போனஸ் ஆசனம் வினோவிற்கு… இளைஞர் அணி: இன்று ரெலோ எடுத்த முடிவுகள்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கம் -ரெலோ- பொதுக்குழு கூட்டத்தில் பரவலாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெலோவின் பொதுக்குழு கூட்டம் இன்று வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. ரெலோ தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ரெலோவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறிகாந்தா, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட ரெலோவின் முக்கியஸ்தர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கலந்து கொண்டிருந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க ரெலோ கட்சியின் தலைமை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

எனினும், இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கட்சியின் புனரமைப்பு பணிகள், யாப்பு சீர்திருத்தங்கள் பற்றி ஆராயப்பட்டது. இதன்படி தலைமைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 21 இல் இருந்து 25 ஆக உயர்த்துவதென தீர்மானிக்கப்பட்டது. அரசியல் உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கையை 9 இல் இருந்து 11 ஆக உயர்த்துவதென தீர்மானிக்கப்பட்டது.

யாழில் ரெலோ அலுவலகமொன்றை உடனடியாக திறப்பதென்றும் முடிவானது.

வடக்கு, கிழக்கை உள்ளடக்கிய இளைஞர் அணி தலைவர் ஒருவரை தேர்வுசெய்து, இளைஞரணியை உருவாக்குவது, மாவட்ட அமைப்பாளர்களின் கீழ் மாவட்ட ரீதியில் இளைஞரணிகளையும், மகளிர் அணிகளையும் உருவாக்குவதென இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here