சீனாவில் கொரோனா உயிரிழப்பு 1,800 ஐ நெருங்கியது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (16) 100 மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று பதிவான உயிரிழப்புக்கள் அனைத்தும், வைரஸ் தொற்றின் பிரதான புள்ளியான ஹூபே மாகாணத்தில் பதிவாகியது. அங்கு நேற்று 1,933 பேர் நோய்த் தொற்றிற்கு இலக்காகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹூபே மாகாணத்தில் மட்டும் இதுவரை 1,696 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,182 ஐ எட்டியுள்ளதாகவும் ஹூபே சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், இறப்புகளின் எண்ணிக்கை இப்போது 1,765 ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில் தொற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 70,433 ஆக பதிவாகியுள்ளது.

வைரஸ் பரவலை தடுக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிய பல கட்டுப்பாடுகள் மாகாணத்தில் அறிவிக்கப்பட்டன. வீதிகளில் எந்த தனியார் வாகனமும் இயக்க முடியாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா பரவல் காரணமாக ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்ஸ் சொகுசு  பயணக் கப்பலில் இருந்து தனது குடிமக்களை நேற்று அமெரிக்கா வெளியேற்றியது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாற்பது அமெரிக்க பிரஜைகள் சிகிச்சைக்காக ஜப்பானில் தங்கியிருப்பார்கள் என்று அமெரிக்க சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனாவினால் ஏற்பட்ட முதலாவது மரணத்தை தைவான் அறிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here