திவச சாப்பாடு செரிமானமாக கோட்டைக்கு போன முன்னணி!

யாழ்ப்பாண கோட்டையில் இராணுவ முகாம் அமைப்பதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இன்று, கோட்டையில் இராணுவம் தங்குவதற்கு எதிராக போராட்டமொன்று நடந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கோட்டை இராணுவ முகாமிற்கு எதிரான வெகுஜன அபிப்பிராயம் பரவலாக ஏற்பட்டிருந்தபோதும், இன்றைய போராட்டத்திற்கு வெறும் இருபத்தைந்து பேரளவிலேயே கலந்து கொண்டனர். ஒரேயொரு மாகாணசபை உறுப்பினர்- பொ.ஐங்கரநேசன்- கலந்து கொண்டார்.

இன்றைய போராட்டம், உண்மையில் இராணுவத்திற்கு எதிரான, நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான- அர்ப்பணிப்பான போராட்டமாக ஒழுங்கமைக்கப்படவில்லை. முன்னணியால் செய்யப்பட்ட போராட்டங்களின் கணக்கில் ஒன்றை கூட்ட, அல்லது இப்படியான சம்பவங்களின் போது இயல்பாகவே அவர்கள் ஒருமுறை கூடி கலைவார்கள் என்ற “உயிரியல் வழக்கத்தின்படி“ நடந்த ஒன்றாகவோதான் இன்றைய போராட்டத்தை கருத வேண்டியுள்ளது.

காரணம், இன்றைய போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நேரம் மதியம் 2 மணி.

இந்த நேரத்தில் யார் போராட்டத்திற்கு வருவார்கள்?

போராட்டமென்ற பெயரில் முறையான ஒழுங்கமைப்பின்றி, நான்கைந்து பேரளவில் அங்கு சுலோக அட்டையுடன் நின்றுவிட்டு வருவதும், போராட்டங்களை மதிப்பிறக்கும் செயலே. இந்த போராட்டங்களின் வீரியத்தை குறைத்து, அதன் மீதான வெகுஜன அபிப்பிராயத்தை குறைக்க வைக்கும் செயல். முன்னணியின் கூட்டங்களை விட, நமது வெசாக் பந்தலிற்கு மக்கள் அதிகமாக வருவார்கள் என்ற இராணுவத்தளபதியின் எகத்தாள பேச்சுக்களிற்கும் வழியேற்படுத்தும்.

இன்றைய போராட்டத்தை, “சாப்பாட்டின்“ பின்னரான போராட்டமாக முன்னணி திட்டமிட்டதே அடிப்படையில் தவறானது.

பொருளியல் ஆசிரியர் வரதராஜன் மற்றும் மனைவியின் நினைவு நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. அவரது மகன் இப்பொழுது முன்னணியின் மாநகரசபை உறுப்பினர். ஆகவே, நினைவுநாளையும், மதிய பேசனத்தையும் முடித்து விட்டு, வீட்டுக்கு போவதற்கு முன்னர், கோட்டைக்கு போகலாமென முன்னணியினர் திட்டமிட்டே இன்றைய போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தவகையான ஏற்பாடுகள், நிலமீட்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி, நீர்த்து போகச்செய்துவிடும் அபாயமுள்ளவை. முறைப்படியான திட்டமிடலிருந்து முடியாதவர்கள், அவற்றை கையிலெடுக்காமல் விடுவதே சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here