குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் 3வது நாளாக போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முஸ்லிம்கள் 3வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா லாலகுண்டா பகுதியில் கடந்த 14ந்தேதி முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சாலைமறியலில் ஈடுபட முயற்சித்த போராட்டக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, போலீசாரின் தடியடி சம்பவம் நடந்தது.

போலீசாரின் இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் 2வது நாளாக நேற்று முன்தினம் அதே பகுதியில் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்துக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து இருந்தனர். நேற்று முன்தினம் இரவு வரை நீடித்த போராட்டம், நேற்று விடிய விடிய நடந்தது.

3வது நாளாக நேற்று நீடித்த இந்த போராட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், அந்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

பெண்கள், குழந்தைகள் என பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அந்த தெருவில் போராட்டக்காரர்கள் அமர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், வாட்டர் பாட்டில், குளிர்பானங்கள், சாப்பாடு போராட்டக்காரர்களுக்கு அவ்வப்போது வழங்கப்படுகிறது.

நேற்று நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் தலைவர் சுப.உதயகுமார், நடிகர் மன்சூர்அலிகான் ஆகியோர் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை முன்வைத்தனர்.

இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களை, தடியடியை கண்டித்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளியிருக்கிறார்கள். இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதற்காக தொடர்ந்து போராடுவோம். பூர்வீக குடிகள் என்ற திமிரோடு போராடுவோம்’ என்றார்.

பத்திரிகை, ஊடகத்தினர்களை அடையாளம் காணும் வகையில் பிரத்தியேக அடையாள அட்டையையும் போராட்டக்காரர்கள் வழங்கி இருக்கின்றனர். போராட்டம் நடைபெறும் இடத்துக்குள் அதனை கழுத்தில் அணிந்து வந்தால் மட்டுமே புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு போராட்டக்காரர்கள் அனுமதிக்கின்றனர்.

நேற்று மாலையில் போராட்டக்காரர்களில் ஜமாத் கூட்டமைப்பு சேர்ந்த சில நிர்வாகிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இதுகுறித்து ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தமாட்டோம் என கேரளா, புதுச்சேரி அரசுகள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதுபோல், தமிழக அரசும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும்’ என்றனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் சில தகவல்கள் மூலம் முஸ்லிம்களின் உரிமைகள் பறிபோய்விடுமோ? என்கிற அச்சம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் அந்த நிலைவராது. ஏற்கனவே முதலமைச்சரை 23 முஸ்லிம் அமைப்புகள் சந்தித்தபோது இதுகுறித்து உறுதியாக தகவல் சொல்லி, சட்டமன்றத்திலும் தகவல் மக்களிடத்தில் அளிக்கப்பட்டது.

இருப்பினும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 6 ஷரத்துகள் நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதை முதலமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வோம். இந்த அரசை பொறுத்தவரையில், சிறுபான்மை மக்களின் உரிமைகளை காக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. நிச்சயமாக அரசு செய்யும் என்ற நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here