கீரிமலை மெய்கண்டார் ஆதீனம் மாசி மகம் அன்று மீளுருவாக்கம்


கீரிமலை மெய்கண்டார் ஆதீனம் மீள் உருவாக்கம் பெற்று 3 ஆம் குருமகா சந்தானமாக தவத்திரு உமாபதி சிவம் அடிகளார் பதவியேற்கும் நிகழ்வு மாசி மகம் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) கீரிமலை குழந்தைவேல் சுவாமி சிவாலய ஈழத்து தமிழ் சித்தர் பீடத்தில் இடம் பெற்றது.

அகில இலங்கை சைவ மகா சபையின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், தென் கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாரால் உமாபதி சிவம் மூன்றாம் குருமகா சந்தானமாக சிவஞான தீக்கை வழங்கி திருநிலைப்படுத்தப்பட்டார். சிவத்தமிழ் சிவாச்சாரியார்கள் பன்னிருவர் இணைந்து மேற்கொண்ட செந்தமிழ் யாகத்துடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த துறவிகள், குருமார்கள், ஆலய தர்மகர்த்தாக்கள், கல்வியியலாளர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், சிவதொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களை உள்ளடக்கி 20 பேர் அடங்கிய ஆதீன செயலணியும் உருவாக்கப்பட்டது.

மெய்கண்டார் ஆதீனம் தமது ஆன்மீக மனித நேயத் தளங்களில் சிறப்பாக பணியாற்றுவதற்கான செயற்றிட்டங்களை இச் செயலணியினர் தயாரித்து வழங்கி சைவத் தமிழர்களின் வாழ்வியலில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவர் எனவும் இங்கு கூறப்பட்டது.

இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியர் சிறி.சற்குணராசா, இங்கு கருத்து தெரிவிக்கையில், மெய்கண்டார் ஆதீனத்தின் மீள் உருவாக்கம் சைவர்கள் தங்கள் மண்ணில் தம் பாரம்பரியத்தை காக்கும் வரலாற்று தேவையை நிறைவுசெய்ய இன்றியமையாதது எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here