மாவையின் ஊரில் விடுவிக்கப்பட்ட காணிக்கு பதிலாகவே கோட்டையில் இராணுவ முகாம்: ரணில்- தமிழரசுக்கட்சி இணக்கப்பாடு வெளியானது!

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைக்கப்படுவதற்கு தமிழரசுக்கட்சி சம்மதம் வழங்கியது. அந்த சம்மதத்தின் பின்னரே, இராணுவம் அங்கு முகாம் அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பிரதமருடனான சந்திப்பின்போதே, தமிழரசுக்கட்சி இந்த சம்மதத்தை வழங்கியது.

பலாலி விமானநிலையம் தொடர்பாக வடக்கு முதலமைச்சர் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். இதற்கு ஏட்டிக்குப்போட்டியாக கடந்த யூன் 27ம் திகதி தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் கொழும்பிற்கு சென்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினர். தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனல்ட், வலி வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன்போது வடக்கின் 5 அரசாங்க அதிபர்கள், இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது வலி வடக்கு நகுலேஸ்வரத்தில் விடுவிக்கப்படாத 64 ஏக்கர் காணியை விடுவிக்க வேண்டுமென பிரதமரிடம் தமிழரசுக்கட்சி கோரிக்கை விடுத்தது. வடக்கில் இராணுவம் நடத்தும் பண்ணை, முன்பள்ளி குறித்தும் ஆட்சேபணை தெரிவித்தார்கள்.

இதன்போது, இராணுவ அதிகாரிகள்- “யாழ் கோட்டையில் முகாம் அமைக்க குறிப்பிடத்தக்களவான நிலம் வழங்கினால், தனியார் காணிகளில் உள்ள முகாம்களை விடுவிக்கலாம்“ என கூறியுள்ளனர்.

இதற்கு தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்போ, ஆட்சேபமோ தெரிவிக்கவில்லையென தெரிகிறது.

இதையடுத்தே யாழ் கோட்டைக்குள் இராணுவம் முகாம் அமைக்க 6 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 4ம் திகதி முதல் அங்கு முகாம் அமைக்கும் பணியை இராணுவம் ஆரம்பித்துள்ளது.

கோட்டைக்குள் இராணுவத்தை தங்க அனுமதிக்கும் முன்மொழிவை வடக்கு ஆளுனராக இருந்த சந்திரசிறி செய்தபோது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அது தொல்லியல் சின்னம் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டிருந்தது. தொல்லியல் சட்டங்களின்படி அங்கு கிடங்கு தோண்டவோ, கட்டடங்கள் கட்டவோ அனுமதி கிடையாது. அதை அதிகாரிகளும் சுட்டிக்காட்டினர்.

எனினும், ரணில்- தமிழரசுக்கட்சி சந்திப்பின் பின்னர் தொல்லியல் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் இராணுவ முகாம் அமைக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளன. தமிழரசுக்கட்சி- ரணிலுக்கிடையிலான சந்திப்பில் கோட்டையை இராணுவ முகாமாக்கும் முடிவு எடுக்கப்பட்ட போதும், அது குறித்த எந்த எதிர்ப்பையும் தமிழரசுக்கட்சியினர் செய்திருக்கவில்லை.

மாவை சேனாதிராசாவின் தேர்தல் தொகுதியில் 64 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதற்காக, அதற்கு பதிலாக யாழ் நகர மத்தியில் இன்னொரு காணியை எடுத்துக்கொள்ளுங்கள் என்ற மோசமான டீலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

ரணில்- தமிழரசுக்கட்சி சந்திப்பிலேயே கோட்டையை இராணுவ முகாமாக்கும் முடிவு எட்டப்பட்டதென்பதை யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் உறுதிசெய்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here