நம்பிக்கையில்லா தீர்மானம் தொடக்கம் சிறப்பு அமர்வு வரை: ஒரே முகங்கள்… ஒரே திட்டம்!

டெனீஸ்வரன் விவகாரத்தை ஆராய எதிர்வரும் 16ம் திகதி மாகாணசபையின் விசேட அமர்வு நடக்குமென அவைத்தலைவர் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சருக்கு நெருக்கடி கொடுக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியே இது.

டெனீஸ்வரன் விவகாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த மாதம் 29ம் திகதி வெளியானதும், வடக்கு மாகாணசபையை அவசரமாக கூட்டி, முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுக்க தமிழரசுக்கட்சி தீர்மானித்திருந்தது. சபையை கூட்டும் நடவடிக்கைகளை பொறுப்பேற்றிருந்த மாகாணசபை உறுப்பினர்கள் சயந்தன், அஸ்மின் இருவரும் அனைத்து உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு, சபையை கூட்டும் கோரிக்கை கடிதத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொண்டனர்.

அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடனும் இது தொடர்பில் கலந்துரையாடினார்கள். எனினும், மாகாணசபையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அனுபவம் எல்லோருக்கும் நினைவிருந்தது. அப்போதும் அஸ்மின், சயந்தன் அணியே குழப்பத்தின் ஆணி வேராக இருந்தது என்பதை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தோம்.

அவர்களை நம்பி மீண்டும் களமிறங்க உறுப்பினர்கள் தயாராக இருக்கவில்லை. அதனால் கையெழுத்திட தயங்கினார்கள். பெரும்பான்மை உறுப்பினர்களின் கையெழுத்துடன் வந்தால் சபையை கூட்ட தயாராக இருப்பதாக சிவஞானமும் கூறியிருந்தார்.

எனினும், உறுப்பினர்கள் யாரும் அதில் கையெழுத்திடவில்லை. சயந்தன், அஸ்மின் ஆகியோரின் இரண்டு கையெழுத்துக்கள் மட்டுமே இடப்பட்டிருந்தன.

இந்தநிலையில், இன்றைய அமர்வில் அமைச்சரவை விடயம் குறித்து முதலமைச்சர் சபையில் விளக்கமளித்த பின்னரும், சயந்தன் மற்றும் அஸ்மின் ஆகியோர் உறுப்பினர்களின் கையொப்பத்தை திரட்டி, சிறப்பு அமர்வை கோரினர்.

இன்று சபையில் 23 உறுப்பினர்கள் இருந்த சமயத்திலேயே இவர்கள் இருவரும் கையெழுத்தை சேகரித்தனர். 23 உறுப்பினர்களில் அனந்தி, சிவநேசன், குணசீலன், ஐங்கரநேசன் தவிர்ந்த மிகுதி அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டனர். கையெழுத்திட்டவர்களில் சிவாஜிலிங்கம், குகதாஸ், விந்தன் கனகரட்ணம் உள்ளிட்ட ரெலோ உறுப்பினர்களும் உள்ளடங்குகிறார்கள்.

இந்த பட்டியலில் முதலாவது ஆளாக ப.சத்தியலிங்கம் கையெழுத்திட்டுள்ளார்.

ஏற்கனவே மாகாணசபைக்குள் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வந்ததையொத்த நகர்வாகவே இன்றைய சிறப்பு அமர்வு கோரிக்கையும் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here