“தமிழுக்காக நாம் தமிழராய் நாம்”: தமிழை முதன்மைப்படுத்த கிழக்கில் விசேட செயற்திட்டம்!

பண்டைத் தமிழ் பண்பாட்டுப் பிரதேசமான, கிழக்கு மண்ணில் தமிழ் மொழியைப் அதனை பாதுகாப்பதனூடாக, தமிழர்களின் இருப்பையும், இன அடையாளத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் “தமிழுக்காக நாம் தமிழராய் நாம்” என்னும் விசேட செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது.

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் , அந்த இனத்தின் மொழியை அழித்து விடுங்கள். இனம் தானாக அழிந்துவிடும். என்று சொல்வார்கள் . அந்த வகையில் 2009 ற்கு பின்னர் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் ஒரு புறம் நடக்க, மறுபுறம் தமிழ் மொழியை அழிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கிழக்கை பொறுத்தமட்டில் தமிழன் என்று சொல்வதும் தமிழ் மொழியை முதன்மைப் படுத்துவதும் இனவாதமாக சித்திரிக்கப்படுகிறது. அதனை எமது தமிழர்களும் சிலர் ஏனையவார்களுடன் இணைந்து செய்கிறார்கள். மாற்று சமூகங்களை திருப்திப்படுத்த தமிழன் என்ற அடையாளத்தையே கைவிட தயாராக இருக்கின்றார்கள்.

இலங்கையின் அரச கரும மொழியாக இரண்டு மொழிகளே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை சிங்கள, தமிழ் மொழிகளாகும். ஆனால் கிழக்கில் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களே அதிமாக வாழ்கின்றனர். தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி, அதனை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களையும் கடந்த காலங்களில் பெரியளவில் நாம் முன்னெடுக்க தவறியுள்ளதாக உணருகிறேன்.

எனவே தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி அதனை கிழக்கு மாகாணம் பூராவும் நடைமுறைப்படுத்தும் வகையில் “தமிழுக்காக நாம் தமிழராய் நாம்” என்ற வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிக்க உள்ளோம். இதன் ஊடாக
கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் –

1.கிராமங்கள் தோறும் பகுதி நேர தமிழ்ப் பள்ளிகள் நிறுவுதல்

2. பொதுக்கட்டிடங்களுக்கு தமிழ் பெயர்களைச் சூட்டுதல்.

3. வீதிகளின் பெயர்களை தமிழில் வைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல்.(பெயர் சூட்டப்படாத வீதிகள்)

4. வியாபார நிலைய விளம்பரப் பலகைகளில் தமிழ் மொழியை முதன்மைப்படுத்தல்.

5. தமிழ் பெரியார்களின் உருவச் சிலைகளை நிறுவுதல்.

6. தினமும் பாடசாலைகளை தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பித்தல்.

7. உயர் கல்வி நிறுவனங்களில் (பல்கலைக்கழகம், கல்வியியற் கல்லூரி…….) பெயர் சூட்டப்படாத கட்டிடங்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல்.

8. பொது இடங்களில், தமிழ் மொழியில், மனித விழுமியத்தை வளர்க்கக்கூடிய வாசகங்களை காட்சிப்படுத்தல்.

9. தமிழர்களுக்கே உரித்தான தனித்துவமான கலை, இலக்கிய, பண்பாட்டம்சங்களை அழிந்துவிடாமல் பேணிப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல்.

10. கிழக்கில் அனைத்து அரச தனியார் துறைகளில் அரசகரும மொழியான தமிழை முதன்மொழியாகப் பயன்படுத்தல்.

11. பூங்காக்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள், வாசிகசாலைகள் போன்றவற்றிற்கு தமிழ் பெயர்களைச் சூட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்தல்.

12. தமிழ்க் கிராமங்களின் பெயர்களை மாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்தி தமிழ் பெயர்களைப் பேணிப்பாதுகாக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்தல்.

13. தமிழ் மொழி தொடர்பான அறிவாற்றலை சிறியோர் முதல் பெரியோர் வரை முறையாக கற்றுக்கொள்வதற்கான வேலைத்தி்ட்டங்களை ஆரம்பித்தல்.

போன்ற இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.

இதற்கான ஆரம்ப நிகழ்வானது எதிர்வரும் திங்கட்கிழமை 09.07.2018 அன்று செங்கலடி பிரதேச செயலக மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் நடாத்த தீர்மானித்துள்ளோம்.

மேற்படி நிகழ்வுக்கு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

எனவே தாய் தமிழ் மொழியை வளர்த்து தமிழினத்தை பாதுகாப்பதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் இளைஞர்கள்,யுவதிகள்,சமூக ஆர்வலர்கள்,என அனைவரையும் தமிழுக்காக நாம் தமிழராய் நாம் என்ற கோசத்துடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here