டெனீஸ்வரன் விவகாரத்தில் மீண்டும் ஆவணங்களை சமர்ப்பிக்க முதலமைச்சர் தரப்பிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

வடக்கு அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்கியதற்கு இடைக்கால தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடைவிதிக்க கோரி, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தரப்பினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கப்படாததால், அவற்றை மீண்டும் முறைப்படி சமர்ப்பிக்கும்படி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பு தொடர்புடைய இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து, இன்று அல்லது நாளை வழக்கு விசாரணையை நடத்தும்படி முதலமைச்சர் சார்பில் கோரப்பட்டிருந்தது.

சின்னத்துரை சுந்தரலிங்கம் பாலேந்திரா சட்ட நிறுவனம் ஊடாகவே முதலமைச்சர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். முதலமைச்சர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மூல ஆவணங்கள் இணைக்கப்படாமல், நகல்களே இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூல ஆவணங்களை இணைத்து, மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய முதலமைச்சர் தரப்பு இந்த வார இறுதிவரை கால அவகாசத்தை எடுத்து கொண்டால், வரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமைகளில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் சாத்தியமுள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here