டெல்லியில் 11 பேர் தற்கொலை; பேய்கள், ஆவிகள் ஆராய்ச்சி விபரீதத்தில் முடிந்தது: போலீஸார் அதிர்ச்சித் தகவல்கள்

லலித் பாட்டியாவின் வீட்டில் 11 குழாய்கள் பதித்த கொத்தனாரிடம் இன்று போலீஸார் விசாரணை நடத்திய காட்சி

டெல்லியின் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதில், அந்தக் குடும்ப உறுப்பினர் லலித் பாட்டியா பேய், ஆவி, ஆன்மா குறித்து தீவிர ஆராய்ச்சியில் இருந்தார் என்றும், கடவுளை அடையும் அவரின் முயற்சியை அனைவரையும் தற்கொலை செய்ய வைத்துள்ளது என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

டெல்லியின் வடக்குப் பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு இறந்திருந்தனர்.

வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி (வயது 77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ் (வயது 50), லலித் பாட்டியா (45), மகள் பிரதிபா (வயது 57). பவனேஷ் மனைவி சவிதா (வயது 48), சவிதாவின் மகள் மீனு (வயது 23), நிதி (25), துருவ் (15), லலித் பாட்டியாவின் மனைவி டினா (42). இவரின் 15 வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33).

11 குழாய்கள்

இதில் உடற்கூறு ஆய்வு முடிந்த நிலையில், யாரும் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே கடவுளைச் சந்திப்பதற்காகத்தான் தற்கொலை செய்கிறோம், உடல் நிலையில்லாதது, ஆன்மா தான் நிலையானது என்ற டைரிக்குறிப்புகள் தற்கொலை செய்துகொண்டவர்கள் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டுக்குப் பக்கவாட்டில் யு வடிவத்தில் 7 பிளாஸ்டிக் குழாய்களும், 4 நேரான குழாய்களும் ஒரே இடத்தில் ஏன் பொருத்தப்பட்டிருந்தன என்பன உள்ளிட்ட  பல்வேறு கேள்விகள் போலீஸாருக்கு எழுந்தன. இந்நிலையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் குடும்பத்துக்கும் கீதா மா என்ற பெண் மந்திரவாதி ஒருவருக்கும் இடையே நல்ல தொடர்பு இருந்தது. போலீஸார் சந்தேகப்பட்டு விசாரணையை முடுக்கிவிட்டனர்.

5 நாற்காலிகள்

இதற்கிடையே லலித் வீட்டின் முன் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்ததில் 11 பேரும் தூக்குப்போடுவதற்காக அந்தக் குடும்பத்தில் உள்ள இரு பெண்கள் 5 நாற்காலிகளை எடுத்து வந்ததும், அந்தக் குடும்பத்தில் இருந்த சிறுவர்கள் இருவர் கையில் கயிறுடன் செல்வதும் பதிவாகி இருந்தது.

கொத்தனார், மந்திரவாதி

இதற்கிடையே லலித் பாட்டியாவின் வீட்டின் பக்கவாட்டுப் பகுதியில் 11 குழாய்கள் பதிக்கப்பட்டு இருப்பது குறித்து அந்த வீட்டுக்குக் குழாய் பதித்த கொத்தனாரிடம் போலீஸாரிடம் விசாரணை நடத்தினார்கள். ஆனால், அந்தக் கொத்தனார் தனக்கு ஏதும் தெரியாது, தன்னிடம் குழாய்களை பதிக்க லலித் பாட்டியா கூறினார் எனத் தெரிவித்தார்.

லலித் பாட்டியாவின் குடும்பத்தாருக்கு நெருக்கமானவராகக் கூறப்படும் கீதா மா எனும் பெண் மந்திரவாதியிடமும் நேற்று போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், தான் லலித் பாட்டியாவை இருமுறை மட்டுமே சந்தித்ததாகவும், மீண்டும் ஜூலை 10-ம் தேதி தன்னை சந்திப்பதாகவும் தெரிவித்தார் என்றும் கீதா மா போலீஸாரிடம் கூறினார்.

உறவினர்களிடம் விசாரணை

 மேலும், லலித் பாட்டியாவின் உறவினர்கள், நண்பர்கள் என இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், ஒவ்வொருவர் கூறும் தகவலும் போலீஸாரை மிகவும் குழப்பியுள்ளது.

ஆனால், பெரும்பாலும் லலித் பாட்டியா குடும்பத்தினர் நன்கு படித்தவர்கள், அவர்கள் இந்தத் தற்கொலையைச் செய்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்தனர்.

அதேசமயம், லலித் பாட்டியாவின் தந்தை கோபால் தாஸ் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பதால், வீட்டில் அனைவரையும் கட்டுக்கோப்பாக வளர்த்தார், பூஜைகள் செய்வது, சாப்பிடுவது, பேசுவது என அனைத்திலும் அனைவரும் மிகவும் ஒழுக்கமாக இருப்பார்கள் என போலீஸாரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை எண்ணமில்லை?

இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட 11 பேருக்கும் தற்கொலை செய்யும் எண்ணம் இருந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸார் கருதுகின்றனர்.

ஏனென்றால், வீட்டின் சமையல் அறையில், ஒரு பாத்திரத்தில் மறுநாள் உணவுக்காகப் பருப்பு ஊற வைக்கப்பட்டு, சப்பாத்திக்காக மாவு பிசைந்து வைக்கப்பட்டு இருந்தது. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அனைவருக்கும் இருந்திருந்தால், நாளை பற்றிய சிந்தனை இருந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸார் கருதுகின்றனர்.

மேலும், லலித் பாட்டியாவின் வீட்டில் கைப்பற்ற டைரியில் ஒரு குறிப்பு எழுதி இருந்தது. அதில் நாம் அனைவரும் தூக்குப்போடும் முன் ஒரு குவளையில் தண்ணீர் வைப்போம். அந்தத் தண்ணீர் நீலநிறமாக மாறிவிட்டால், நம்மை இறந்துபோன நமது தந்தையின் ஆத்மா காப்பாற்றும். இல்லாவிட்டால், தற்கொலை செய்து நாம் தந்தையின் ஆத்மாவோடு சேர்ந்துவிட வேண்டும் என எழுதப்பட்டு இருந்தது.

இதனால், லலித் பாட்டியாவின் வற்புறுத்தல், மூடநம்பிக்கையினால்தான் அனைவரும் வீட்டில் தற்கொலை செய்துள்ளனர். இந்த தற்கொலை திட்டம் கடந்த 2 மாதங்களாக நடந்திருக்கிறது என்பதைக் கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் அறிய முடிகிறது என போலீஸார் கூறுகின்றனர்.

லலித் பாட்டியாவும், அவரின் மனைவி டினுவும் கடந்த 23ம் தேதி முதல் 30-ம் தேதிவரை பல்வேறு பூஜைப் பொருட்களை கடைகளில் வாங்கியுள்ளதைக் கண்காணிப்பு காட்சி கேமராவிலும், போலீஸார் விசாரணையிலும் தெரியவந்துள்ளது.

பேய், ஆவி ஆராய்ச்சி

லலித் பாட்டியா குடும்பத்தினர்

 போலீஸாரின் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில், லலித் பாட்டியாவின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், ”லலித் பாட்டியாவின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் பேய்களுடன், ஆவிகளுடன் பேசுவது, அவர்களுடன் தொடர்பு கொள்வது எப்படி போன்ற வீடியோக்கள் அதிகம் இருந்தன. அது தொடர்பான விஷயங்கள், தகவல்கள் அதிகமாகத் தேடப்பட்டுள்ளன.

மேலும் ஆவிகளுடன் பேசுவது குறித்த புத்தகங்கள், பேய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் லலித் பாட்டியா ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த செல்போனில் தேடிய குறிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால், பேய்கள், ஆவிகள் குறித்த தீவிர ஆராய்ச்சியின் காரணமாகவும், மூடநம்பிக்கையினாலும் குடும்ப உறுப்பினர்களை தற்கொலைக்குத் தூண்டி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல், 11 பேரும் சாப்பிட்ட இரவு சாப்பாட்டில் ஏதேனும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த அறிக்கை இன்னும் 10 நாட்களில் வந்துவிடும். அந்த அறிக்கை கிடைத்தால், விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும்” என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here