மாடு கடத்தி கையும் மெய்யுமாக சிக்கிய புதுக்குடியிருப்பு பொலிஸ் உத்தியோகத்தர்!

முல்லைத்தீவிலிருந்து ஐந்து மாடுகளை திருடி திருகோணமலைக்கு கடத்திச் செல்ல முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கிப் பிடித்துள்ளனர்பொலிசார். கடத்தலிற்கு  பயன்படுத்தப்பட்ட வாகனமும், கடத்தப்பட்ட ஐந்து மாடுகளையும் பொலிசார் மீட்கப்பட்டன. துப்பாக்கிச் சூட்டை அடுத்து வாகனத்தில் இருந்த இருவரும் தப்பியோடி விட்டனர். பொலிஸ் உத்தியோகத்தர் மட்டுமே சிக்கிக் கொண்டார்.

நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு முல்லைத்தீவு- முள்ளியவளை மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்து மாடுகள் திருடப்பட்டு கடத்தப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உசாரடைந்த பொலிசார் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை மறித்து சோதனையிட்டனர்.

இதன்போது கொக்கிளாய் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கப் ரக வாகனத்தை இரவு 11 மணியளவில், கொக்குளாய் வீதியில் நாயாற்று பாலத்தை அண்மித்த கோம்பாய் சந்தியில் கடமையில் இருந்த பொலிசார் மறித்தனர். எனினும் வாகனம் நிற்காமல் வேகமாக தப்பிச் சென்றது.

இதனையடுத்து விரட்டிச் சென்ற பொலிசார் வாகனத்தின் சக்கரத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் சக்கரங்கள் காற்றுப்போய் வாகனம் சிக்கிக் கொண்டது. இதனை அடுத்து அந்த வாகனத்தில் இருந்த மூவரின் இருவர் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார்.

சிக்கியவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர். விசாரணையின் பின்னர் அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here