ஒரு மீட்புதவியாளர் மரணம்: குகையில் சிக்கிய சிறாரை மீட்கும் பணி தீவிரம்

தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கியிருக்கும் 12 சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது தாய்லாந்தின் கடற்படையின் முன்னாள் முக்குளிப்பவர் ஒருவர் இறந்துள்ளார்.

பொருட்களை விநியேகித்துவிட்டு தாம் லுயாங் குகை வளாகத்தில் இருந்து வெளியே வருகின்றபோது, கீழ்நிலை அதிகாரியான சமன் குனன் சுயநினைவிழந்தார்.

“ஒக்ஸிஜன் விநியோகிப்பது அவருடைய வேலையாகும். திரும்பி வருகின்றபோது போதிய ஒக்ஸிஜன் அவரிடம் இருக்கவில்லை” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மீட்புதவியாளர்கள்

அவருடன் சென்ற சக முக்குளிப்பவர் மூலம் சமன் குனன் வெளியே கொண்டு வரப்பட்டாலும், அவரை உயிரோடு காப்பாற்ற முடியவில்லை.

கடற்படை பணியை விட்டுச் சென்ற சமன் குனன், இந்த மீட்புப் பணியில் உதவுவதற்காக திரும்பி வந்தார்.

வெள்ளப்பெருக்கின் காரணமாக தம் லுயாங் குகையில் சிக்கியோர் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான மீட்புதவி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஓட்டப் பந்தயத்திலும், மிதிவண்டி ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்டவராக கூறப்படும் சமன் குனன் ஈடுபட்டார்.

இந்த குகைக்குள் சென்று ஒக்ஸிஜன் போத்தல்களை அமைத்துவிட்டு திரும்பி வருகின்றபோது குனன் இறந்துவிட்டதாக தாய்லாந்து கடல்வழி பயங்கரவாத தடுப்பு பிரிவின் தளபதி அர்பாகோர்ன் யோகோங்கியேவ் தெரிவித்துள்ளார்.

மீட்புதவியாளர்கள்

“அவருடன் சென்ற சக முக்குளிப்பவர் முதலுதவி வழங்கினார். அதற்கு குனன் பதிலளிக்கவில்லை. எனவே அவரை 3வது சேம்பருக்கு கொண்டு வந்து இன்னொருமுறை முதலுதவி வழங்கினோம். அவர் மயங்கிய நிலையிலேயே இருந்தார். எனவே, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்” என்று அவர் தெரிவித்தார்.

“இருப்பினும், தேடுதல் நடவடிக்கை தொடரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அஞ்சப்போவதில்லை என்பதை உறுதியாக என்னால் கூற முடியும். எங்களது பணியை நிறுத்தப் போவதில்லை. எங்களுடைய நண்பரின் தியாகம் வீணாகப் போக விடமாட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த மீட்புதவிப் பணியில் கடற்படை முக்குளிப்போர், ராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட சுமார் 1,000 பேர் ஈடுபட்டுள்ளனர்.

குனனின் மரணம் மீட்புதவி முயற்சிகளுக்கு பின்னால் இருக்கின்ற ஆபத்துக்களை கோடிட்டுக் காட்டியுள்ளது.

மீட்புதவியாளர்கள்

“தங்களுடைய பணியை நிறைவேற்ற முடியும் என்று மீட்புதவி அணிக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது” என்று அர்பாகோர்ன் கூறியுள்ளார்.

அனுபவம் வாய்ந்த முக்குளிப்பவரோலேயே முடியாதபோது, இந்த மீட்புதவி நடவடிக்கையை எவ்வாறு பாதுகாப்பாக நிறைவேற்ற போகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, “11 முதல் 16 வயது வரையுள்ள சிறார்கள் மற்றும் 25 வயதான பயிற்சியாளரின் மீட்புதவியின்போது இன்னும் அதிக எச்சரிக்கையோடு செயல்படுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

அழுகின்ற பெண்
முக்குளிக்கும் முன்னாள் படையினர் ஒருவர் இறந்திருப்பதால் பலர் கவலை அடைந்துள்ளனர்.

கவலை தரும் ஒக்ஸிஜன் விநியோகம்

இந்த 12 சிறார்களும், அவர்களின் பயிற்சியாளரும் இருக்கின்ற இடத்திலுள்ள ஒக்ஸிஜன் அளவு குறைந்து வருவது பற்றிய கவலைகள் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தற்போது தெரிவிக்கின்றனர்.

இந்த குகைக்குள் அதிகமானோர் பணிபுரிந்து வருவதால் அங்கிருக்கும் ஒக்ஸிஜன் அளவு குறைந்து வருகிறது என்று சியாங் ராய் ஆளுநர் நரோங்சாக் ஒசோட்தானாகோன் கூறியுள்ளார்.

மீட்புதவியாளர்கள்

5 கிலோமீட்டர் நீள கேபிளை பயன்படுத்தி சிக்குண்டுள்ள குழுவினருக்கு ஒக்ஸிஜன் விநியோகிக்க அதிகாரிகள் இப்போது முயன்று வருகின்றனர்.

எஞ்சியிருப்பது குறைவான நேரமே

இந்த குகையில் நுழைந்த 9 நாட்களுக்கு பின்னர், கடந்த திங்கள்கிழமை பிரிட்டனின் 2 மீட்புதவியாளர்கள் 12 சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் சென்றடைந்தனர்.

குகையில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துவிட்டதால், இந்த 13 பேரும் அதற்குள் சிக்கிக்கொண்டனர்.

உடல் நலத்தோடு அவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு உணவும், மருத்துவ பராமரிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.

மீட்புதவியாளர்கள்

இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதற்கு அதிகாரிகள் இன்னும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சிறார்களின் பாதுகாப்பு தொடர்பாக எவ்வித ஆபத்தான முயற்சிகளையும் மேற்கொள்ள விரும்பவில்லை என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குகையிலுள்ள நீரின் மட்டத்தை குறைக்கும் நோக்கத்தோடு, மீட்புதவி நடைபெற்று வருகின்ற இந்த நாட்களில் நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீரின் மட்டம் குறையாவிட்டால், முக்குளிக்கும் கருவிகளை பயன்படுத்துவது எப்படி என்று இந்த சிறார்கள் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது மழைக்காலம் முடியும் வரை சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

தண்ணீர் வெளியேற்றம்

இந்த குகையிலுள்ள துளைகள் மற்றும் குன்றிலுள்ள நீரோடைகள் மூலம் சிக்குண்டுள்ளோர் தற்போது தங்கியிருக்கின்ற இடம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கிவிடும் வாய்ப்பும் உள்ளது.

“குகையில் சிக்குண்டுள்ள சிறார்கள் நீண்டகாலம் அவ்விடத்தில் தங்கியிருக்கலாம் என்று முதலில் எண்ணினோம். ஆனால், எல்லாம் மாறிவிட்டன. நமக்கு குறைவான நேரமே உள்ளது” என்று தளபதி அர்பாகோர்ன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here