மட்டக்களப்பில் மோசடி செய்யப்பட்ட வாழ்வாதார திட்டம்: மீள்குடியேற்ற அமைச்சின் மௌனம் சம்மதமா?

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு மோசடிகளையும் தமிழ்பக்கம் கடந்த காலங்களில் அம்பலப்படுத்தி வந்தது. அவற்றில் முதன்மையானது – 2016 இல் மீள்குடியேற்றம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய விவகார அமைச்சினால், மட்டக்களப்பில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபா தொடர்பான விடயம்.

அந்த 100 மில்லியன் ரூபா முறையாக செலவிடப்படவில்லை, அதில் மோசடிகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது, முறையான விசாரணைகள் அவசியம் என்ற விடயத்தை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தோம்.

தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார திட்டம் வழங்கும் திட்டமிது. இந்த திட்டத்திற்கு ஒப்பந்தக்காரர்களை அடையாளம் காண, மாவட்ட செயலக கேள்விச்சபையால் 14.09.2016 மற்றும் 21.09.2016 இல் கேள்விப்பத்திரம் கோரப்பட்டது.

இதன்படி ஒரு கிலோ உயிர்மாட்டின் பெறுமதி 650 ரூபா என்ற அடிப்படையில் கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டது. செம்மண்ணோடை, வாழைச்சேனையை சேர்ந்த அப்துல் றகுமான் என்பவரே மாடுகளை வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டார். அமைச்சர் அமீர் அலிக்கு நெருக்கமானவர் அவர். மூன்று மாதத்தில் 404 பசு மாடுகளை வழங்க வேண்டுமென்பதே ஒப்பந்தம்.

இந்த கேள்விகோரில் அடிப்படை தவறொன்றிருந்ததை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தோம். பிரதேச செயலர்களிற்கு ஒரு கோடி ரூபா வரையான கேள்விகோரல் அதிகாரமுள்ளது. இந்த நிதியை பிரதேசசெயலகங்களிற்கு வழங்கி, அவர்கள் கேள்விகோரல் செய்திருந்தால், பயனாளிகளிற்கு உரிய விதத்தில் பலன் சென்றடைந்திருக்கும். ஆனால், அதற்கு அனுமதிக்காமல்- எல்லா பிரதேசசெயலக பிரிவிலும் தேவையான பொருட்களை மொத்தமாக சேர்த்து, மாவட்ட செயலகமே கேள்விகோரல் செய்தது.

இதை சற்று விளக்கமாக புரிய வைக்கிறோம். மாவட்டத்தில் 14 பிரதேசசெயலக பிரிவுகள் உள்ளன. 14 பிரதேச செயலக பிரிவிலும் 404 பேர் பசு மாட்டை கோரியிருந்தனர். உதாரணமாக ஒரு பிரிவில் 80 மாடுகளை கோரினார்கள் என வைத்தால், அந்த பிரதேசசெயலகத்தின் கேள்விகோரலை உள்ளூர் ஒப்பந்தக்காரர் ஒருவர் ஏற்க வாய்ப்புள்ளது. 80 பசு மாடுகளை ஒரே தடவையில் விற்கும் உள்ளூர் ஆட்களை பிடிக்கலாம். ஆனால், ஒரே தடவையில் 404 பசு மாடுகளை வழங்கும் ஒப்பந்தக்காரரை மாவட்டத்தில் பிடிப்பது சாத்தியமில்லை. இதுதான் இந்த கேள்விகோரலின் அடிப்படை தவறு.

இவ்வளவு தொகையான மாடுகளை உள்ளூரில் ஒரே தடவையில் பெற்றுக்கொள்வது சாத்தியமேயில்லை. வெளிநாட்டிலிருந்துதான் கொள்வனவு செய்யலாம். அது ஒப்பந்தத்தை வழங்கிய அதிகாரிகளிற்கு ஏன் புரியவில்லை? அல்லது, வேறு ஏதேனும் காரணங்களிற்காக உள்ளூர் ஒப்பந்தக்காரரிடம் வழங்கப்பட்டதா?

அதேவேளை, இப்படியான கேள்விகோரல்களின்போது, இலங்கை முழுவதும் நடைமுறையில் உள்ள வகையில் மாட்டின் உயிர்நிறை பெறுமதியை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தீர்மானித்துள்ளது. 01.01.2016ம் திகதிய சுற்றுநிருபம் இல 03/2016 இல் உள்ளவாறு, ஒரு கிலோ மாட்டின் உயிர் நிறை  250 ரூபா தொடக்கம் 350 ரூபா வரை. ஆனால் மட்டக்களப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது 650 ரூபாவிற்கு!

இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டும், இன்றுவரை பயனாளிகளிற்கு முழுமையாக மாடு கொடுக்கப்படவில்லை. எனினும், முழுமையாக பயனாளிகளிற்கு மாடு வழங்கப்பட்டதாக, அறிக்கை தயாரிக்கப்பட்டு மீள்குடியேற்ற அமைச்சிற்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந்த திட்டம் தோல்வியடைந்ததில், பல முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை அங்கு பட்டியலிடுகிறோம்.

1.கேள்வி கோரல்களை மேற்கொள்ளும் போது கொள்வனவு செய்யப்படவேண்டியுள்ள பொருளோ அல்லது உயிரினமோ பற்றிய பூரணமான விபரணங்கள் குறித்த துறை சார்ந்த நிபுணத்துவத்தினர் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட விபரண அறிக்கையின் பிற்பாடே அதற்கான கேள்வி கோரல்களை மேற்கொள்ள வேண்டும். இது தமிழ் பக்கத்தின் விசேட புலனாய்வு செய்தியாகும். அவ்வாறான செயற்பாடொன்று இடம்பெற்றதாக குறித்த வாழ்வாதார திட்டத்திற்கான கொள்வனவு நடைமுறையின்  எதுவும் பின்பற்றப்படவில்லை.

2.வாழ்வாதாரதிட்டத்தில் பெரும்பாலான குறைபாடுகள் கறவைப்பசுக்கள் கொள்வனவு தெரிவின் போதே இடப்பெற்றிருக்கின்றது

3.கறவை பசுக்களுக்கான கொள்வனவிற்காக கூட்டப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு குழுவில் கால்நடை வைத்தியத்துறையுடன் தொடர்புள்ள அதிகாரி ஒருவரும் உறுப்பினராக நியமிக்கப்படாது அறிக்கை பெறப்பட்டுள்ளது. முக்கியமாக மாவட்டப் பெறுகைக் குழு என்பதால் மாகாணப் பணிப்பாளரால் நியமிக்கப்பட்ட கால்நடை சுகாதார வைத்திய அதிகாரி ஒருவரும், மாவட்ட கால்நடை சுகாதார வைத்திய அதிகாரியும் தொழில்நுட்ப ஆய்வுக்குழுவில் பங்குபற்றியிருத்தல் அவசியம். எனினும் மாவட்ட தொழில்நுட்பக் குழுவில் கட்டுமானத்திற்குப் தகைமையுடைய பொறியியலாளர் இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்.

4.கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் இல DD/AP&H/BCO/Resettlement/2016 ஆம் இலக்க 14.09.2016 ஆம் திகதிய கடிதம் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய கறவைப்பசுக்களின் விபரங்கள் குறித்த திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளரினால் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அதில் கூறப்பட்ட நியமங்களுக்கு அமைவாக கொள்வனவுகளை மேற்கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அது பின்பற்றப்படவில்லை.

5.இருந்தும் இதனை கருத்திற்கொண்டதாவே மாவட்டச் செயலகத்தினால் கறவை பசுக்கள் கொள்வனவிற்கான கேள்விச்சபை கூடப்பட்டு இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு கொள்வனவிற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

6.கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளரின் DDD/AP&H/BATTI/KACH/2016 ஆம் இலக்க 20.06.2016 ஆம் திகதிய கடிதம் மூலமாக வாழ்வாதார திட்டத்திற்கு கால்நடைகளை விநியோகிக்க கூடிய பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களின் பெயர் விபரங்களுடன் தேசியபண்ணைவிலங்கு அபிவிருத்தி சபையின் மூலம் வெளியிடப்பட்ட இலக்க 03/2016 சுற்று நிருபமும் இருந்தும் அது கருத்தில் கொள்ளப்படவில்லை

7.2016ஆம் ஆண்டின் இரண்டாம் காலண்டுக்காக மாவட்டச் செயலகத்தினால் நிருணயிக்கப்பட்ட விலை பட்டியலுக்கமைய, உயிருள்ள கறவைப் பசுவின் நிறை கிலோ ஒன்றிற்கான விலையானது ரூபா160.00 என்ற வகையில் மாவட்டத்தினுள் கொள்வனவு செய்யமுடியுமென தீர்மானிக்கப்பட்டும் ரூபா 650 கிலோ கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

8.மாவட்டச் செயலகத்தின் மாவட்டச் செயலாளர் தலைமையில் மூன்று உறுப்பினர்களை கொண்டு 14.09.2016 ஆம் திகதி பிற்பகல் 4.25 மணிக்கு கூடி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள கேள்விச்சபை தீர்மானத்தில் பிரதானமாக நான்கு கறவைபசு விநியோகஸ்தர்களால் கேள்வி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு கேள்விகோரல் பத்திரங்கள் திறக்கப்பட்டு அவை உறுப்பினர் மத்தியில் ஆராயப்பட்டு இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர்களுக்கு கொள்வனவினை மேற்கொள்வதற்கான விநியோகஸ்தராக ஏ.எம்.அப்துல் றகுமான், செம்மண்ஓடை, வாழைச்சேனை எனும் முகவரியைக் கொண்டவரை தெரிவு செய்து கொள்வனவினை மேற்கொள்ளுமாறு மாவட்டதிட்டப் பணிப்பாளரின் BT/DPU/Resrttled/Livelihood/2016 ம் இலக்க 26.09.2016ஆம் திகதிய கடிதம் மூலம் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

9.கேள்விச்சபை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் படி ஒரு கிலோ உயிருள்ள கறவை பசுவிற்கான கொள்வனவு விலை ரூபா 650.00 என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டச் செயலாளரின் DPU/SLHAR/3/310 ம் இலக்க 22.09.2016ம் திகதிய கடிதம் மூலம் 130 கிலோ தொடக்கம் 160 கிலோ விற்கு இடைப்பட்ட நிறையினையுடைய கறவை பசுக்களை வினியோகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

10.தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் மூலம் பரீட்சிக்கப்பட்டு மாவட்டச் செயலாளருக்கு 08.09.2016ஆம் திகதியில் அனுப்பிவைக்கப்பட்ட உறுதிபடுத்தப்பட்ட அறிக்கையின் படி குறித்த கொள்வனவிற்கான இறுதி விநியோக காலப்பகுதியானது 16.11.2016ஆம் திகதியுடனான மூன்று மாதங்களுடன் காலாவதியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

i. மாவட்ட கேள்விச் சபையினால் பிரதிப்பணிப்பாளர் கால்நடை உற்பத்தி                சுகாதாரத் திணைக்களம் அவர்களினால் முன் வைக்கப்பட்ட நியமங்களுக்கு        அமைவாக கறவைபசு ஒன்றின் வாழ்வாதாரத்திற்காக வழங்க தகுதியான நிறை 200கிலோ தொடக்கம் 250 கிலோ வரையானதாக இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளாந்த பால் உற்பத்தி நான்கு லீற்றருக்கு குறையாததாக இருக்கவேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் தொழில்நுட்ப குழுவினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு கறவை பசுவிற்கான நிறையானது 140 கிலோவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதிப்பணிப்பாளர் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் அவர்களால் குறித்த 140 கிலோவினை உடைய பசுமாடுகள் பால் உற்பத்தி குறைவாக காணப்படுவதால் அவற்றினை வாழ்வாதாரத்திற்கு வழங்குவது பொருத்தமற்றவை என குறிப்பிட்டுள்ளார்.

ii. அத்துடன் பிரதி பணிப்பாளர் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் அவர்களின் மூலம் முன்மொழியப்பட்ட கறவை பசுக்களின் நிறை சம்பந்தப்பட்டாதாக மாவட்ட தொழில்நுட்ப குழுவின் தொழில் நுட்ப அறிக்கை பெறப்பட்டுள்ளதுடன் தொழில் நுட்ப அறிக்கை 08.09.2016 ம் திகதி பெறப்பட்டுள்ளதென்பதுடன் பிரதிப்பணிப்பாளரின் அறிக்கை 14.09.2016 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

iii. மேலும் பிரதிப்பணிப்பாளர் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் அவர்களினால் மாவட்டச் செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக பெரிய அளவினாலான கால்நடைகளை விநியோகிக்க கூடிய விநியோகஸ்தர்கள் தங்களிடம் பதிவுசெய்யப்படவில்லை எனவும் தங்களிடம் இதுவரை பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர்களினதும் பெயர் விபரங்களுடன் தேசியபண்ணை அபிவிருத்தி சபையினை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே விநியோகத்தர்கள் தெரிவு நடைபெற்றுள்ளது.

iv. தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர் தன்னிடம் உள்ள கறவைப் பசுக்களின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், அத்தொகைக்கு மேலதிகமான கறவைப் பசுக்களை விநியோகிப்பதற்கான பெறுதற் கட்டளை உரிய விநியோகஸ்தருக்கு மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

v. இவ்வாறான நிலையில் மாவட்டச் செயலகத்திற்கு கேள்வி விண்ணப்பங்களை அனுப்பியுள்ள வினியோகஸ்தர்கள் யாரும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்யப்படாதவர்கள்

vi. ஒப்பந்த வேலைகளை மாத்திரம் செய்யும் நிறுவனம் ஒன்றும் குறித்த கறவைப்பசு கொள்வனவு நடவடிக்கையில் கேள்வி மனுவினை சமர்ப்பித்தும் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், இந்த விடயம் அனைத்தும் மீள்குடியேற்ற அமைச்சிற்கு தெரியும்.  ஆனால் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகள், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வறுமையில் முன்னணியில் உள்ள மாவட்டமொன்றின் வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட 4 கோடி ரூபா பணம், செலவிடப்படாமல் அதிகாரிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள போதும், அதை மீள்குடியேற்ற அமைச்சு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?

இந்த அசமந்தம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள், பயனாளிகள் இது தொடர்பான முறைப்பாடுகளை மீள்குடியேற்ற அமைச்சிற்கும் அனுப்பிவைத்துள்ளார்கள். எனினும், அமைச்சு மிக மெத்தனமாக செயற்படுகிறது. இந்த மௌனம் கூட, ஊழல் மோசடியை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக அர்த்தப்படுத்தப்படலாம் அல்லவா?

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here