டெனீஸ்வரனிற்கு திடீர் ஏமாற்றம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு இது!

பா.டெனீஸ்வரன் விவகாரத்தில் முதலமைச்சர் தரப்பு கோரிய இரண்டு வார காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதென முதலமைச்சர் தரப்பு சுட்டிக்காட்டியதையடுத்து, இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம்- அந்த இரண்டு வாரகால அவகாசத்தில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பிற்கு இடையூறாக செயற்பட கூடாதென்றும் அறிவுறுத்தியுள்ளது.

அமைச்சு பதவியிலிருந்து தன்னை நீக்கியதற்கு எதிராக டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணையில் கடந்த 29ம் திகதி அதிரடி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. பா.டெனீஸ்வரனை பதவிநீக்கியதை தடைசெய்து இடைக்கால தடை விதித்திருந்தது. அத்துடன் இன்று (09) அடுத்த தவணைக்கு ஒத்திவைத்திருந்தது.

இன்றைய வழக்கு விசாரணையின்போது, தன்னை அமைச்சு பதவியில் செயற்பட விடாமல் தடைசெய்யப்படுவதாக டெனீஸ்வரன் தரப்பில் முறையிடப்பட்டது.

எனினும், புதிய அமைச்சரவையை நியமிக்க ஆளுனர் தரப்பில் ஒரு மாத காலஅவகாசம் கோரப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் இரண்டு வார காலஅவகாசத்தை முதலமைச்சர் தரப்பு கோரியது.

இதையெல்லாம் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்- ஆளுனர் கோரிய ஒரு மாத அவகாசத்தை நிராகரித்து, இரண்டு வார அவகாசம் வழங்கியது. புதிய அமைச்சரவை தொடர்பில் அதற்குள் தெளிவான முடிவை அறிவிக்கும்படி உததரவிட்டது.

இந்த காலத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தைவிட உயர்ந்த நீதிமன்றங்கள் ஏதாவது (முதலமைச்சர் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியதால்)  இந்த தீர்ப்பில் மாற்றங்கள் செய்தால், அதன்படி செயற்படும்படியும், அப்படியான உத்தரவுகள் ஏதாவது கிடைக்காத பட்சத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு செல்லுபடியாகுமென்றும், அதற்கு யாரும் இடையூறாக இருக்ககூடாதென்றும் உத்தரவிட்டது.

முதலமைச்சர் தரப்பு கோரிய இரண்டு வார காலஅவகாசத்தை வழங்கி, அடுத்த 23ம் திகதி குறிப்பிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here