பெண்கள் ‘அதை’ செய்யலாமா?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்! 25


கி.பரணி (36)
மாவிட்டபுரம்

மனித உடல் வாசனை பற்றிய உங்கள் தகவல்கள் படித்தேன். எனக்கும் இதேவிதமான பிரச்சனையுள்ளது. எனது மனைவி அடிக்கடி என்னுடன் முரண்படுவார். எனது உடலில் துர்நாற்றம் வருவதாக சொல்வார். மனைவியின் தொடர் அப்பிராயமோ என்னவோ, எனது ஆண்குறியிலிருந்தும் துர்நாற்றம் வருவதைப் போல எனக்கு தோன்றுகிறது. பொதுவாக இந்த துர்நாற்ற பிரச்சனைக்கு என்ன செய்யலாம்?

டாக்டர் ஞானப்பழம்: நறுமணம், செக்ஸோடு நெருங்கிய தொடர்புடையது. நம் கலாச்சாரத்தில் பெண்கள் மல்லிகையைச் சூடிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதைக் கவனிக்கலாம். அது பெண்களுக்கான அலங்காரப் பொருள் மட்டும் அல்ல, ஆண்களை ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கிறது.

செக்ஸில் நறுமணத்தின் பங்கைப் பற்றி கடந்தவாரங்களில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இதேவிடயத்தில் மேலும் மேலும் கேள்விகள் வந்து கொண்டிருப்பதால், இன்னும் கொஞ்சம் விரிவாக குறிப்பிடுகிறேன்.

ஆண்கள் தங்கள் வாய் துர்நாற்றத்தைத் தவிர்ப்பது தாம்பத்தியத்தில் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும். சிகரெட் நாற்றம் பெரும்பாலான பெண்களுக்குப் பிடிப்பது இல்லை. பிடித்தமான நறுமணப் பொருட்களைப் பயன்படுத்துவது நெருக்கத்தை அதிகரிக்கும்.

அதேபோல, ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் ஆண் உறுப்பின் உட்புறத் தோல் பகுதியில் மெழுகு போன்ற படிவு உருவாகும். தினமும், குளிக்கும்போது, அதை நன்கு கழுவ வேண்டும். அப்படி கழுவவில்லை என்றால், அது துர்நாற்றத்தை உருவாக்குவதோடு, கிருமிகள் உருவாகவும் காரணமாகிவிடும்.

ஆண்கள், ஆணுறுப்பின் தோலைப் பின்னுக்குத் தள்ளி, அதில் படிந்திருக்கும் படிவுகளைக் குளிக்கும்போது தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.

ஆண், பெண் இருபாலரும் தங்கள் உள்ளாடைகளைத் தினமும் மாற்றிவிட வேண்டும். உள்ளாடைகள் பருத்தியில் ஆனதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் வியர்வையை உறிஞ்சும். உள்ளாடைகளைத் தினமும் துவைத்து, சூரிய ஒளி படும்விதமாகக் காயவைக்க வேண்டும்.

காலைக் கடன் முடித்து, மலப்புழையைக் கழுவும்போது, முன்புறம் இருந்து பின்புறம் நோக்கிக் கழுவ வேண்டும். இதனால் மலப்புழையில் இருக்கும் கிருமிகள் இனப்பெருக்க உறுப்புக்குள் செல்லாமல் தவிர்க்கப்படும். குறிப்பாக இது பெண்களுக்கு மிகுந்த பலனளிக்கும். இதனால், பெண்களுக்குச் சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவு குறையும்.

நீங்கள் கேட்ட விடயத்தில், ஆண் உறுப்பில் வாசம் ஏற்படுவது பொதுவானதுதான். அது மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஏற்கெனவே சொன்னது போல, அந்தப் படிவம் ஆணுறுப்பின் தோலுக்கு அடியில் படிவதுதான் காரணம். இதை ‘ஸ்மெக்மா’ என்பர்.
அதேபோல், சிறுநீர் கழிந்தபிறகு, தங்கும் சில சொட்டுகள் நம் உள் ஆடையில் படியும். தினமும் உள்ளாடையை சோப்பினால் சுத்தம் செய்வதனாலும் ஆணுறுப்பின் தோல் உட்பகுதியை சோப்பினால் சுத்தம் செய்வதனாலும் கெட்ட வாடையைத் தவிர்க்கலாம். தொடை இடுக்குகளில் கசகசப்பினால் உருவாகும் அழுக்குகளையும் குளிக்கும்போது நன்கு சுத்தப்படுத்துவது அவசியம்.

குளித்த ஈரம் நன்றாகக் காய்ந்த பிறகே உள்ளாடைகளை அணிய வேண்டும். அதே போல உள்ளாடைகள் நன்கு காய்ந்தபிறகுதான் அணிய வேண்டும். ஈரமான உள்ளாடைகள் ஃபங்கஸ் தோன்றுவதற்குக் காரணமாகிவிடும். சிலருக்கு ஃபங்கஸ் காரணமாக படை, தேமல் ஏற்பட்டு, புண்கள் ஏற்படுவதாலும் கெட்ட நாற்றம் ஏற்படும்.

முறையற்ற உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு கொனோரியா உள்ளிட்ட பால்வினை நோய்கள் வர வாய்ப்பு உண்டு. இவை காரணமாக துர்நாற்றம் வரலாம். நல்ல மருத்துவரை அணுகி உடனடியாக அதற்கான வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும்.

சிலருடைய மூச்சுக்காற்றில் மனைவிமார் முகம் சுளிப்பதுண்டு.

‘கெட்ட சுவாசத்தை ‘ஹாலிடோசிஸ்’ என்பார்கள். அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. உணவுக் குழாயில் நோய்த் தொற்று, ஈறு வீக்கம், பல் சொத்தை, ஈரல் பாதிப்பு, சிகரெட் பழக்கம், நீரிழிவு, அஜீரணக் கோளாறு, மூக்கில் நோய்த் தொற்று, மூக்கில் சதை வளர்தல், சைனஸ் பாதிப்பு, மலச்சிக்கல் போன்ற பல காரணங்களால் சுவாசத்தில் நாற்றம் வரலாம். உரிய வைத்தியரை அணுகி மருத்துவம் பார்த்தால், இவை சரியாகும்.

இவை தவிர, சரியாகப் பல் துலக்காததும், உள்ளி வெங்காயம் அதிகம் சாப்பிடுவதும் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். சாப்பிடும் உணவு, வாய் சுத்தம் போன்றவற்றில் கவனம்கொண்டால், இவை சரியாகும். பொதுவாக, மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.

பெயர் குறிப்பிட விரும்பாத பெண்
மின்னஞ்சல்

அக்குள், பெண் உறுப்பில் இருக்கும் முடியை அகற்றுவது அவசியமா? சிலர் அதனால் கெடுதல் வருமென்கிறார்கள். சிலர் ஆபத்தில்லையென்கிறார்கள். எது சரி?

டாக்டர் ஞானப்பழம்: அது அவரவர் விருப்பம். பெண் உறுப்பைச் சுற்றியிருக்கும் முடி சுத்தமாக இருக்கும் பட்சத்தில், அதை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப் போனால், உடலுறவின்போது முடியானது க்ளிட்டோரியஸைத் தூண்டுவதற்கு உதவுகிறது. விந்துச் சுரப்பிகள் முடியில் படியும் வாய்ப்பு இருப்பதால், முடியைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். இல்லை எனில் பக்டீரியா படை எடுக்க வாய்ப்பு உண்டு.

சுத்தமாக வைத்திருக்க வாய்ப்பு இல்லாதவர்கள் முடியை அகற்றுவது பற்றியோ, ட்ரிம் செய்வது பற்றியோ யோசிக்கலாம். அக்குள் முடி, அதிகம் வியர்க்கும் இடத்தில் இருப்பதால், பக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதி. குளிக்கும்போது சுத்தம் செய்வதும், பவுடர் ஒத்தடம் கொடுப்பதும் அவசியம். ஸ்லீவ்லெஸ் பனியன், ஸ்லீவ்லெஸ் ஜக்கெட் அணிபவர்கள் அவசியம் அக்குள் முடியை அகற்றிவிட வேண்டும்.

கடந்த பாகத்தை படிக்க: பெண்ணுடல் வாடை தாம்பத்தியத்தை பாதிக்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here