உங்கள் சிறுநீரகம் பத்திரமா?: இலங்கையை அச்சுறுத்தும் புதிய அபாயம்!

©தமிழ்பக்கம்

இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள விடயம் எது?

இனமுரண், தென்னிலங்கையில் உருவாகும் இனவாதம் என்று பலர் சொல்வார்கள். வெளிப்படையாக தெரியும் இந்த ஆபத்து நாட்டிற்கு அச்சுறுத்தல் என்றால், இரகசியமாக உங்கள் ஒவ்வொருவர் வீட்டு கதவையும் தட்டி பேராபத்தாக உருவெடுத்து நிற்கிறது சிறுநீரக பாதிப்பு. ஆம். இலங்கை இன்று சந்திக்கும் மிகப்பெரிய உயிர்கொல்லும் அச்சுறுத்தல் சீறுநீரக பாதிப்பு. இலங்கையில் 10-15 வீதமானவர்கள் சிறுநீரகம் தொடர்பான ஏதோ ஒரு பிரச்சனைக்குள்ளாகியுள்ளார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள்.

இலங்கையின் வடமத்திய மாகாணத்தை கதிகலங்க வைத்த சிறுநீரக நோய் மெல்லமெல்ல நகர்ந்து வடக்கு, கிழக்கிற்குள்ளும் நுழைந்து விட்டது. ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளாவிட்டால் சிறுநீரக நோய்த் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாதென வைத்தியர்கள் வேறு எச்சரிக்கை மணியடிக்கிறார்கள்.

பொதுவாக 35 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் சிறுநீரக நோய்த் தாக்கத்திற்கு உள்ளாவார்கள் என்ற நிலை மாறி, இப்பொழுது சிறுவயதினரும் பாதிக்கப்பட தொடங்கி விட்டனர். சீறுநீரக பாதிப்பு எப்பொழுதாவது அரிதாக அறியும் செய்தியாக இருந்த நிலை மாறி, அன்றாட செய்தியாக மாறியதற்கு என்ன காரணம்?

உணவும், நீரும், சுற்றுச்சூழலும் நஞ்சானதுதான் இதற்கு காரணம். மனிதர்கள் விதைத்தை மனிதர்களே அறுக்கிறார்கள். குடிநீர், உணவு, விவசாய இரசாயனம், மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் என்று பல்வேறு விடயங்கள் காரணங்களாக அமைந்திருக்குமா என்று மருத்துவர்கள் சங்கம் ஆராய்ந்ததில், இரசாயன உரங்களிற்கும் சிறுநீரகநோய்க்குமான உறவு வெளிப்பட்டது.

உலகில் இலங்கையில்தான் விவசாய இரசானம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாடுகள் 10 – 12 என்ற அலகுகளில் விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்தும் போது இலங்கையில் 284 அலகுகள் என்ற அளவில் இரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டாவது இடத்தில் உள்ள பங்களாதேஷ் 164 அலகுகள் என்ற அளவில் உள்ளது. அந்நாட்டை விட இலங்கையின் பாவனை இரண்டு மடங்காக உள்ளது. 1960 – 1970 களில் இலங்கையில் விவசாய இரசாயனப் பாவனை தொடங்கியதன் பின்னர்தான் சிறுநீரக நோயாளர்கள் அதிகரித்துள்ளனர்.

விவசாயத்திற்குள் நுழைந்துள்ள அளவு கணக்கற்ற கிருமிநாசினி பயன்பாடு நமது சிறுநீரகத்தை சீரழிக்கும் இரகசிய தாக்குதலாளியாக உருமாறிவிட்டது. விவசாய உற்பத்தியில், பொதி செய்யப்பட்ட தானியங்களில் ஏற்படும் பூஞ்சணம் என சிறுநீரக தாக்கத்திற்கு பல காரணங்கள் உள்ளன. அதுதவிர, முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகள் பாவிப்பதும் சிறுநீரக நோய்க்கு இன்னொரு காரணம். நோவுக்கான மருந்துகள், இலகுவாக எல்லோர் கைகளிலும் தரளமாக பெறக்கூடிய பனடோல் போன்றவற்றை அதிகம் உள்ளெடுப்பவர்கள் வயது வேறுபாடின்றி சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

வடக்கில்- குறிப்பாக யாழ்குடாநாட்டில் சிறுநீரகநோய் அதிகரிப்பிற்கு நிலத்தடி நீர் மாசடைந்ததும் ஒரு காரணம். முறையற்ற பாவனையால் இயற்கையின் அருங்கொடையான யாழ்குடாநாட்டின் நிலத்தடி நீரை நச்சுநீராக மாற்றியதன் விளைவிது.

ராஜரட்ட பகுதியில் முதலில் கண்டறியப்பட்டமையால் ராஜரட்ட சிறுநீரகநோய் என்றும் இதற்கு பெயர் உண்டு. வடமத்திய மாகாணத்தில் தோன்றிய சிறுநீரகநோய் இன்று ஹம்பாந்தோட்டை வரை பரவிவிட்டது. தமிழர் பிரதேசத்திற்குள் நகர்ந்ததில் வவுனியா மிகமாசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகநோய் பாதிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டதில் முதலிடம் பொலன்னறுவைக்கு. இரண்டாமிடம் வவுனியாவிற்கு.

வடக்கில் சிறுநீரக நோய் சடுதியாக அதிகரித்து சென்றாலும், அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இரசாயன உரப்பாவனை பற்றிய அறிவூட்டல் ஏற்படுத்தப்படவில்லை. முறையான சிகிச்சை வசதிகளும் கிடையாது.
வடக்கில் வவுனியா, யாழ்ப்பாண அரசவைத்தியசாலைகளில்தான் இதற்கான சிகிச்சைகளை ஓரளவு பெற முடியும். கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்தெல்லாம் நீண்ட அலைக்கழிவில் பயணம் செய்ய வேண்டும். இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் பத்து யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ளது. ஒருவருக்கு இரத்தம் சுத்திகரிக்க நான்கு மணித்தியாலங்கள் ஆகிறது. இதனால் குறிப்பிட்ட தொகையானவர்களிற்கு மாத்திரமே சிகிச்சை வழங்க முடிவதாக வைத்தியர்கள் சொல்கிறார்கள்.

சிறுநீரகநோய் ஒரு இரகசிய தாக்குதலாளி. சிறுநீரகம் 90 வீதம் பழுதடையும் வரை வெளியில் அறிகுறிகள் தென்படுவதில்லை. நோய்த்தாக்கம் அதிகரித்து நோயாளியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது நோயின் பிந்திய நிலைக்கு சென்றிருப்பார். அதன் பின்னர் மருந்துகளால் அவரை சுகமடைய வைக்க முடியாது. சிறுநீரகத்தை மாற்றும் நிலைக்கும் செல்ல வேண்டி வரலாம்.

சிறுநீரக மாற்று ஏழைகளிற்கு சாத்தியப்படாத ஒன்றாகத்தான் இன்னும் உள்ளது. சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்காக சாதாரணமாக 12- 15 இலட்சங்கள் வரை செலவிட வேண்டியுள்ளது. கொழும்பு, கண்டி பகுதிகளிற்குத்தான் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். சிறுநீரகநோய் வந்ததன் பின்னர் அவதிப்படுவதைவிட, வருமுன் காப்பதே சிறந்தது என அறிவுரை கூறுகிறார்கள் வைத்தியர்கள். ஒவ்வொருவரும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது. சிறுநீர், குருதி பரிசோதிப்பதுடன், ஸ்கானிங் செய்தும் கண்டறியலாம்.

சிறுநீரக பாதிப்பு அதிகரிப்பிற்கு இன்னொரு காரணம்- அது வேறு நோய்களுடன் தொடர்புபட்டுள்ளதும். நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய் பாதிப்பிற்குள்ளானவர்களிற்கும் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. முறையான வாழ்க்கைமுறையை பேணுவதே சிறுநீரக பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரேவழி.

சிறுநீரக பாதிப்பிற்கு புகைத்தலும் ஒரு காரணம். புகை சிறுநீரகத்திற்கு பகை என்பதை புகைத்தல் மன்னர்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
சந்தையிலுள்ள போலியான மருந்துகளும் சீறுநீரக பிரச்சனைக்கு காரணம். மருந்துக்கடைகளில் அடிக்கடி சோதனைகள் நடத்துவதுடன், போலி மருந்து நாட்டுக்குள் நுழைவதை தடுப்பது அவசியமானது. யாழ்ப்பாண குடாநாட்டு நிலத்தடி நீர் தொடர்பான வெளிப்படையான, நிபுணத்துவ ஆய்வு செய்யப்படுவ அவசியம். நிலத்தடி நீர் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், முறையான ஆய்வுதான் எதிர்கால நடவடிக்கை பற்றி சிந்திக்க உதவும்.

எயிட்ஸ், கசம் போன்றவற்றை விட பேராபத்தானதாக சிறுநீரகப் பாதிப்பு உருவெடுத்துள்ளது. உணவு, நீர், சுற்றுச்சூழல் நஞ்சாகியதால் ஏற்பட்ட இந்த விபரீதத்திலிருந்து தப்ப, ஒவ்வொருவருக்கும் அதிக விழிப்பு தேவை.


வைத்தியர் சி.ஜமுனாநந்தா
பிரதிப் பணிப்பாளர்- யாழ் போதனா வைத்தியசாலை

பீடைநாசி, உரங்களால் தாவரங்கள் நச்சுத்தன்மை அடைவதாலும் அதனை உண்பதாலும் இப்பாதிப்பு ஏற்படுகின்றது. இது தவிர்ந்து நீரில் உள்ள ஆசனிக் போன்ற நச்சுப்பொருட்கள் சில பிரதேசங்களில் அதிகம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணமும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இளவயது, முதியவர்கள், சிறுவயதுப்பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பெரிய மருத்துவ பிரச்சனையாக இப்பொழுது உருவெடுத்துள்ளது. இதற்கான உண்மையான காரணம் கன்டறிப்படவில்லை. தற்போது எல்லோராலும் பாவிக்கப்படும் பனடோலை உட்கொள்ளும் போது விவசாய இராசயனப்பொருட்களுடன் தாக்கமுற்று சிறுநீரகநோயினை ஏற்படுத்துவதற்கான சாத்தியமுள்ளது. அமெரிக்காவின் ஆய்வில் இது நிருபணமாகியுள்ளது. இதை தடுக்க இராசாயன பதார்த்தங்கள் பாவிக்காத உணவுகளை உட்கொள்ளுதல், சீரான சுகாதார பழக்கங்கள், வைத்தியரின் ஆலோசனையின் அடிப்படையில் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


சிறுநீரகநோயால் பாதிக்கப்படுபவர்களில் பெண்களில் வேலைக்கு செல்பவர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், வேலைக்கு செல்லும் பெண்கள் சிறுநீர் கழிப்பது குறைவு. அலுவலகங்களில், வெளிக்களங்களில் முறையான மலசலகூட வசதியிருப்பதில்லை. இருந்தாலும், சுத்தமாக இருப்பதில்லை. இதனால் பெண்கள் அலுவலகத்தில் சிறுநீர் கழிப்பது குறைவு. காலையில் வீட்டிலிருந்து புறப்படும்போது சிறுநீர் கழித்து, மாலை வீடு திரும்பி சிறுநீர் கழிப்பவர்கள்தான் அதிகமானவர்கள். சிறுநீர் கழிக்கக்கூடாதென்பதற்காக பகலில் தண்ணீர் அருந்தாமலும் இருக்கிறார்கள்.

அதிகநேரம் சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேங்கி தொற்று ஏற்படுகிறது. அல்லது, சிறுநீரகம் இயங்க போதிய நீரின்றி பாதிக்கப்படுகிறது.

பெண்கள் சிறுவயதில் பாடசாலை, தனியார் கல்வி நிலையங்களிற்கு செல்லும்போதே சிறுநீரை அடக்கி பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அங்கு நிலவும் சுகாதாரகுறைபாடு பிரதான காரணமென்றால், வெட்கமும் இன்னொரு காரணம்.
சிறுநீரை அடக்கி வைத்திருக்ககூடாதென்பதை சிறுவயதிலிருந்தே பெண்பிள்ளைகளிற்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

பெண்கள் சிறுநீரை அடக்கி வைக்ககூடாதென்ற மருத்துவ ஆலோசனையெல்லாம் சரி, வடக்கு கிழக்கில் எத்தனை பொதுக்கழிப்பிடங்கள் உள்ளது? பண்டத்தரிப்பில் பேருந்தால் இறங்கி அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால், யாழ் நகர பொதுகழிப்பிடத்திற்கு பஸ் பிடித்து போய் வரவா முடியும்? எத்தனை பொதுக்கழிப்பிடங்களிற்குள் நுழைந்தால் உயிரோடு திரும்பலாம்? யாழ்- கொழும்பு பேரூந்து பயணத்தில் முறையான கழிப்பிட வசதியுள்ள இடங்களிலா பேரூந்துகள் நிறுத்தப்படுகிறது? என பெண்கள் பதில் கேள்வி கேட்டால் எம்மிடம் எந்தப் பதிலுமில்லை!


ஆரம்ப அறிகுறிகள்

சிறுநீர் கழிக்கும் நேர இடைவெளிகளில் மாற்றம், சிறுநீருடன் குருதி வெளியேறல் (சிறுநீர் சிவப்பு அல்லது தேயிலைச் சாய நிறத்திலோ வெளியேறுதல்), சிறுநீர் வெளியேறும் போது நுரைத்தல், சிறுநீரகத்தில் பிரச்சினை ஏற்படின் மேலதிக தண்ணீர் உடலின் மிருதுவான இழையங்களில் சென்று தேங்கும். இதனால் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள் (Peri Orbital Oedema & Facial Puffiness) கால்களில் வீக்கம் ஏற்படல், சடுதியாக நாரிப் பகுதியில் அல்லது நாரியிலிருந்து கீழ் புறமாக வலி தோன்றல், சிறுநீர் கழிக்கும் போது எரிவு ஏற்படல் (இது சிறுநீர்த் தொற்றாகவும் இருக்கலாம்).

வயதான ஆண்களிற்கு Prostatism என்ற பிரச்சினை ஏற்படுகிறது.

ஆண்கள் வயதாகும் போது சிறுநீர்ப்பையின் கீழ்ப்புறமாக உள்ள Prostate சுரப்பி வீக்கடைகிறது. இதனால் சிறுநீர்வழி சிறுத்து பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள்- சிறுநீர் கழிக்கும் போது வெளியேறும் வேகம் அல்லது வீச்சுக் குறைவடைந்து காலடியிலேயே விழுதல், சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற அடக்க முடியாத, திடீரென எற்படும் உணர்வு, சிறுநீர் கழிப்பதில் தாமதமும், சிரமமும் (முக்குதல்) இருத்தல், சிறுநீர் கழித்து முடிந்த பின்னரும் சில துளிகள் விழுதல் அத்துடன் பூரணமாகச் சிறுநீர் கழிக்கவில்லையே என்ற உணர்வு ஏற்படுதல். இப்படியான பிரச்சனைகள் உள்ளவர்கள் வைத்திய நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

சிறுநீரகம் செயலிழந்து கொண்டிருக்கும் போது குருதியில் கழிவுப் பொருள்கள் மற்றும் மேலதிக தண்ணீர் சேர்கிறது. இதனால் ஏற்படும் பிரச்சினைகள்- களைப்பு, கவனக்குறைவு, எப்போதும் உடல் நலமின்மை போன்ற உணர்வு, பசியின்மை, வாந்தி குமட்டல், சுவாசிப்பதில் சிரமம்.


60- வாராந்தம் யாழ்போதனா வைத்தியசாலையில் சுழற்சிமுறை சிகிச்சைக்கு வருபவர்கள்
120- வாரத்தில் இரண்டு தடவை இரண்டு தடவை இத்தம் சுத்திகரிக்கப்படுபவர்கள்
600- மாதாந்தம் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வருபவர்கள்
2,500- வருடாந்தம் இலங்கையில் நாள்ப்பட்ட பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சைக்கு வருபவர்கள்.


1993ம் ஆண்டு முதலாவது சிறுநீரக நோயாளி அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் அங்கு சிறுநீரகநோயாளிகள் எண்ணிக்கை 2.3 வீதமாக அதிகரித்தது. கடந்த 10 ஆண்டுகளில் அது 15.5 வீதமாக உயர்வடைந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here