மாட்டிறைச்சிக்காக அடித்துக் கொலை; குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்

ஜார்கண்ட் மாநிலத்தில் இறைச்சி வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 8 பேருக்கு மாலை அணிவித்து அவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ராம்கர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பஜார் டண்ட் பகுதியில் மேற்குவங்க பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்திய 30 பேர் கொண்ட கும்பல் வாகன ஓட்டுநரை வெளியே இழுத்துள்ளனர். அந்த நபர் ஹசாரிபக் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலிமுதீன் என தன்னைப் பற்றி கூறியுள்ளார்.

அவர் வாகனத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட அந்த கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியது. வாகனத்துக்கும் தீ வைத்தது. இதில் அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் சக மனிதர்களைக் கொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அடுத்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்தது. நாடுமுழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கில் 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து விரைவு நீதிமன்றம் மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அண்மையில் ரத்து செய்தது. மேலும் அவர்களுக்கு ஜாமீனும் வழங்கியது.

இந்நிலையில் 8 பேரும் ஹசாரிபாக்கில் உள்ள மத்திய சிவில் விமானபோக்குவரத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டிற்கு சென்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஜெயந்த் சின்ஹா, இனிப்பு வழங்கினார். பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த சம்பவம் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. ஆனால் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். அவர்களில் சிலர் மீதான குற்றச்சாட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவர்கள் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன். சட்டம் தனது கடமையை செய்யும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதேசமயம் அப்பாவிகள் விடுவிக்கப்பட வேண்டும்’’ எனக் கூறினார்.

குற்றவாளிகளை பாராட்டி, புகைப்படம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சருக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கூறுகையில் ‘‘மத்திய அமைச்சர் ஒருவரே, குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளது வெட்கக்கேடானது. இதை ஏற்க முடியாது. அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, முன்னாள் மத்திய அமைச்சரும், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருபவருமான யஷ்வ்ந்த் சின்ஹாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here