கருணா பாணியில் உண்ட வீட்டுக்கு இரண்டகம்: கட்சி தாவினார் கோடீஸ்வரன்!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய அரசியலில் மீண்டுமொரு துரோகம் இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிய க.கோடீஸ்வரன், கட்சிக்கு தெரியாமல் அந்தர் பல்டியடித்து தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

3 கட்சிகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள், அடிப்படை அரசியல் அறமாக பேணப்பட வேண்டிய- வசதி வாய்ப்புக்களிற்காக கூட்டமைப்பிற்குள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவுபவர்களை உள்ளீர்ப்பதில்லையென்ற விடயத்தை துளியளவும் கணக்கிலெடுக்காமல்- வாக்கிற்காக எதையும் செய்ய தயாரென்ற பாணியில் இலங்கை தமிழ் அரசு கட்சி நீண்டகாலமாக செயற்பட்டு வருவது, மீண்டுமொரு முறையும் அரங்கேறியுள்ளது.

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியின் மூலம் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்று, பின்னர் வசதி வாய்ப்பிற்காக சிவமோகன், ரவிகரன் போன்றவர்கள் முன்னர் கட்சி தாவிய வரிசையில், தற்போது கோடீஸ்வரனும் கட்சி தாவியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் இன்று பெரும் பூகம்பத்தை கிளப்பியது. இது தொடர்பில் அம்பாறையிலுள்ள கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்துடன் பேசினார்.

அம்பாறை வேட்பாளர் விவகாரம் ஆராயப்பட்டபோது, ரெலோ தமது தரப்பில், தமது கட்சி உறுப்பினரான கோடீஸ்வரனின் பெயரையும், மேலும் இருவரையும் பரிந்துரைத்தது. உடனே, மாவை சேனாதிராசா, அவர் எமது வேட்பாளர் என்றார்.

ரெலோ தரப்பினர் கடுமையாக தர்க்கப்பட்டு, அவர் எமது கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியாதா என கேட்டனர்.

அப்படியென்றால், கோடீஸ்வரனையே கேளுங்கள் என மாவை சொல்ல, செல்வம் அடைக்கலநாதன் தொலைபேசியில் கோடீஸ்வரனை தொடர்பு கொண்டார். இதன்போது, கட்சி தாவியதை கோடீஸ்வரன் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, “கட்சிக்கு துரோகம் செய்துள்ளாய், நீயெல்லாம் ஒரு மனிதனா?“ என ஒருமையில் கடுமையாக அர்ச்சனை செய்துள்ளார். பதிலளிக்க முடியாமல் திண்டாடிய கோடீஸ்வரன் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டார்.

இல்லைத் தம்பி, பொறுங்கள் தம்பி, பார்ப்போம் தம்பி என சப்பைக்கட்டு கட்டிய மாவை, அவர் 2 மாதங்களின் முன்னரே தமிழ் அரசு கட்சிக்கு தாவப் போகிறேன், அந்த தகவலை வெளியில் கசிய விட வேண்டாம், கட்சி பிரமுகர்களின் சில தேர்தல் செலவுகளை அவர் ஏற்பதாக கூறியுள்ளார், அதனால் கட்சிக்குள் எடுத்துள்ளோம் என சமாளித்துள்ளார்.

இதையடுத்து ரெலோ மூன்று வேட்பாளர்களை கோரியது. மாவை இரண்டு வேட்பாளர்களையே ஒதுக்கலாமென்றார். எனினும், ரெலோ அதற்கு உடன்படவில்லை. இதையடுத்து, ரெலோவிற்கு 3 வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டது.

இதேவேளை, கட்சி தாவி, தமிழ் அரசு கட்சிக்குள் கோடீஸ்வரன் ஆசனம் எடுத்திருந்தாலும், கடந்த 7ம் திகதி திருகோணமலையில் நடந்த ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்திலும் கோடீஸ்வரன் கலந்து கொண்டிருந்தார். கட்சியின் தவிவாளராக இருந்த சிவாஜிலிங்கம் வெளியேறியிருந்ததால், பிரதி தவிசாளர் கோடீஸ்வரன் தலைமையிலேயே அன்றைய கூட்டம் நடந்தது.

அன்றைய கூட்டத்தில், தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்களை நீங்களா நியமிக்கிறீர்கள் என இரண்டு முறை ஹென்ரி மகேந்திரன், கோடீஸ்வரனிடம் வினவினார். இரண்டுமுறையும் கோடீஸ்வரன் மறுத்தார்.

அன்றைய கூட்டத்தில் அம்பாறையில் போட்டியிடுவது பற்றியும் விவகாதிக்கப்பட்டது. அங்கு தமிழ் மக்கள் அதிகம் உள்ள திருக்கோவில், ஆலையடி வேம்பு பகுதிகளில் கோடீஸ்வரன் தவிர்ந்து இன்னொரு வேட்பாளரையும் களமிறக்கலாமென கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டபோது, கோடீஸ்வரன் அதை கடுமையாக எதிர்த்தார். அந்த பகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் தான் தோல்வியடைவேன் என சொன்ன கோடீஸ்வரன், அங்கு வேட்பாளர்களை நிறுத்தினால் தேர்தலில் போட்டியிடாமல், கட்சியிலிருந்து ஒதுங்கி விடுவேன் என கோடீஸ்வரன் குறிப்பிட்டார். இதையடுத்து, அந்த வேட்பாளர்களை ரெலோ தவிர்த்துக் கொண்டது.

தனது பகுதிகளில் வேறு வேட்பாளர்களை நிறுத்தாமல் தவிர்க்கவே, அன்றைய கூட்டத்தில் கோடீஸ்வரன் கலந்து கொண்டாரா என்ற சந்தேகம் கட்சிக்குள் எழுந்துள்ளது.

இதேவேளை, கடந்த அரசில் ஏற்பட்ட 52 நாள் ஆட்சி மாற்றத்தின்போது, கோடீஸ்வரன் உள்ளிட்ட சில தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுடன் மஹிந்த தரப்பு பேச்சு நடத்தி வந்தது. அவர்கள் கட்சி தாவக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த காலகட்டத்தில் கட்சி தாவக்கூடும் என எதிர்பார்க்கும் வேட்பாளர் பட்டியடிலான்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐ.தே.க தலைமையிடம் வழங்கியிருந்தது. இதையடுத்து, அந்த பிரமுகர்கள் பெருமளவு “அனுகூலத்தை“ பெற்றதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here