யாழில் களமிறங்குகிறார் வேதநாயகன்: மாவையை வெளியேற்ற சுமந்திரன் வைக்கும் ‘செக்’?


ஓய்வுபெற்ற யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவர் தமது அணியில் களமிறங்குவது உறுதியானது என்பதை தமிழ் அரசு கட்சியின் தென்மராட்சி பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் உறுதியாக தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குவார் என்பதை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையில், அந்த தகவலை சுமந்திரன் அணியும் உறுதி செய்துள்ளது. நா.வேதநாயகனை தேர்தலில் களமிறங்கும்படி எம்.ஏ.சுமந்திரன் நேரில் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதை வேதநாயகன் ஏற்றுக்கொண்டதாகவும் அந்த இளம் பிரமுகர் தெரிவித்தார்.

எனினும், இந்த விவகாரம் இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் யாருமறியாக இரகசியமாகவே உள்ளது. கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியின் ஏனைய பிரமுகர்கள், வேட்புமனு நியமன குழு என யாரும் இந்த விடயத்தை அறியவில்லை.

வேதநாயகனை களமிறக்குவது தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடாமல், எம்.ஏ.சுமந்திரன் தனிப்பட்டரீதியில் முடிவெடுத்திருந்தாலும், சில தகவல் மூலங்களின் வழியாக மாவை சேனாதிராசா இந்த தகவலை தெரிந்து கொண்டதை தமிழ்பக்கம் அறிந்தது.

நா.வேநாயகனை களமிறக்குவது தனக்கெதிராக சுமந்திரன் மேற்கொள்ளும் நகர்வு என மாவை தனக்கு நெருக்கமானவர்களுடன் மனம்விட்டு பேசியதாக, அவரது வட்டாரத்திலுள்ள பிரமுகர்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

அந்த வட்டாரங்களின் தகவல்படி, நாடாளுமன்ற தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறங்கக் கூடாது என சுமந்திரன் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, மாவை சேனாதிராசாவை தோற்கடிக்கும் இரகசிய முயற்சியில் சுமந்திரன் இறங்கியுள்ளதாக மாவை தரப்பினர் உணர்கிறார்கள்.

அதற்கு காரணமுள்ளது. இணுவிலை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் தேவராஜாவை தேர்தலில் களமிறங்கும்படி எம்.ஏ.சுமந்திரன் ஆரம்பத்தில் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும், அவர் தேர்தலில் களமிறங்க விரும்பவில்லை.

இதன் பின்னரே அளவெட்டியை சேர்ந்த நா.வேதநாயகன் களமிறக்கப்படுகிறார். தனது தொகுதி மற்றும் செல்வாக்குள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த முயல்வது, தன்னை தோற்கடிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியென மாவை சேனாதிராசா உணர்வதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here