சென்னை பெரு வெள்ளம் மனிதர்களால் ஏற்பட்ட பேரழிவு: தணிக்கைத்துறைத் தலைவர் அறிக்கையில் குற்றச்சாட்டு

அனுமதியற்ற கட்டுமானங்கள், ஆக்கிரமிப்பு அதிகரித்தல், தனியார் நிலம் மூழ்காமல் பாதுகாத்தது போன்ற காரணங்களால் சென்னை யில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று மத்திய தணிக்கைத்துறை தலைவர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை மற்றும் புறநகரில் ஏற்பட்ட பெரு வெள்ளம் 289 உயிர்களை பலிகொண்டது. 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. மின்சாரம், தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பல நாட்களுக்கு மாநகரம் முடங்கியது. அதற்கான காரணங்கள் குறித்து மத்திய தணிக்கைத்துறை தலைவர் அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக குளங்கள், ஏரிகள், ஆற்றுப்படுகைகள் ஆகியவற்றில் இருந்த ஆக்கிரமிப்புகள், இந்த பெரு வெள்ளத்தை ஏற்படுத்துவதில் பெரும்பங்காற்றியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏரி ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த 2007-ல் சட்டம் இயற்றப்பட்ட போதும், ஆக்கிரமிப்பு சதவீதம் உயர்ந்தது.

புதிய வாய்க்கால்கள் அமைத்தல், இருக்கும் வாய்க்கால்களை புதுப்பித்தலுக்காக எடுக்கப்பட்ட 8 திட்டங்கள் ஆக்கிரமிப்புகள், துறைகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு இல்லாததால் முடிக்கப்படவில்லை. மழைநீர் வடிகால் அமைப்புகள் சரியாக இல்லாதது, நீர் வழிகளை தூர்வாரும் பணிகள் மழைக்காலத்துக்கு முன்பு தொடங்கப்படாததும் வெள்ளம் ஏற்பட்டதற்கு காரணமாகும். பெரிய ஏரியான செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்துக்கு, நீர்வரத்து பற் றிய அறிவியல்பூர்வ முன்னறிவிப்பு மற்றும் வெள்ளம் பற்றிய நிகழ்நிலை முன்னறிவிப்பு அமைப்புகள் இல்லை. மேலும், நீர்த்தேக்கத் தில் இருந்து வெளியேறிய நீரின் அளவு, நீர்வரத்தை விட அதிகமாக இருந்ததால், அடையாற்றுக்குள் விடுவிக்கப்பட்ட நீரின் அளவு வரன்முறைப்படுத்தப்படவில்லை.

2015-ம் ஆண்டு டிசம்பர் 1 அன்று கரையை ஒட்டிய பகுதியில் சட்டத்துக்கு முரணாக அனுமதிக்கப்பட்ட தனியார் நிலங்கள் நீரில் மூழ்காமல் பாதுகாக்க நீர்வளத்துறை விரும்பியதால், ஏரி யின் மொத்த கொள்ளளவான 3,645 டிஎம்சிக்கு பதில் 3,481 டிஎம்சி நீர் இருப்பு வைக்கப்பட்டது.

மேலும், 21 மணி நேரத்துக்கு வரத்தை விட அதிகமாக, விநாடிக்கு 29 ஆயிரம் மில்லியன் கனஅடி நீரை வரைமுறையின்றி வெளியேற்றியதால், மத்திய அணைகள் பாதுகாப்பு நடைமுறைகளின்படி, இந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு உண்டானது.

மின் உற்பத்தி இழப்பு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் வருடாந்திர பராமரிப்பு பணியை மேற்கொள்ளாததால் கட்டாய பணி நிறுத்தங்கள் காரணமாக ரூ.749 கோடி மதிப்புள்ள 2,491 மில்லியன் மின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் ரூ.10.29 கோடி வட்டி செலவு ஏற்பட்டது. பொது விநியோக திட்டத்துக்குரிய கோதுமையை விதிமுறைகளை மீறி, அம்மா உணவகத்துக்கு பயன்படுத்தப்பட்டது கண்டறி யப்பட்டுள்ளது.

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தேவைக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு காலாவதியானதால் ரூ.16.17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை மருத்துவக் கல்வி இயக்ககம் பின்பற்றாதது, மருந்துகளின் தேவைப்பாட்டினை சரிப்பார்ப்பதில் கவனக்குறைவு, மருந்து கொள்முதலை கட்டுப்படுத்தா தது இழப்புக்கு வழிவகுத்துள்ளது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் மூல உயிரணு ஆராய்ச்சி மையத்தை அமைப்பதில் ரூ.2.70 கோடி பயனற்ற செலவினம் ஏற்பட்டுள்ளது. ஆராய்சி மானியம் ரூ.5.77 கோடி பெறப்படவில்லை. அரசுக்கு ரூ.5.49 கோடி கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் 2015 ஜனவரி முதல் 2017 ஜூலை வரையில் ரூ.17.94 கோடி காப்பீட்டு தொகைக்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இதனால் தவிர்த்திருக்கக் கூடிய ரூ.10.82 கோடி கூடுதல் செலவின சுமை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் மொத்த பணியிடங்கள் 1660. அதில் 803 பணியிடங்கள் (48 சதவீதம்) நிரப்பப்படாமல் உள்ளன. பணியாளர்கள் பற்றாக்குறையால் மாநகராட்சியின் வரி வசூல் மற்றும் மக்களுக்கான சேவை வழங்குவதில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பாதாள சாக்கடை திட்டப் பணிகளை செயல்படுத்தும்போது, கடன் மானிய விகிதத்தை பின்பற்றாததால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.58 கோடி நிதி சுமை ஏற்பட்டுள்ளது. 3 திட்டங்களில் மெதுவான முன்னேற்றம் காரணமாக ரூ.37 கோடியே 43 லட்சம் அளவுக்கு இந்திய அரசின் பங்கை இழந்தன.

ரூ.302.55 கோடி மதிப்புள்ள மணல்

மணல் குவாரிகளில் மணல் எடுக்க 2014- டிசம்பர் – 2017 மார்ச் வரையில் 5 குவாரிகளில் 1,05,158 அனுமதிச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த அனுமதிச் சீட்டுகளை பயன்படுத்தி 19,021 வாகனங்களில் மணல் கொண்டு செல்லப்பட்டது. இந்த வண்டிகளில் 7,906 வண்டிகளின் பதிவு எண் விவரங்களை மாநில போக்குவரத்து துறை மற்றும் மோர்த் (MORTH)-ன் தகவல் விவரக் குறிப்புடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஒப்பாய்வு மூலம் 7,906 வண்டி எண்ணகளில் 3,381 வண்டிகள் (42.76 சதவீதம்) போக்குவரத்து லாரிகள் என்று பதிவு செய்யப்படாமல் இருசக்கர, ஆட்டோ, கார் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், 2014-15 முதல் 2016-17 வரையில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.302.55 கோடி மதிப்புள்ள 36.11 லட்சம் லாரி லோடு மணல் கொண்டு சென்ற 16,178 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கட்டுமான பணியாளர்கள் நலவாரியத்துக்கு ரூ.14.63 கோடி சட்ட விதிகளுக்கு புறம்பாக செலுத்தப்படாமல் உள்ளது. பணியின் முன்னேற்ற போக்கை கண்காணிப்பதில் குறைவு மற்றும் சுற்றுலாத் துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பயன்பாட்டு சான்றிதழை தமிழக அரசு தாமதமாக அளித்ததால், மத்திய அரசின் நிதி ரூ.17.40 கோடி கிடைக்கப் பெறவில்லை. இவ்வாறு தணிக்கைத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here