நானும் கடத்தப்பட்டேன்: பார்வதி பகீர் தகவல்!

கடந்த ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் கடத்தப்பட்ட நடிகையின் நெருங்கிய தோழியும், பிரபல நடிகையுமான பார்வதி நானும் அதுபோன்ற சம்பவத்தில் சிக்கினேன் என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கடத்தப்பட்ட நடிகை எனது நெருங்கிய தோழி. அவர் கடத்தப்பட்ட செய்தி அறிந்து நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அவளுக்கு அப்போது யாரும் உதவ முன்வரவில்லை. இது எனக்கு இன்னும் அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் அதுபோன்ற ஒரு சம்பவம் (கடத்தல்) எனக்கும் நடந்தது. மலையாள சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் அதைச் செய்தார்கள். அவர்கள் யார் என்பதை இப்போது குறிப்பிட்டு அவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அவர்கள் கிரிமினல்கள். எதையும் செய்யத் துணிந்தவர்கள்.

அந்த சம்பவத்திற்காக நான் அழுது கொண்டு மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை.

அதைவிட்டு வெளியே வந்து விட்டேன். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பெண்கள் விழிப்புடனும், பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது இதைச் சொல்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் சினிமாவில் சர்வசாதாரணமாக நடக்கிறது. பெண்களை சினிமாவில் போக பொருளாகத்தான் பார்க்கிறார்கள். இவ்வாறு பார்வதி கூறியுள்ளார். இது மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here