பெண்ணுடல் வாடை தாம்பத்தியத்தை பாதிக்குமா?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 24


பெண் (பெயர் குறிப்பிடவில்லை- 29 வயது)
கிளிநொச்சி

எங்களிற்கு திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன் என்னை விட்டு மெல்ல மெல்ல தள்ளிச் செல்வதாக தோன்றுகிறது. உடலுறவிலும் ஆர்வம் காட்டுவதில்லை. என் யோனியில் இருந்து கெட்ட வாடை வீசுவதாகச் சொல்கிறார். உடலுறவிற்கும், கணவன் மனைவி உறவுக்கும் உடல் வாசனை முக்கியமானதா?. நான் என்ன செய்வது?

டாக்டர் ஞானப்பழம்: ஆம். தம்பத்தியத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் மிக முக்கியமான விவகாரம் இது. உடலிலிருந்து கெட்ட வாடை வீசுவது நமக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு பல சமயங்களில் தர்மசங்கடத்தை உருவாக்கும். குறிப்பாக, நம் வாழ்வின் சரிபாதியாக அமையும் நம் வாழ்க்கைத் துணைக்கு. நம்முடைய இனப்பெருக்க உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது நம் இணையோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

நம் உடலானது, இயல்பாகவே தன்னைச் சுத்தம் செய்துகொள்ளும் தன்மை உடையது. பெண்ணுக்கு யோனியே சில திரவங்களைச் சுரக்கச் செய்து, அசுத்தங்களை வெளியேற்றி அதைக் குழைவுத்தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது. இந்தத் திரவமானது யோனியைச் சுத்தமாக வைத்திருக்க உதவுவதுடன், உடல் உறவின் போதும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆனால், இந்தத் திரவம் காற்றில் பட்டு வினையாற்றும்போதுதான் கெட்ட வாசத்தை உருவாக்கி விடுகிறது. கிருமிகள் உருவாவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. தினமும் குளிக்கும்போது, ஆணும் பெண்ணும் பாலுறுப்புகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விளக்கம்.

நம் உடலின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒவ்வொரு விதமான வீச்சங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் உண்மை. பெண் உறுப்பின் வீச்சம் சற்று அதிகமாகவே இருக்கும். இது, உங்கள் செக்ஸ் வாழ்க்கையையே பாதிக்கும்படி விட்டுவிடக் கூடாது. தினமும், குளிக்கும்போது மற்ற பகுதிகளுக்கு எடுத்துக்கொள்ளும் அக்கறையோடு இதையும் சுத்தப்படுத்துங்கள். இந்த வீச்சம் அதிகரிக்கும்போது, அந்தப் பகுதியில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு இன்ஃபெக்‌ஷனையும் உருவாக்கும். அத்தகைய தருணங்களில் வைத்தியரை அணுகுவது நல்லது.

நீங்கள் இதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. தினமும் நன்றாக குளித்து, உறுப்புக்களை சுத்தம் செய்து வந்தாலே, எல்லா பிரச்சனையும் தானாக தீரும்.

குளிக்கும்போது யோனியின் இதழ்கள், கிளிட்டோரியஸ் பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். யோனித்திறப்பு, சிறுநீர் வெளியேறும் துளைத்திறப்பு ஆகியவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும். சாதாரணக் குளியல் சோப்பே போதுமானது. வேறு வேதியல் பொருட்களை உறுப்புகளின் உள்ளே சுத்தப்படுத்தப் பயன்படுத்த தேவையிருப்பின், வைத்தியரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே செய்ய வேண்டும். சில வீரியமிக்க கெமிக்கல்கள், உறுப்புகளில் எரிச்சலையும் புண்களையும் ஏற்படுத்திவிடக்கூடும்.

ராஜமாணிக்கம் லக்ஷ்மன் (27 வயது)
கொட்டகலை

எனக்கு திருமணமாகி 2 வருடங்களாகிறது. இன்னும் குழந்தைப் பேறு கிட்டவில்லை. இதனால் குடும்பத்திற்குள் பிரச்சனைகள் பெரிதாகிக் கொண்டு செல்கிறது. மனைவி செய்யும் சின்ன விடயங்களும் பெரிய தவறாக எனக்கு தெரிகிறது. இந்த அணுகுமுறை தவறு என்பது எனக்கு புரிந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளில் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. குழந்தைப் பேறு கிடைக்க என்ன செய்யலாம்?

டாக்டர் ஞானப்பழம்: உங்கள் நீண்ட கடிதம் படித்தேன். அதில் இலைமறை காயாக இருக்கும் விடயம்- குழந்தைப் பேறின்மைக்கு மனைவிதான் காரணமென்பது. ஏதாவது பரிசோதனைகளில் அதை தெரிந்து கொண்டீர்களா அல்லது ஊகமா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை.

குழந்தைப் பேறின்மை என்றதும், குடும்பங்களிலும், கணவர்மாரும் உடனடியாக அது மனைவியின் குறைபாடு என்றுதான் நினைக்கிறார்கள். உண்மையில் அப்படியல்ல. இது இருவரில் யாரும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

திருமணம் செய்துகொண்ட பிறகு நல்லதோ, கெட்டதோ எந்த சந்தர்ப்பத்திலும் தன் துணையை விட்டுக்கொடுக்கக் கூடாது. குழந்தையின்மை என்பது பொதுவான பிரச்னை. அதில் இன்பமோ, துன்பமோ எது வந்தாலும் இருவருக்கும் பங்குண்டு. இதற்காக ஒருவரை மட்டுமே குறை சொல்வது, அதற்காக அவரைப் பழிவாங்குவது, அவமானப்படுத்துவது நல்லதல்ல.

பொதுவாக, குழந்தை இல்லாவிட்டால் “அதற்கு மனைவிதான் காரணம்“என்ற எண்ணம் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கிறது. இது தவறு. முதலில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். கணவனும் மனைவியும் மனம்விட்டுப் பேசினால்தான் குடும்பத்தில் பிரச்னை ஏற்படாது.

ஆண்களைப் பொறுத்தவரை, உயிரணுக்களின் உற்பத்தி நன்றாக இருக்க வேண்டும்; எத்தனை நாளைக்கு ஒரு முறை தாம்பத்யம் வைத்துக்கொள்கிறார்கள் என்பதும் முக்கியம். இவை தவிர, ஒரு பெண் கர்ப்பம் தரிக்க 20 மில்லியன் உயிரணுக்கள் தேவைப்படும். தாம்பத்யம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். உடலியக்கம் (Movement) சரியாக இருக்க வேண்டியதும் அவசியம். ஆண்களுக்கு, தாம்பத்யக் குறைபாடு ஏற்பட, விதைப்பையில் ஏற்படும் பாதிப்புகள் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. விதை சேதமடைந்திருந்தாலோ, காயம்பட்டிருந்தாலோ அது குழந்தைப்பேற்றைப் பாதிக்கும். சிலருக்கு பிறவிக்கோளாறு (Hypospadias) காரணமாக ஆணுறுப்பு வளைந்து இருந்தால் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியாது. அவர்களுக்கு விதை சற்றுக் கீழிறங்கி காணப்படும். இதன் காரணமாக உயிரணுக்கள் உற்பத்தியாகாது.

கன்னத்தில் ஏற்படும் புட்டம்மை காரணமாகவும், கொனோரியா போன்ற (Gonorrhea) பால்வினை நோய்கள் காரணமாகவும்கூட உயிரணுக்கள் உற்பத்தியாவதில் பிரச்னை ஏற்படும். முறையான சிகிச்சை பெற்றால் இவையெல்லாம் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். ஆனால், தகுதியான மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். பாலியல் மருத்துவத்தில் ஏராளமான போலிகள் ஊடுருவிவிட்டார்கள். அதனால் கவனம் தேவை.

அதிக வெப்பமுள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கு விதைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இறுக்கமான ஜீன்ஸ் பேன்ட் அணிவது, டெனிம் வகை ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு இளைஞர்கள் ஜீன்ஸ் அணிந்தபடியே தூங்குகிறார்கள். அது தவறு. இரவில் ஜீன்ஸ் அணியக் கூடாது. உறங்கும்போது உடைகள் தளர்வாக இருக்க வேண்டும். கொட்டன் ஆடைகள் அணியலாம். சாரம் நல்லது.

கடந்த பாகத்தை படிக்க: பெண்களின் சுய இன்பத்தால் என்ன பாதிப்பு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here