ஞாபகம் வைத்திருந்து சூர்யாவுக்கு உதவிய காவல் ஆணையர்: தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தந்தார்

செயின்பறிப்பு திருடனை துணிச்சலாக விரட்டிப்பிடித்த சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சிறுவனுக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி அன்று இரவு அண்ணாநகர் ‘D’ பிளாக், 3வது தெருவில், கிளினிக் நடத்தி வரும் டாக்டர்.அமுதா(50) என்பவரிடம் சிகிச்சை பெறுவது போல் வந்த ஒரு நபர், டாக்டரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் அமுதா சத்தம் போட்டார்.

இதனால் குற்றவாளி தான் வந்திருந்த இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஓடும்போது அவ்வழியாக வந்த சிறுவன் சூர்யா(17) தனி நபராக சத்தமிட்டபடியே வெகுதூரம் விரட்டிச் சென்று குற்றவாளியை மடக்கிப் பிடித்தார். பின்னர் காவல்துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

10 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிய திருடனை விரட்டிச் சென்று பிடித்த சிறுவன் சூர்யா (எ) சூர்யகுமாரை, காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் கடந்த ஏப்.19-ம் தேதி அன்று நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார். அப்போது மேற்படி சூர்யா (எ) சூர்யகுமார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் தனக்கு ஏதாவது தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தரும்படி கோரிக்கை வைத்தார்.

அப்போது சூர்யா 17 வயது சிறுவன் என்பதால் எங்கும்வேலை வாங்கித்தரமுடியாது என்பதை உணர்ந்த காவல் ஆணையர் சிறுவன் சூர்யா 18 வயதை கடந்தவுடன் மறக்காமல் டிவிஎஸ் நிறுவனத்தில் சிபாரிசு செய்து ஏசி மெக்கானிக் வேலைக்கு ஏற்பாடு செய்தார்.

ஏசி மெக்கானிக்காக பணியில் இணைந்த சூர்யாவுக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை காவல் ஆணையர் மூலம் சிறுவன் சூர்யாவுக்கு வழங்க வேண்டும் என டிவிஎஸ் நிறுவன தரப்பினர் கேட்டுக்கொண்டதன் பேரில் சிறுவன் சூர்யாவையும் டிவிஎஸ் நிறுவன நிர்வாகிகளையும் தனது அலுவலகத்துக்கு அழைத்தார் காவல் ஆணையர்.

டிவிஎஸ் நிறுவன சீருடையுடன் வந்த இளைஞர் சூர்யாவுக்கு, காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் முன்னிலையில், சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவள மேம்பாட்டு துறை) சீனிவாசன் ஏசி மெக்கானிக்காக நியமிக்கப்பட்டதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

இது தவிர ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். மேலும் தனியார் கல்விக்குழுமம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியது.

சூர்யாவை பாராட்டும் வண்ணம் இந்நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளர் எம்.ஜெயராம், தெற்குமண்டல கூடுதல் ஆணையாளர் சாரங்கன், இணை ஆணையாளர் (மேற்கு) விஜயகுமாரி, அண்ணா நகர் துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காக்கி உடை, காலில் கருப்பு கலரில் ஷூ அணிந்து மிடுக்காக சற்றே வெட்கம் கலந்த புன்னகையுடன் பணி நியமன ஆணையைப் பெற வந்திருந்த சிறுவன் சூர்யா தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

“என்னை முதன் முதலில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி அழைத்துப் பக்கத்தில் அமர்த்திப் பாராட்டி ரிவார்டு வழங்கிய ஆணையர், ‘உனக்கு எதாவது உதவி வேண்டுமா?’ என்று கேட்டார். ‘அய்யா எனக்கு எங்காவது நல்ல வேலை வாங்கித் தாருங்கள்’ என்று நான் கேட்டேன். ‘உனக்கு என்ன வயது?’ என்று கேட்டார். ‘நான் 17 வயது நடக்கிறது. 18 வயது ஆகப்போகிறது’ என்றேன். சரி என்று சொல்லிவிட்டார்

ஆனால், அதன் பின்னர் அவர் மறந்திருப்பார் என்றுதான் நினைத்தேன். சரியாக ஞாபகம் வைத்து 18 வயதானவுடன் டிவிஎஸ் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக எனக்கு வேலை வாங்கித் தந்தார். பணிக்குச் சேர்ந்து தினமும் யூனிபார்ம் அணிந்து ஷூ போட்டு பணிக்குச் செல்கிறேன். என் குடும்பம் வறுமையில் வாடும் குடும்பம், பணிக்குச் செல்ல ரப்பர் செருப்புகூட இல்லாத நிலை.

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான் மற்றவர்கள் ஷூ அணிந்து நல்ல உடையுடன் வேலைக்குச் செல்வதை ஏக்கத்துடன் பார்ப்பேன். நாம் இப்படிப் போக முடியுமா? படிக்காத நாம் எங்கே அப்படிப் போக முடியும் என என்னை நானே தேற்றிக்கொள்வேன், ஆனால், காவல் ஆணையர் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டதன் மூலம் எனது கனவை நிறைவேற்றி வைத்துள்ளார்.

எனது குடும்பத்தின் பெரியவராக காவல் ஆணையரைப் பார்க்கிறேன். நான் செய்த செயலை உலகறியச் செய்து என்னைப் பாராட்டி வேலையும் வாங்கிக் கொடுத்த அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு இப்படிப்பட்ட உதவி செய்ததன் மூலம் இனி தவறுக்கு எதிராகப் போராடினால் நமக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் விதைத்துள்ளார்” என்று இளைஞர் சூர்யா நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here