புதிய கட்சி ஆரம்பிக்கவில்லை: கனடாவிற்கு தகவல் அனுப்பிய முதலமைச்சர்!

அரசியல் யாப்பினை இரு இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கினால் மாத்திரமே இலங்கையின் அபிவிருத்தியை உறுதிப்படுத்த முடியுமென இலங்கைகான கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கினிடம் சுட்டிக்காட்டியதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கன் இன்று (11) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற ,ந்த சந்திப்பில், வடமாகாண அபிவிருத்திகள் மற்றும் டொரான்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி உட்பட அரசியல் நிலமைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

இதன்போது, மிக முக்கியமாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவும், அரசியல் யாப்பினைக் கொண்டு வந்தால் நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமா என கனடா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கேள்விஎழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் பதிலளிக்கையில், அரசியல் யாப்பில் ஒரு முக்கியமான விடயத்தினை உள்ளடக்க வேண்டும். 70 வருடங்களாக பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மைச் சமூகத்தினைக் கட்டுப்படுத்தி அவர்களை தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தார்கள்.

அவ்வாறான நிலையே தற்போதும் நடைபெறுகின்றன. ஏனெனில், 1 லட்சத்து 50 ஆயிரம் போர் வீரர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள். பல விதங்களிலும் மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது. இவ்வாறான கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு ஏதாவது அரசியல் ரீதியான விடயங்களைத் தீர்ப்பதென்பது கடினம்.

இராணுவத்தின் கட்டுப்பாடு, அரசாங்கத்தின் கட்டுப்பாடு, வெளியில் இருந்து வருபவர்கள் எம்மைப் பலவிதத்திலும் கட்டுப்படுத்துகின்றார்கள். அதேவேளை, சட்டங்களும் எமக்கு எதிராக இருக்கின்றன. இந்தநிலையில் எவ்வாறான அரசியல் யாப்பினை உருவாக்கித் தருவார்கள் என்றும் சந்தேகம் உள்ளது.

எனவே, அரசியல் யாப்பினை மிக விரைவில் உருவாக்கி, அந்த அரசியல் யாப்பினை இரு இனத்தவர்களும் ஏற்றுக்கொண்டு, முன்னோக்கி நகர்ந்தால், மாத்திரமே இந்த நாட்டின் அபிவிருத்தியை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவருக்கு சுட்டிக்காட்டினேன்.

அதேவேளை, எனது அரசியல் எதிர்காலத்தினைப் பற்றியும் புதிய கட்சி உருவாக்கப் போகின்றீர்கள் என பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளதென்றும் வினவியிருந்தார். அதற்கு என்னிடம் பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு நான், எனது கட்சி என்னை நியமிக்காவிடின், வீட்டிற்குச் செல்வேன், அல்லது இன்னொரு கட்சியுடன் இணையலாம், இல்லாவிடின், ஒரு கட்சியை ஆரம்பிக்க முடியும் என கூறியிருந்தேன். ஆனால், ஊடகங்கள் நான் கூறிய இரு விடயங்களையும் விட்டு, மூன்றாவதாக கூறிய விடயங்களை மட்டும் பெரிதாக கூறிவிட்டன. தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவருக்கு தெரிவித்துள்ளேன்.

காணாமல் போனோர்களின் அலுவலகம் தொடர்பாகவும் வினவியிருந்தார். காணாமல் போனோர்கள் அலுவலகத்தின் தலைவர், சாலிய பீரிஸ் அவரது மனச்சாட்சியின் படி செயற்பட அனுமதிகள் இருக்கா என்பது எனக்கு தெளிவாக கூற முடியாது. காலம் போனதன் பின்னரே காணாமல் போனோர்களின் அலுவலகத்தின் ஊடாக மக்கள் பெற்றுக்கொண்ட நியாயத்தின் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கூற முடியும்.

வடமாகாணத்தில் சட்டமும் ஒழுங்கும் மீறப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றே என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின்றன. ஆனால், பொலிஸார் தமது புள்ளி விபரத்தின் பிரகாரம் அவ்வாறு சட்ட ஒழுங்குகளை சீர்குலைக்கும் வகையில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை என கூறுகின்றார்கள். இருந்தும், ஒரு சில சம்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றினை மறுக்க முடியாது என்றும், அதனை அவரும் ஏற்றுக்கொண்டார். இதேபோன்று தான் தென்பகுதியிலும் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

சட்ட ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். அந்த வருகையின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள சட்ட ஒழுங்குகள் பற்றி விரிவாக ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும், முதலமைச்சர் கனடா தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here