ஜனா தரப்பின் விடாப்பிடியால் ரெலோவிற்குள் குழப்பம்: வெற்றிடமாக உள்ள செயலாளர், தவிசாளர் பதவிகள்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தற்போது செயலாளர், தவிசாளர் இல்லாமல் செயற்பட்டு வருகிறது. செயலாளராக பதவிவகித்த என்.சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் விலகிகச் சென்ற பின்னர் அந்த வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.

அந்த வெற்றிடத்தை நிரப்புவதில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

ரெலோவின் பொன் விழா கொண்டாட்டங்கள் இரண்டு தினங்களின் முன்னர் வவுனியாவில் நடந்தபோதும், அந்த வெற்றிடங்களை நிரப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், குழப்பங்கள் காரணமாக அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

ரெலோவில் தற்போதுஉள்ள மூத்த போராளிகளில் முக்கியமானவர் அம்பாறையை சேர்ந்த ஹென்ரி மகேந்திரன். அவரை பொதுச்செயலாளராக்கலாமென கட்சியிலுள்ள பலர் விரும்புகிறார்கள். அதேபோல, இன்னொரு நீண்டகால போராளியான விந்தன் கனகரட்ணத்தை தவிசாளராக்கலாமென்பதும் கட்சிக்குள் பொது அப்பிராயமாக உள்ளது.

எனினும், இதற்கு சிலர் முட்டுக்கட்டையிட்டு வருகிறார்கள். ஹென்ரி மகேந்திரனை செயலாளராக்க கூடாது என, இன்னொரு கிழக்கு மாகாண முக்கியஸ்தரான கோவிந்தம் கருணாகரன் (ஜனா) விடாப்பிடியாக நிற்கிறார். (இதில் சுவாரஸ்யமான விவகாரம்- ஹென்ரி மகேந்திரனிடமே ஜனா பயிற்சி பெற்றிருந்தார்.)

கட்சியின் பொன் விழா நிகழ்வு நடந்த அன்று காலையில் பொதுக்குழுவை கூட்டி, செயலாளர், தவிசாளர் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக காலை 11 மணியளவில் கூட்டம் நடத்த திட்ட திட்டமிடப்பட்டது. எனினும், ஜனா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஹென்ரி மகேந்திரனை செயலாளராக நியமித்தால், தான் கட்சியின் செயற்பாட்டிலிருந்து ஒதுங்கப் போவதாகவும் தெரிவித்தார். அவரது அழுத்தத்தினால், காலையில் நடக்கவிருந்த பொதுக்குழு கூட்டம் நடக்காமல் விட்டது.

கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் பின்னர், மீளவும் பொதுக்குழுவை கூட்ட ஆலோசித்தபோதும், மீளவும் ஜனா நெருக்கடி கொடுத்ததால், மாலையிலும் பொதுக்ழுவை கூட்ட முடியவில்லை.

இதேவேளை, கட்சியின் தவிசாளராக விந்தன் கனகரட்ணத்தை நியமிக்க கட்சியில் பெரும்பாலானவர்கள் விரும்பியிருந்தனர். எனினும், கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேன் அதை விரும்பவில்லை, அதற்கு முட்டுக்கட்டையிட்டு வருகிறார் என்ற அப்பிராயம் கட்சி பிரமுகர்களிடம் உள்ளது.

கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளரான விந்தனிற்கு முக்கிய பொறுப்பொன்று வழங்க வேண்டுமென கட்சிக்குள் பரவலான அப்பிராயம் இருந்தபோதும், அன்றைய தினம் அதுவும் நிறைவேறவில்லை.

தனி மனிதர்களின் இப்படியான நடவடிக்கைகளால் கட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், தனி மனிதர்களின் பிடியில் கட்சித் தலைவர் சிக்கியிருந்தால், கட்சியை எப்படி வழிநடத்தப் போகிறார் என்றும் கட்சி பிரமுகர்கள் சிலர் தமிழ் பக்கத்துடன் அதிருப்தியை பகிர்ந்து கொண்டனர்.

இரண்டு நியமனங்களை வழங்குவதற்கு கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆர்வமாக இருக்கின்றபோதும், தனிநபர் எதிர்ப்புக்கள் காரணமாக இழுபறியில் இருப்பதாக தெரிய வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here