மாவை, சம்பந்தன் போன்ற துள்ளும் மீன்களை விட்டு, நெத்தலி விஜயகலாவிற்கு தண்டனையா?: கொதிக்கிறார் சங்கரியார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டிலிருந்து விடுதலைப்புலிகளின் ஏக பிரதிநிதிகள், அவர்களின் இலட்சியத்தை முன்னெடுப்போம் என தெரிவித்து தேர்தல்களில் போட்டியிட்டார்கள். அவ்வாறு போட்டியிட்டு அதன் பின்னர் இடம்பெற்ற கொலைகள், உயிரிழப்பு, சொத்திழப்பு அனைத்திற்கும் காரணமாகவும் சம்பந்தனும், சேனாதிராஜாவும் இருந்துள்ளார்கள். இந்த நிலையில் அவ்வாறானவர்களை விட்டுவிட்டு ஏன் விஜயகலாமீது நடவடிக்கை எடுக்க தென்னிலங்கை மக்கள் கொந்தளிக்கின்றனர் என இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பினார்.

இன்று காலை 11 மணியளவில் தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த ஆனந்தசங்கரி- விஜயகலா ஒருதாய். குறித்த காலப்பகுதியில் சிறுமியின் கொலை சம்பவம் அதிகம் பேசப்பட்டு வந்தது. இந்த சூழலில் அமைச்சர்கள் பலர் அங்கு சென்று வந்தனர். இந்த நிலையில் தன்னை அடக்கிகொள்ள முடியாத நிலையில் விஜயகலா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இது ஓர் தவறு கிடையாது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் குற்ற செயல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. குற்றம் செய்வோர் அச்சத்துடன் இருந்தார்கள். அதனால் குற்றம் இடம்பெறவில்லை.

இந் நிலையில் விஜயகலா உணர்ச்சிவசப்பட்டு, தான் வகிக்கும் ராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து எதையும் செய்ய முடியவில்லையே என எண்ணி கூறிய ஆதங்க கருத்தினை வைத்து, தமது அரசியலிற்காக இவ்வாறு செயற்படுவது பொருத்தமல்ல. துள்ளும் மீன்களை விட்டுவிட்டு நெத்தலி போன்றவற்றிற்கு தண்டனை வழங்குவது பொருத்தமல்ல. விஜயகலாவிற்கு ராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க, தான் சிபாரிசு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் அண்மையில் எதிர்கட்சி தலைவர் யாழ் வந்தபோது விடுதலை புலிகளின் செயற்பாடுகள் நியாயமானது போன்றதொரு கருத்தினை தெரிவித்தமைக்கு நடவடிக்கை எடுக்காத அரசு, விஜயகலா அவர்களின் கருத்திற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மக்கள் பல்வேறு விதமாக கருத்து தெரிவிக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என வினவியபோது, அதைதான் நானும் கேட்கின்றேன். சம்பந்தனும், சேனாதிராஜாவும் பேசியதை கருத்தில்கொள்ளாதவர்கள் அவரை எதிர்கட்சி பதவியில் வைத்து அழகு பார்க்கும் நிலையில், இவரது கருத்திற்கு எதிர்ப்பது தொடர்பில் மக்கள் ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சிறிதரன் அவர்கள் பாராளுமன்றில் அரசு தீர்வு வழங்காவிடின் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது. இவ்வாறு பேசுபவர்கள் வெறும் கதிரைகளிற்கு பேசுவார்கள். உண்மையில் தமிழ் மொழிபெயர்ப்பை நீண்ட நேரம் கேட்க முடியாது. பலர் கழட்டி வைப்பார்கள், இன்னும் பலர் வெளியே சென்றுவிடுவார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெறும் கதிரைகளிற்கு இவ்வாறானவர்கள் பேசுவார்கள். அதேபோன்று கிராமபுறங்களில் மக்களின் கைதட்டலிற்காகவும், வாக்குகளிற்காகவும் இவ்வாறு உணர்ச்சிவசப்படும் வார்த்தைகளை பேசுவார்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சேனாதிராஜா ஆகியோர்தொடர்பில் பெரும் விமர்சனங்களை முன்வைத்தார். சேனாதிராஜா தலைவர் ஆவதற்காக எதையும் செய்ய தயாராவார் எனவும், தமிழரசு கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here