சொந்தப்பிரச்சனைக்காக மாகாணசபையை சீரழிக்காதீர்கள்: டெனீஸ்வரனிடம் வினயமாக கேட்ட சிவாஜி; தூக்கியெறிய சொன்ன அஸ்மின்!

“மாகாணசபைக்குள் முன்வரிசை கதிரையில் இருக்க வேண்டுமென்பதுதான் டெனீஸ்வரனின் ஆசையெனில், எனது முன்வரிசை கதிரையை விட்டு தருகிறேன். சம்பளத்தை எதிர்பார்த்து, மாகாணத்தின் அதிகார பகிர்வை கேள்விக்குட்படுத்தாதீர்கள்“ என நேற்று மாகாணசபைக்குள் வினயமாக வேண்டுகோள் விடுத்தார் எம்.கே. சிவாஜிலிங்கம்.

சிவாஜிலிங்கம் இப்படி உரையாற்றிய போது, டெனீஸ்வரன் விவகாரத்தை வைத்து மாகாணசபையில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுகொண்டிருக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கடும் இடையூறு விளைவித்தனர். எனினும், அவர்களையெல்லாம் சமாளித்து, சிவாஜிலிங்கம் உரையாற்றினார்.

“டெனீஸ்வரனின் அமைச்சர் விவகாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த தடை உத்தரவிற்கு எதிராக முதலமைச்சரினால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இரண்டுவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்ப்பு கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.

இலங்கையின் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் நடவடிக்கைகள் பற்றி நாங்கள் இதில் விவாதிக்க முடியாது. கருத்து சொல்லவும் நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இலங்கை அரசின் அரசமைப்புக்கு கீழே நீதித்துறை எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டிருந்தது என்பதை எங்களால் சொல்ல முடியும்“ என்றார்.

இதன்போது அவரை உரையாற்ற விடாமல் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் கே.சயந்தன் குறுக்கீடு செய்தார். “நீதித்துறையை அவ்விதமாக குறிப்பிடுவதை சபை நடவடிக்கைகளில் எவ்விதம் நீங்கள் கையாள போகிறீர்கள்?“ என அவைத்தலைவரையும் இதற்குள் இழுத்து விட முயன்றார்.

இதனால் சூடாகிய சிவாஜி-“நீதித்துறையை விமர்சித்ததற்கு நடவடிக்கை எடுப்பதானால் எடுங்கள். நான் சிறை செல்லவும் தயார்“ என்று எகிறினார்.

பின்னர் உரையை தொடர்ந்தார். “அரசமைப்பை மிக பாரதூரமான நிலைமைக்கு இந்த தீர்ப்பு கொண்டு வந்துள்ளது.  டெனீஸ்வரன் தான் பதவி நீக்கப்பட்டது தவறு என்று கருதியிருந்தால், அதை அவர் கட்சிக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அவர் கட்சிக்கு தெரியப்படுத்தவில்லை.

அவர் ரெலோ சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டே சபைக்கு வந்தார். ஆனால் அவர் சார்ந்த கட்சி அவரை பரிந்துரைக்காத போதும், முதலமைச்சர் அவரை அமைச்சராக்கினார். ஆனால் இன்று அவர் சார்ந்த கட்சி மூன்று வருடங்களிற்கு அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தியிருக்கிறது.

அவரது நடவடிக்கைகள் பற்றி நான் இங்கு கதைக்கவில்லை. அவர் பதவி நீக்கப்பட்டது குறித்தோ, பதவியில் தொடர்வது குறித்தோ கட்சியுடன் பேசவில்லை. அதனால்தான், அவருடைய தனிப்பட்ட, தன்னிச்சையான நடவடிக்கைகள் என்று குறிப்பிட்டேன். அவரது நடவடிக்கைகளில் கட்சிக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது. எம்மை பொறுத்தவரை முதமைச்சரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளோம். அவர் பொறுப்பை முன்னெடுக்கிறார். அதில் நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நீங்கள் இன்று கௌரவ பிரச்சனையாக பார்த்து, மாகாண அதிகார பகிர்வை கேள்விக்குட்படுத்துகிறீர்கள்.

24 மணிநேரத்தில் ஒரு அமைச்சரை நியமிக்க, நீக்க முதலமைச்சருக்கு அதிகாரமுள்ளது. முதலமைச்சர் ஒரு சிபாரிசை ஆளுனருக்கு செய்தால், நிச்சயம் அமைச்சரை நீக்க முடியும்.

ஆகவே நீங்கள் இந்த இடைப்பட்ட காலத்திற்கான சம்பள கொடுப்பனவிற்காக அல்லது ஏனைய கொடுப்பனவுகளை எதிர்பார்த்தோ, இதை கௌரவ பிரச்சனையாக பார்த்தோ மாகாண அதிகார பகிர்வை கேள்விக்குட்படுத்தாமல், மக்கள் நலன் சார்ந்து செயற்படுங்கள். டெனீஸ்வரன் முன்வரிசையில் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், எனது ஆசனத்தை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்“ என்றார்.

டெனீஸ்வரன் விவகாரத்தை வைத்து நேற்று முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுக்க தமிழரசுக்கட்சி அணி தயாராக வந்திருந்தபோதும், நின்று சிவாஜிலிங்கம் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார். இதனால் எரிச்சலடைந்த நிலையிலேயே தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சிவாஜிலிங்கத்தை கடுமையாக விமர்சித்தனர். சிறப்பு அமர்விற்கு கையெழுத்து திரட்டிய இன்னொரு உறுப்பினரான அயூப் அஸ்மின்- “படைக்கல சேவிதர்களின் மூலம் சிவாஜிலிங்கத்தை குண்டுக்கட்டாக தூக்கி, சபைக்கு வெளியில் எறியுங்கள்“ என அவைத்தலைவரிடம் ஒரு கட்டத்தில் கோரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here