ரெலோ மாநாட்டிற்குள் புகுந்த இளைஞர்குழு ரௌடித்தனம்; பெரும் களேபரம்: ஒருவர் வைத்தியசாலையில்!

வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 50 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 50 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் கட்சியின் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது மண்டப வாயிலுக்கு வந்த சில இளைஞர்கள் ரெலோவின் கொடியை இறக்க முற்பட்டு, ரௌடித்தனத்தில் ஈடுபட்டனர். அவர்களை ரெலோ உறுப்பினர்கள் தடுக்க முற்பட, அங்கு தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது மேலும் சில இளைஞர்கள் அங்கு வந்து, ரெலோவின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் குகனின் படத்தை ஏன் முன்னுக்கு காட்சிப்படுத்தவில்லை, வவுனியாவிலுள்ள அரச தரப்பு அரசியல் பிரமுகர்களை ஏன் நிகழ்விற்கு அழைக்கவில்லை என தர்க்கம் விளைவித்தனர். அங்கு ரெலோ உறுப்பினர்களும் குழுமியதால் பதற்றம் ஏற்பட்டது.

அங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொலிசாரிற்கு அறிவித்து, நிலமையை கட்டுப்படுத்தினார். இதற்குள் ரௌடித்தனத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் தாக்கப்பட்ட ரெலோ உறுப்பினர் ஓருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ரெலோ தரப்பினரால் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சியொன்றின் பின்னணியில், வவுனியாவில் ரெலோவின் கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க இந்த முயற்சி மேற்கொண்டதாக ரெலோ தரப்பு குற்றம்சாட்டுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here