வெளியேறி வருகின்றது. அதற்காக ஒரே நேரத்தில் வெளியேற்ற முடியாது.

பொது மக்களது காணிகளை இராணுவத்திடம் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எண்ணமாகும். அதே போன்று சிவில் நடவடிக்கையில் இருந்து இராணுவத்தை நீக்க வேண்டும் என்பதுவும் அரசாங்கத்தின் எண்ணமாகும். அவற்றை படிப்படியாகவே செய்ய முடியும். தற்போது புதிதாக யாரையும் இராணுவத்திற்கு இணைக்கவில்லை. நாம் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.

இவ்வாறான நிலையில் இலங்கைக்குள் கொண்டுவரப்படுகின்ற போதைப் பொருட்களை கட்டுபடுத்த இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டி தேவையுள்ளது என்றார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here