‘மாலையில் மைனர்கள்… இரவானால் ரௌடிகள்’: யாழ்ப்பாண ரௌடிகளின் சாம்ராஜ்யத்திற்குள் ஒரு திகில் பயணம்!

“வீதியில் ஏதும் பிரச்சனையா?. கண்ணைமூடிக்கொண்டு விரைவாக கடந்து சென்றுவிட வேண்டும்“ இதுதான் பெரும்பாலான தமிழர்கள் உருவாக்கியுள்ள வாழ்வியல் நடைமுறை. இதை பின்பற்ற தவறினால் நிம்மதியாக இருக்க முடியாது. அதிகம் ஏன் உயிருடன் இருக்கலாமா என்பதும் தெரியாது என்பதை அதற்கு காரணமாக சொல்கிறார்கள்.

“வீதியில் ஒருவன் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறான். சரி ஏதோ பிரச்சனை போல என அவனுக்கு உதவிசெய்யலாம் என போனால்… உதவி செய்பவனையும் சேர்த்தல்லவா பிளந்து விட்டு போகிறார்கள்“ என்றார் எம்முடன் பேசிய சுன்னாகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்ஊழியர் ஒருவர். அதற்கு உதாரணமாக, அண்மையில் சுன்னாகத்தில் நடந்த சம்பவமொன்றை நினைவூட்டினார். கடையில் இருந்த ஒருவரை ரௌடிக்கும்பல் ஒன்று வெட்டியுள்ளது. அந்தபகுதியில் சிவில் உடையில் கண்காணிப்பு பணியில் இருந்த பொலிஸ்காரர்கள், கடைக்காரருக்கு உதவச்சென்றுள்ளனர். கடைகாரரை மட்டுமல்ல, உதவிக்கு சென்ற பொலிஸ்காரரையும் பிளந்துவிட்டு சென்றுவிட்டார்கள் ரௌடிகள்.

இதனால்தான் வீதியில், அயல்வீட்டில் என்ன பிரச்சனை என்றாலும் கண்ணை, வாயை, காதை பொத்தியிருக்க பழகிவிட்டார்கள் மக்கள். யுத்தகாலத்தில் துப்பாக்கிகளிற்கு பயந்து இப்படியான பழக்கத்தை கடைப்பிடித்த மக்கள், யுத்தத்திற்கு பின்னான காலத்தில் ரௌடிகளின் வாளுக்கு பயந்து இந்த பழக்கத்தை தொடர்கிறார்கள்.

யுத்தத்திற்கு பின்னர் விஸ்பரூபம் எடுத்துள்ள ரௌடி கலாசாரம் பற்றிய தமிழ்பக்கத்தின் அலசலே இந்தப்பகுதி.

யுத்தத்தின் பின்னர் மெதுமெதுவாக தலைதூக்கிய ரௌடிக்கலாசாரம் இன்று வடக்கின் எல்லா பகுதிகளிலும் அச்சம் தருமளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் பகிரங்கத்தில் நடக்கும் அநீதியை, தவறை சுட்டிக்காட்ட தயங்குகிறார்கள் பொதுமக்கள். தாங்கள் வீடு செல்வதற்கு முன்னர் ரௌடிகள் வாளுடன் வீடு வந்துவிடுகிறார்கள் என்கிறார்கள் அவர்கள்.

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் கொக்குவில், கோண்டாவில், இணுவில், சுன்னாகம் பகுதிகளில் மெல்லமெல்ல தலைதூக்கிய ரௌடிக்கலாசாரம் இன்று முழு வடக்கிலும் விஸ்பரூபம் எடுத்துள்ளது. வடக்கின் இயல்பு வாழ்க்கையையே சீர்குலைக்கும் அளவிற்கு ரௌடிக்கலாசாரம் உருவாகியுள்ளது.

வடக்கின் எல்லா இடங்களிலும் ரௌடிக்கலாசாரம் உருவாகிவிட்டதென்றாலும், யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில்தான் அதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. இன்றும் அதுதான் ரௌடிக்கோட்டையாக உள்ளது.

வாரத்திற்கு ஒன்றோ, இரண்டு வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாளாந்தம் ரௌடிகளை பொலிசார் வலைவீசி பிடிப்பதாக அறிவித்து கொண்டிருந்தாலும், வாள்வெட்டும், கொள்ளையும் இன்னும் நின்றபாடாக இல்லை.

யாழில் ஒருங்கிணைக்கப்பட்ட ரௌடிகளாக இயங்குவதற்கு முக்கிய காரணமானவர்கள் என பொலிசாரால் மூன்றுபேர் அடையாளமிடப்பட்டுள்ளனர். சன்னா, பிரகாஸ், தேவா ஆகிய மூவரே அவர்கள். இவர்களை பிடிக்க முடியவில்லை, தலைமறைவாக உள்ளனர் என பொலிசார் நீண்டகாலமாக கூறினார்கள். ரௌடிகும்பலின் பிரதான நபர்களை பிடிக்க முடியாமல் பொலிசார் காரணம் கூறிக்கொண்டிருப்பதுதான் மக்களிற்கு சந்தேகத்தையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.Image may contain: 1 person

இவர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு, அடுத்த நிலையிலுள்ளவர்கள் மூலமாக ரௌடிக்குழுக்களை வழிநடத்துவதாக பொலிசார் கூறுகின்றனர். வாள்வெட்டில் நேரடியாக ஈடுபடும் இரண்டாம் நிலை ரௌடிகள்தான் பொலிசாரிடம் இலகுவாக சிக்கியும் உள்ளர். தனஞ்செயன், விதுசன், தனுரொக், நிதுஷ், செந்தூரன் போன்றவர்கள் ரௌடிக்கும்பலை நேரடியாக வழிநடத்தியதாக பொலிசார் சொல்கின்றனர்.

ரௌடிக்கும்பலை பொலிசார் கைது செய்வதாக அறிவித்துக் கொண்டிருந்தாலும் வாள்வெட்டு குறைந்தபாடாக இல்லை. நல்லூரில் கடைக்குள் புகுந்து வெட்டியது, யாழ்நகரில் சாரதிய பயிற்சிநிலையத்திற்குள் புகுந்து வெட்டியது, அரியாலையில் பேரூந்தை தாக்கியது, முத்திரைச்சந்தையில் வாகனத்தை தாக்கியது என ரௌடிகளின் அட்டகாசம் முற்றுப்புள்ளியின்றி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

நல்லூரில் கடைக்கு தீவைத்து வாள்வெட்டில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிரிவி கமரா காட்சி வெளியாகியிருந்தது. நான்கைந்து ஒல்லிப்பிச்சான்கள் தம்மளவு வாள்களுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட பயங்கர காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. இதில் தொடர்புபட்டதாக ஐந்து பேர் வரையில் கைதானார்கள். ஏனையவர்கள் தப்பி பதுங்கிக் கொண்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தப்பியோடி கொழும்பில் பதுங்கியிருந்த, ரௌடிக்குழுக்களுடன் தொடர்புபட்ட மூவரை கைதுசெய்ததாக பொலிசார் கடந்த வருடம் அறிவித்தனர். கொட்டாஞ்சேனையில் பதுங்கியிருந்த தனஞ்செயன், பாரத், இக்ராம் ஆகியவர்களே கைதாகியுள்ளனர். ரௌடிக்கும்பலின் முக்கியஸ்தர்கள் இவர்கள்தான் என்கிறார்கள் பொலிசார்.

இவர்கள் நீண்டகாலமாக கொழும்பில்தான் தங்கியிருந்துள்ளனர் என்கிறார்கள் பொலிசார். அப்படியானால் எப்படி யாழில் வாள்வெட்டில் ஈடுபட்டார்கள்?

பொலிசார் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் இவை. யாழ்ப்பாணத்தில் ஏதாவது வாள்வெட்டில் ஈடுபட வேண்டுமானால் காலையில் கொழும்பிலிருந்து புறப்படுவார்களாம். மாலையில் நாவற்குழியில் இறங்கி, நெருக்கமான சில நண்பர்களுடன் இணைந்து புது இடங்களிற்கு செல்வார்கள். சங்குப்பிட்டி பாலத்தில் அதிகமாக பொழுதை கழிப்பார்களாம். அல்லது பாழடைந்த வீடுகளில் தங்கியிருப்பார்கள். இரவானதும் காரியத்தை முடித்துவிட்டு, மீண்டும் பாழடைந்த இடங்களில் தங்கியிருந்துவிட்டு, காலையில் புகையிரதத்தில் புறப்பட்டு விடுவார்கள் என்கிறார்கள் பொலிசார்.

இப்படியான ரௌடிக்குழுக்களில் உள்ளவர்கள் 22 வயதிற்குட்பட்டவர்கள் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இவர்கள் எப்படி ரௌடியாகிறார்கள் என்ற அதிர்ச்சிக்கதையை ஒரு பொலிஸ் அதிகாரி விபரித்தார்.

“இவர்களில் பெரும்பாலானவர்கள் உயர்தர மாணவர்களாக இருக்கும்போதே குழுவாக இயங்கத் தொடங்குகிறார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றுதான் இதன் மையப்புள்ளி. அதிக வைத்தியர்கள், பொறியலாளர்கள் போன்ற கல்வியியலாளர்களை மட்டுமல்ல, ரௌடிகளையும் இந்தப்பாடசாலைதான் உருவாக்குகிறது. இந்த பாடசாலையின் உயர்தர, பழைய மாணவர்கள் குழுவாக சேர்ந்து செயற்படுகிறார்கள். பாடசாலை உணர்வு அதற்கு உந்துதலாக உள்ளது. இவர்களில் யாருக்காவது காதல் பிரச்சனை வரும். இவனில் விருப்பமில்லாமல் காதலி இருந்தால், காதலியை, அவளது வீட்டாரை மிரட்டுவது. அவள் வேறு யாரையாவது காதலித்தாள் அந்த பையனை வெட்டுவது, வீட்டாரோ, பெண்ணோ சம்மதிக்காவிட்டால் வீட்டில் புகுந்து அட்டகாசம் செய்வதென தமிழ் சினிமா பாணியில் செயற்படுகிறார்கள்.

காதலிக்காக கத்தி தூக்கி பழகியவர்கள், பின்னர் தனக்கோ, நண்பர்களுக்கோ சிறு பிரச்சனை என்றாலும் கண்ணை மூடிக்கொண்டு வெட்டுகிறார்கள். 20 வருடமாக பொலிஸ்சேவையில் இருக்கிறேன். இப்படியொரு கலாசாரத்தை எங்கும் கண்டதில்லை“ என விரக்தியுடன் பேசினார் அந்த சிங்கள அதிகாரி.

பொலிசாரின் தகவல்படி தற்போது யாழ் நகரம், மானிப்பாய், இணுவில், தாவடி, கொழும்புத்துறை பகுதிகளில் ரௌடிக்கும்பல்கள் செயற்படுகின்றன. இந்தப்பகுதிகளில் உள்ள கோவில்கள், ஆட்களில்லாத வீடுகள், வாசகசாலைகள், மதகுகளில் மாலை நேர மைனர்களாக கூடும் வாலிபர்கள், பொழுதுசாய தொடங்க ரௌடியாக உருமாறுகிறார்கள்.

அண்மையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கொக்குவிலிற்கு அண்மையில் உள்வீதியொன்றில் பயணித்திருக்கிறார். சிறிய ஒழுங்கைக்குள்ளால் நான்கைந்து வாகனங்களில் சீறிக்கொண்டு 20 வயது மதிக்கத்தக்க ஒல்லிப்பிச்சான்கள் (ரௌடிகளாம்) வந்துள்ளனர். அதில் ஒருவன் முதுகில் செருகியிருந்த ஆபத்தான ஆயுதமொன்றை உருவி வாகனத்திற்கு முன்பாக காண்பித்துவிட்டு சென்றிருக்கிறான். சிவனேயென வீதியில் சென்ற மக்கள் பிரதிநிதிக்கே இதுதான் நிலைமை என்றால், சாதாரண ஒருவரின் நிலைமை கற்பனை செய்துபாருங்கள்.

ஒவ்வொரு பகுதிகளிலும் ரௌடியாக அறியப்பட்டவர்களின் தகவலை திரட்டியபோது இன்னொரு அதிரவைக்கும் தகவல் கிடைத்தது. அறியப்பட்ட ரௌடிகள் யாருமே வீடுகளிற்கு செல்வதில்லை. பலர் வீடுகளிலிருந்து விரட்டிவிடப்பட்டவர்கள்தான். நண்பர்களுடன் தங்கியிருந்துகொண்டு கொள்ளை, வழிப்பறி, மிரட்டல் என வாழ்க்கையை ஓட்டுகின்றனர். இந்த சினிமா பாணி ரௌடிகளிற்கு காதலிகளும் நிச்சயம் உண்டு என்பது கூடுதல் தகவல்!

ரௌடிகள் விவகாரத்தில் பொலிசார் கறாரான நடவடிக்கைகள் எடுப்பதில்லையென்ற தமிழ் அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டை பொலிசார் மறுக்கிறார்கள். ரௌடிக்குழுக்களின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் இரவிரவாக கண்காணிப்பு, ரோந்து பணிகளை செய்து, மக்களிற்கு பாதுகாப்பை உறுதிசெய்ததாக கூறுகிறார்கள்.

“கடந்த வருடமளவில் தனது வீடிருக்கும் வீதியால் பொழுது சாய்ந்தாலே வர முடியாது. எழு மணிக்குள் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிவிடுவோம். நீதிபதி இளஞ்செழியன் கறாரான உத்தரவிட்டு, அதிரடிப்படையை களமிறக்கி, நிலைமையை மாற்றிவிட்டார். அவர்தான் ஓரளவு நிலைமையை மாற்றியவர்“ என்கிறார் இணுவிலில் உள்ள வர்த்தகர் ஒருவர்.

அந்தப்பகுதியில் உள்ள இன்னொருவர் சொன்னார்- “வீட்டில் சிசிரிவி கமரா பொருத்தியுள்ளது. இரவிரவாக வீதியில் மோட்டார்சைக்கிள்கள் முறுக்கிக்கொண்டு திரியும். காலையில் சிசிரிவி பதிவுகளை பார்த்தால், மோட்டார்சைக்கிளில் கொட்டன், வாள், கோடாலியுடன் திரிபவர்களின் காட்சிதான் அதிகமாக இருக்கும்“ என்றார். அந்த பதிவுகளை என்ன செய்வீர்கள் என கேட்டால், சிரித்துவிட்டு சொல்கிறார்- “தம்பி… எனக்கும் மனிசி, பிள்ளையென ஒரு குடும்பம் இருக்குது. நான்தான் குடும்பத்தை பார்க்க வேணும்“ என. ஆனால் ஒரு வருடத்தில் நிலைமையில் நிறைய மாற்றம் என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார்.

  • மோட்டார்சைக்கிள்களில் தலைக்கவசமும் இல்லாமல் கும்பலாக சுற்றித்திரிகிறார்கள் இந்த ரௌடிகள். இதில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், பாடசாலை மாணவர்களாகவும், 22 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர் என்பதே அதிர்ச்சியளிக்கும் தகவல். இவர்களை பார்த்தால் ரௌடிகள் என யாரும் சொல்ல மாட்டார்கள். கோயிலில் கற்பூரம் கொளுத்தி, “நானும் ரௌடிதான். சத்தியமாக நம்புங்கப்பா“ என அவர்கள் அழுது குழறினாலும் யாரும் நம்ப முடியாது. தனிமையில் அவர்களின் சட்டைகொலரை பிடித்தாலே, பயத்தில் ஒன்று, இரண்டு எல்லாம் முடித்துவிடக் கூடியவர்கள்தான் பெரும்பாலும் யாழ்ப்பாண ரௌடிகள். கும்பலாக, உயிராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களுடன் திரியும்போது துணிந்து குற்றம் செய்கிறார்கள்.

யாழ்ப்பாண ரௌடிகள் அனைவரையும் ஒரே அளவுகோலால் பார்க்க முடியாது என்றார் ஒரு பொலிஸ்அதிகாரி. குற்றவாளிகள் இரண்டுவகை. திட்டமிட்டு குற்றம் செய்பவர்கள். இவர்கள்தான் ஆபத்தானவர்கள். சந்தர்ப்பவசத்தால் குற்றம் செய்பவர்கள் இரண்டாம் வகை. இவர்களை நல்வழிப்படுத்தலாம். யாழ்ப்பாண ரௌடிகள் அனேகர் இரண்டாம் வகை. பொதுவாக ரௌடிகள் என அனைவரையும் ஒன்றாக சித்தரிக்கிறார்கள். திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடுபடும் ஆபத்தானவர்கள்தான் கொலை, பயங்கர கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள். இவர்கள் மிகக்குறைந்தளவானவர்கள். இரண்டாம்வகையானவர்கள்தான் காலப்போக்கில் அப்படி உருவாகிறார்கள் என்றார்.

சில இடங்களில் தொழில் போட்டியும் வாள்வெட்டிற்கு காரணம். வடமராட்சியின் சில இடங்களில் கள்ளமண் வர்த்தகம் நடக்கிறது. இந்த சட்டவிரோத வர்த்தகத்துடன் வாள்வெட்டு குழுக்களும் இணைந்துள்ளன.

பொதுஇடத்தில் தவறு செய்பவனைக்கூட தட்டிக் கேட்க முடியாத மோசமான சமூகத்தை இந்த வாள்வெட்டுக்குழுக்கள் ஏற்படுத்தியுள்ளன. இது சமூகத்தின் இருண்டகாலம் என்பதில் சந்தேகமேயில்லை. சக மனிதனிற்காக இரங்க முடியாத காலத்தை வேறு எப்படி சொல்வது?

இந்த இருண்டகாலத்தை வன்முறைக் கும்பல்களான நமது இளைஞர்கள்தான் ஏற்படுத்தியுள்ளனர். இதை வேருடன் களைய வேண்டும். சட்டமும், நீதியும் அவர்களை இன்னும் மூர்க்கமாக கிடுக்குப்பிடி பிடிக்க வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பு.

…………………………………………………………………………………………….

‘ரௌடி’டேட்டா

  • வாள்வெட்டில் ஈடுபடும் இளைஞர்கள் பலர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
  • சொந்தமாக மோட்டார்சைக்கிள், செலவிற்கு வீட்டிலிருந்து பணம் கிடைக்கிறது.
  • இவர்களில் பலரது பெற்றோர் உயர் பதவி வகிப்பவர்கள்.
  • பாடசாலை பிரச்சனை, காதல் பிரச்சனை, இளைஞர் குழுக்களிற்குள்ளான ஹீரோயிசம் என்பனதான் இவர்களின் முக்கிய பிரச்சனைகள்.
  • மற்றவர்கள் பார்த்து பயப்பிடுபவர்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் என நினைக்கிறார்கள்.
  • வைபர் குழுமங்களில் தொடர்பை பேணுகிறார்கள்.

 

 

 

 

ரௌடிகளிற்கு பெயர் வந்த கதை

வாள்வெட்டில் ஈடுபடும் ரௌடிகள் கைதாகும்போது, அவர்கள் குழுவாக இயங்கினார்கள் என ஒவ்வொரு குழுவின் பெயரை பொலிசார் வெளியிடுவது வழக்கம். இதில் ஆவா குழுதான் பிரபலம். இலங்கையை தாண்டி அகில உலகத்திரும் பெயர் சொல்பவர்களாக அந்த குழு விஸ்பரூபம் எடுத்ததில் அவர்களிற்கு மிகப்பெருமையாக இருக்கலாம். இந்த ரௌடிகளிற்கு ஆவா குழு என பெயர் வந்தது எப்படியென்ற கதையொன்று உள்ளது.

சில வருடங்களின் முன்னர் சில இளைஞர்கள் சிலர் தியேட்டரிற்கு படம் பார்க்க சென்றுள்ளனர். அவர்களில் வினோதன் என்பவன் வாயை ஆ வென வைத்திருந்திருக்கிறான். அவன் வாயை அப்படியே வைத்திருந்ததால், அவனது நண்பர்களால் ஆ வாயன் என பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளான்.

பின்னர் வாள்வெட்டு, கொள்ளை சம்பவங்களில் தொடர்புபட்டு ஆ வாயனும், நண்பர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். ஆ வாயன் குழுதான் பின்னர் ஆவா குழுவாக மாறியது.

இன்னொரு ரௌடிக்கும்பல் பொலிசாரால் கைதாகினர். விசாரணையில் பொலிசார் அவர்களை முறையாக கவனித்துள்ளனர். அடி தாங்க முடியாமல் “மாத்தையா காண்ட எப்பா“ (அடிக்க வேண்டாம்) என சிங்களத்தில் குழறியுள்ளனர். பின்னர் மாத்தையா குறூப் என அவர்கள் மாறினர்!

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here