எமது பிரச்சனையை நாம்தான் தீர்க்கலாம்… கூட்டமைப்பு ஏமாற்றுகிறது… மீண்டும் யுத்த சூழலை ஏற்படுத்த முடியாது: யாழில் நாமல்!

மகிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சே அறிவிப்பார் எனவும் அதுவரையில் பொறுமையாக இருக்குமாறு மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நாமல் ராஜபக்ச மதியம் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார்.

அதன்போது, மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவா? கோத்தாபாய ராஜபக்சவா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயதும் காலமும் வரவில்லை. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார். இலங்கையில் வாழும் அனைத்து இன மத மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு வேட்பாளரையே நியமிப்பார். அதுவரையில் பொறுமையாக இருங்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி எனும் பெயரில் அரசின் பங்காளி கட்சியாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சியாக இருந்து வடக்கு மக்களுக்கோ தெற்கு மக்களுக்கோ எதனையும் செய்யவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று தருமாறு கோரிய போது, தான் அரசாங்கத்திடம் வேலை வாய்ப்பு கோர மாட்டேன். அரசியல் தீர்வையே கோருவேன் என பதிலளித்து உள்ளார்.
ஆனால் இதுவரையில் தமிழ் மக்களுக்கு அவர் வேலை வாய்ப்புகளையோ, அரசியல் தீர்வையோ பெற்றுக்கொடுக்க வில்லை.

தொடர்ந்து தமிழ் மக்களை மாத்திரமன்றி நாட்டில் உள்ள அனைத்து இன மத மக்களையும் ஏமாற்றி வருகின்றார். இந்த நாட்டு மக்களுக்காக எதிர்கட்சியாக இருந்து எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

இந்த நாட்டில் மீண்டும் யுத்தம் நடந்தால் அதில் சண்டையிட்டு உயிரிழக்க போவது இந்த நாட்டின் இளைஞர்கள் யுவதிகள் , மக்களே மீண்டும் அவ்வாறான ஒரு சூழலை உருவாக விடமுடியாது.

நாங்கள் எக்காலத்திலும் தீவிரவாதிகளுடன் இனைந்து அரசியல் செய்ததில்லை. அவர்களை நாங்கள் எப்போதும் ஆதரித்ததும் இல்லை. அதனால் தீவிரவாதிகளை நாம் ஏற்போது ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டோம்.

எமது நாட்டு பிரச்சனையை நாம் தான் தீர்க்க வேண்டும். அமெரிக்கா, இந்தியா என அந்த நாட்டு பரிந்துரைகளையும், அவர்களின் சிபாரிசுகளையும் கொண்டு எமது நாட்டு பிரச்சனையை தீர்க்க முடியாது. அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை
எமது நாட்டு பிரச்சனையை எமது நாட்டில் வாழும் மக்கள் இணைந்தே தீர்க்க முடியும் என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here