1995-ஆம் ஆண்டு ஜப்பான் நச்சு வாயு தாக்குதல் ; 7 பேருக்கு ஒரே நாளில் தூக்கு!

ஜப்பான் சுரங்கப்பாதை ஒன்றில் நச்சுவாயு தாக்குதல் நடத்தி, 13 பேரை கொன்று குவித்த சாமியார் உள்ளிட்ட 7 பேர் ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டனர்.

ஜப்பான் தலைநகர் தோக்கியோ சுரங்கப் பாதை ஒன்றில், 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி சரின் என்ற நச்சுவாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நச்சு வாயு, இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியில் நாஜிக்களால் உருவாக்கப்பட்ட ஆர்கனோ பொஸ்பரஸ் வகை நரம்பு வாயுவாகும்.

இந்த வாயு தாக்குதலுக்கு ஆளான அப்பாவி மக்கள் சில விநாடிகளில் வாந்தி எடுத்தனர். சிலருடைய கண்களில் பார்வை பறிபோனது. சிலர் பக்கவாதத்துக்கு ஆளாகினர். 13 பேர் உயிரிழந்தனர்.

பெரும்பாலும் குற்றச் சம்பவங்களே நடை பெறாத ஜப்பானில் இந்த நச்சு வாயு தாக்குதல் சம்பவம், ஒட்டு மொத்த நாட்டையே உலுக்கி எடுத்து விட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து பல இடங்களில் ஹைட்ரஜன் சயனைட் தாக்குதலுக்கு முயற்சிகள் நடந்து அவை முடியடிக்கப்பட்டன.

குறித்த சம்பவங்களில், அம்ஷின்ரிக்யோ என்ற மத வழிபாட்டுக் குழுவின் தலைவரான ஷோகோ அசஹாரா (63-வயது) சாமியாருக்கும் அவரது குழுவைச் சேர்ந்த 6 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு  தோக்கியோ  மாவட்ட நீதிமன்றம் 2004ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

இத்தீர்ப்பை உயர்நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உறுதி செய்தது. ஆனாலும் கைதான அனைவரும் மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கு பல்வேறு சட்டப்போராட்டங்கள் நடத்தினர். இவை அனைத்தும் கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தன.

குறித்த நிலையில் ஷோகாவும் மற்ற 6 பேரும் தோக்கியோ சிறையில் நேற்று ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here