ரெலோவின் தலைமைக்குழு நாளை கூடுகிறது!


தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் நாளை (7) காலை திருகோணமலையில் இடம்பெறுகிறது.

கடந்த பல மாதங்களாக கட்சியில் செயலாளர், தவிசாளர் இல்லாமல் ரெலோ இயங்கி வரும் நிலையில், நாளை தற்காலிக செயலாளர், தவிசாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என தமிழ்பக்கம் அறிந்தது. அத்துடன், வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவுள்ளனர். அத்துடன், கட்சியின் வெளிநாட்டு கிளைகளில் இருந்து நிதியை பெறுவது பற்றியும் ஆலோசிக்கப்படவுள்ளது.

தமிழ்பக்கத்துடன் பேசிய கட்சியின் கிழக்கு பிரமுகர் ஒருவர், நாளை சில சர்ச்சைக்குரிய விடயங்கள் விவாதிக்கப்படும் என்றும் எதிர்வுகூறினார்.

ரெலோவின் கணக்கு அறிக்கைகள் எதுவும் கடந்த இரண்டு வருடங்களாக தேர்தல்கள் செயலகத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. கட்சியின் பொருளாளர் கோவிந்தன் கருணாகரம் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்படவில்லையா அல்லது கட்சி பிரமுகர்களின் இணக்கத்துடன் அப்படி நடந்தாரா என்ற கேள்வி கட்சிக்குள் எழுந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல், பொன்விழா, 10வது தேசிய மாநாட்டு சமயங்களில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு நிதி அனுப்பப்பட்டிருந்தது. ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கவினால் வழங்கப்பட்ட நிதியுமிருந்தது. அது குறித்த விபரங்கள் கட்சியின் செயற்குழுவிற்கோ, தலைமைக்குழுவிற்கோ வழங்கப்படவில்லையென அந்த பிரமுகர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாளை தலைமைக்குழு தற்காலிய செயலாளர், தவிசாளரை நியமிப்பது யாப்பு விதிகளை மீறும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பொதுக்குழுவை கூட்டியே, இந்த நியமனங்கள் வழங்கப்படலாமென்ற போதும், அங்கு கேள்வியெழும் என்பதற்காக தலைமைக்குழுவில் இந்த நியமனங்கள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், தற்காலிக செயலாளரால் ஆவணங்களில் கையெழுத்திட முடியாதென்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here